சமத்துவப் பொங்கல் விழா; கிராமிய விளையாட்டு போட்டிகள்

சென்னை, ஜன. 12–
இன்று சென்னை எழும்பூர் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கத்தின் சார்பாக நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழா மற்றும் கிராமிய விளையாட்டு போட்டிகளை மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் துவக்கி வைத்தார்.
மேலும் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கத்தின் புதுப்பிக்கப்பட்ட இணையதளம், கம்பியில்லா இணைய வசதியினையும் துவக்கி வைத்த அவர் நம்பிக்கை மையத்தின் சின்னம் மற்றும் சொற்றொடரினை வெளியிட்டு விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
அப்போது அவர் பேசியதாவது:–
22.4.1994 அன்று தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் உருவாக்கப்பட்டது. தமிழ்நாட்டில் 2001-02–ல் 1.13 சதவீதமாக இருந்த எச்.ஐ.வி., எய்ட்ஸின் தாக்கம் தற்பொழுது 0.25 விழுக்காடாக குறைந்துள்ளது. தேசிய அளவை விட (0.29 சதவீதம்) குறைவானது. தாயிடம் இருந்து சேய்க்கு எச்.ஐ.வி தொற்று பரவுவதை தடுப்பதில் உலக அளவில் கியூபா முதலிடம், தாய்லாந்து இரண்டாமிடம், அடுத்தபடியாக இந்தியா (தமிழ்நாடு). தமிழ்நாட்டில் உள்ள 32 மாவட்டங்களில் தற்போது 16 மாவட்டங்களில் தாயிடம் இருந்து சேய்க்கு எச்.ஐ.வி தொற்று பரவுவதை முற்றிலுமாக தடுக்கப்பட்டுள்ளது.
எய்ட்ஸ் மூலம் இறப்பில்லா நிலையை எட்டுதவற்கு 794 நம்பிக்கை மையங்கள், 1,102 சுகாதார மையங்களுடன் இணைக்கப்பட்ட பரிசோதனை மற்றும் ஆலோசனை மையங்கள், 151 தனியார் பொது கூட்டாண்மை மையங்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க 55 கூட்டு மருத்துவ சிகிச்சை மையங்கள், 149 இணை கூட்டு மருத்துவ சிகிச்சை மையங்கள், 16 சட்ட உதவி மையங்கள் செயல்பட்டு வருகின்றன.
எச்.ஐ.வி. தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஊட்டச்சத்து, கல்வி உதவித் தொகை மற்றும் மருத்துவ சிகிச்சைகள் வழங்குதல், கட்டணமில்லா பேருந்து பயண அட்டை, தாயிடமிருந்து குழந்தைகளுக்கு