ஜெயலலிதாவுக்கு ‘பாரத ரத்னா’ விருது, நாடாளுமன்ற வளாகத்தில் வெண்கல சிலை அமைக்க வேண்டும்

சென்னை, ஜன.12–
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு ‘பாரத ரத்னா’ விருது வழங்க வேண்டும். நாடாளுமன்ற வளாகத்தில் அவருக்கு வெண்கல சிலை அமைக்க வேண்டும் என்று மத்திய அரசை அண்ணா தி.மு.க. மாணவர் அணி வலியுறுத்தி உள்ளது.
அண்ணா தி.மு.க. அரசின் சாதனைகளை பட்டி தொட்டி எங்கும் பிரச்சாரம் செய்யவும், உள்ளாட்சி தேர்தலில் மகத்தான வெற்றி பெறவும் இரவு பகல் பாராது உழைக்க மாணவர் அணி சூளுரைத்துள்ளது.
கழக மாணவர் அணி நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் தலைமை கழகத்தில் நடந்தது.
கழக மாணவர் அணிச் செயலாளர் எஸ்.ஆர்.விஜயகுமார் தலைமை வகித்தார்.
துணைச் செயலாளர்கள் டாக்டர் சோலை இரா. கண்ணன், எம்.டி. பாபு, மதுரை புறநகர் மாவட்ட மாணவர் அணிச் செயலாளர் கே. மாணிக்கம் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தென்சென்னை தெற்கு மாவட்ட மாணவர் அணிச் செயலாளர் எம். ராமலிங்கம், தஞ்சாவூர் தெற்கு மாவட்ட மாணவர் அணிச் செயலாளர் ஆர். காந்தி ஆகியோர் வரவேற்றார்கள்.
கழக துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி. முனுசாமி, ஆர். வைத்திலிங்கம், எம்.பி., செய்தித் தொடர்பாளர் சி. பொன்னையன், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர் அ. தமிழ்மகன் உசேன், கழக அமைப்புச் செயலாளர் என். தளவாய்சுந்தரம், கழக இலக்கிய அணிச் செயலாளர் பா. வளர்மதி, அண்ணா தொழிற்சங்கப் பேரவைத் தலைவர் தாடி ம. ராசு, கழக அமைப்புச் செயலாளர் ஏ.கே. செல்வராஜ், எம்.பி., கழக அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணிச் செயலாளர் ஆர். கமலக்கண்ணன், தகவல் தொழில்நுட்பப் பிரிவுச் செயலாளர் சிங்கை ஜி. ராமச்சந்திரன் ஆகியோர் பேசினார்கள்.
தென்சென்னை வடக்கு மாவட்ட மாணவர் அணிச் செயலாளர் ஆர்.ஏ.எஸ். செந்தில்வேல் நன்றி கூறினார்.
கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
உலக தமிழர்களின் இதயத்தில் நிறைந்திருக்கும் புரட்சித் தலைவி அம்மாவின் திருவுருவப் படத்தை தமிழக சட்டப் பேரவையில் வைப்பதற்கும், தமிழகத்தை காத்து வழி நடத்திட இப்பூவுலகில் அவதரித்த புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் வழிகாட்டுதலோடு பொதுவாழ்வுக்கு வந்து ஏழை, எளிய மக்களுக்காகவும், சமூகத்தில் நலிந்த பிரிவினருக்காகவும் தொண்டு செய்வதில் எம்.ஜி.ஆரின் கொள்கைகளை உறுதியாக ஏற்று, தன் வாழ்நாள் முழுவதும் மக்களுக்காகவே அர்ப்பணித்து வாழ்ந்த மாணவ சமுதாயத்தின் அட்சய பாத்திரம், புரட்சித் தலைவி அம்மாவுக்கு இந்திய அரசின் மிக உயரிய விருதான ‘‘பாரத ரத்னா” விருது மத்திய அரசு வழங்கப்படவும், தமிழகத்தின் ஜீவாதார உரிமைகளை தொடர் சட்டப் போராட்டம் நடத்தி பெற்றுக் கொடுத்த புரட்சித் தலைவி அம்மாவுக்கு நாடாளுமன்ற வளாகத்தில் முழு திருவுருவ வெண்கல சிலை அமைப்பதற்கு தமிழக மக்களின் நலனே தன் நலன் என்று வாழ்ந்து, மறைந்து இருக்கின்ற புரட்சித் தலைவி அம்மாவை உலகம் போற்றி வணங்குகின்ற வகையில் கழக ஒருங்கிணைப்பாளர் துணை முதலமைச்சர் மற்றும் கழக இணை ஒருங்கிணைப்பாளர் முதலமைச்சர் ஆகியோரின் வழியில் மத்திய அரசை கழக மாணவர் அணி வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.
சாதனை விளக்க
பிரச்சாரம்
மக்களால் நாள்; மக்களுக்காகவே நான்” என்று தமிழக மக்களுக்காகவே வாழ்ந்து தமிழக மக்களின் நலன் ஒன்றே முழு மூச்சாகக் கொண்டு தமது வாழ்நாள் முழுவதும் அருந்தொண்டாற்றி மக்கள் சேவையில், மகத்தான சாதனை படைத்திட்டவரும், உலக தமிழ் மக்களின் ஒரே நம்பிக்கையாகவும் இந்த உலகத்தில் ஈடு இணையற்ற தலைவராகவும், உலகம் வியக்கின்ற வகையில் கழகத்தை வளர்த்து 6-வது முறையாக முதலமைச்சராக பொறுப்பேற்று இந்தியாவின் சிறப்புமிக்க முதலமைச்சராக ஆட்சி நடத்தி, தமிழகத்தை முன்னேற்றப் பாதையில் வழிநடத்தி ஏழை, எளிய சாமானிய கடைக்கோடி மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திக் காட்டி, எந்நாளும் வாழும் வரலாறாக ஆனவரும் தமிழக மக்களால் ‘இரும்பு பெண்மணி’ என அன்போடு அழைக்கப்படும் நம் மறைந்த முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மாவின் வழியில் கழக ஒருங்கிணைப்பாளர், துணை முதலமைச்சர் மற்றும் கழக இணை ஒருங்கிணைப்பாளர், முதலமைச்சர் தலைமையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் கழக அரசின் மக்கள் நலத்திட்டங்களை பட்டி, தொட்டியெங்கும் பள்ளி, கல்லூரிகள் தோறும் சாதனை விளக்க பிரச்சாரத்தினை மேற்கொள்வதோடு, நடைபெற இருக்கின்ற உள்ளாட்சித் தேர்தலில் கழகம் மகத்தான வெற்றி பெறவும், தமிழகம் எங்கும் சிறப்பான முறையில் இரவு, பகல் பாராமல் களப் பணியாற்றுவது என கழக மாணவர் அணி உறுதி ஏற்கிறது.
தீய சக்திகளின் சூழ்ச்சிக்கு
இடம் தர கூடாது
தமிழ்நாட்டின் உரிமைகளை நிலை நாட்டவும், உலகெங்கும் வாழுகின்ற தமிழர்களுக்கு உறுதுணையாய் இருக்கவும், தமிழ்நாட்டில் சமூக நீதி காக்கவும், அனைத்து தரப்பு மக்களுக்கு வளர்ச்சி அடைந்திட வேண்டும் என்ற லட்சியத்தோடு அண்ணா தி.மு.க.வின் அரசியல் பயணம் நடைபெற்று வருகிறது. இந்த ஒளி விளக்கு அணையா விளக்காக காலமெல்லாம் ஒளிரும் வண்ணம் கழகத் தொண்டர்கள் ஒவ்வொருவரும் அண்ணா தி.மு.க.வை வெற்றிப் பாதையில் வழி நடத்தி வந்த நம் முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மாவின் மறைவிற்கு பிறகு கழகத்திலும், ஆட்சியிலும் மிகப்பெரிய வெற்றிடம் உருவாகியிருந்தது.
புரட்சித் தலைவி அம்மாவின் உண்மை விசுவாசிகளான கழக ஒருங்கிணைப்பாளர், துணை முதலமைச்சர் மற்றும் கழக இணை ஒருங்கிணைப்பாளர், முதலமைச்சரின் தலைமையில் தீயசக்திகளின் சூழ்ச்சிகளுக்கு இடம் தராமல், விசுவாசமிக்க தொண்டர்களாக கழகப் பணிகளையும், மக்கள் பணிகளையும் தொடர்ந்து ஆற்றுவோம் என கழக மாணவர் அணி சூளுரை ஏற்கிறது. தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுகின்ற துயரம் கடந்த பல ஆண்டுகளாக தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. கடந்த 4-ம் தேதி அதிகாலை கடலில் 2 படகுகளில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 13 பேர் மற்றும் 8 வெவ்வேறு நிகழ்வுகளில் தங்களின் பாரம்பரிய மீன்பிடி பகுதியான பாக் ஜலசந்தியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த 84 மீனவர்களையும் அவர்களுக்கு சொந்தமான 159 படகுகளையும் விடுவிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க மத்திய அரசை வலியுறுத்தியும் இலங்கை அரசை கண்டித்தும் கழக மாணவர் அணி தீர்மானிக்கிறது.
தி.மு.க.வுக்கு கண்டனம்
ஜனநாயகத்தை கேலி கூத்தாக்கி, தினந்தோறும் பொய்யான வெற்று அறிக்கைகளை விட்டு தமிழ்நாட்டிற்கும், தமிழக மக்களுக்கும் தொடர்ந்து துரோகம் செய்து காலச் சூழ்நிலைக்கேற்ப சுயநல, சந்தர்ப்பவாத அரசியல் செய்யும் தீயசக்தி ஸ்டாலின் அரசியல் நாகரீகம் தெரியாமல் முதிர்ச்சியற்ற அரசியல் தலைவரை போல புரட்சித் தலைவி அம்மாவுக்கு நினைவு மண்டபம் கட்டுவது தொடர்பாக மக்கள் விரும்ப தகாத கருத்துக்களை தெரிவித்து வரும் தீயசக்தி ஸ்டாலினுக்கும், தி.மு.க., காங்கிரஸ் கட்சிகளுக்கும் கழக மாணவர் அணி தனது கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.
கல்வி புரட்சி
அன்பின் வடிவமாய், கருணையின் இருப்பிடமாய், ஏழை, எளிய மக்களின் காவல் தெய்வமாய், தமிழர் குலசாமி, தன் சீரிய சிந்தனையாலும், அறிவார்ந்த மதிநுட்பத்தாலும் கல்வித்துறையில் மாபெரும் ‘கல்விப் புரட்சி’ செய்து மாணவ சமுதாயத்தின் அட்சயப் பாத்திரமாக விளங்கிய மறைந்த முதலமைச்சர் அம்மாவின் வழியில் சிறந்த முறையில் செயல்படும் கழக அரசு கிராமப்புற ஏழை, எளிய மாணவ, மாணவிகளுக்கு எட்டாக் கனியாக உள்ள மருத்துவப் படிப்பு மற்றும் அதன் நுழைவுத் தேர்வை (நீட்) எளிய முறையில் மாணவர்கள் எதிர்கொள்ளும் வகையில் தமிழகம் முழுவதும் 412 நீட் பயிற்சி மையம், பயிற்சி அளிப்பதற்கு 3000 ஆசிரியர்களை நியமனம் செய்து, இதுவரை 75,000 ஆயிரம் அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளி மாணவர்கள் பதிவு செய்து அவர்களை சிறந்த மருத்துவ மாணவர்களை உருவாக்கும் வகையில் திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ள கழக ஒருங்கிணைப்பாளர், துணை முதலமைச்சர், இணை ஒருங்கிணைப்பாளர், முதலமைச்சர் மற்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சருக்கும் மாணவர் அணி தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.
வீரவணக்க நாள்
பொதுக்கூட்டம்
எட்டாம் உலகத் தமிழ் மாநாடு நடத்தி இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழோடு அறிவியல் தமிழ் என்னும் நான்காம் தமிழை அறிமுகப்படுத்தி தமிழ் அன்னைக்கு தன்னையே அர்ப்பணித்து வாழ்ந்து மறைந்த முதல்வர் புரட்சித் தலைவி அம்மாவின் வழியில் அன்னை தமிழுக்காக உயிர் தியாகம் செய்திட்ட மொழிப்போர் தியாகிகளை நினைவு கூறும் வகையில் வரும் 25-ம் தேதி கழக மாணவர் அணி சார்பில் கழக ஒருங்கிணைப்பாளர், துணை முதலமைச்சர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர், முதலமைச்சரின் வழிகாட்டுதலோடு தமிழகம் முழுவதும் கழக அமைப்பு ரீதியாக உள்ள மாவட்ட தலைநகரங்களில் வீரவணக்க நாள் பொதுக் கூட்டம் சிறப்பான முறையில் நடத்துவது என கழக மாணவர் அணி தீர்மானிக்கிறது ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.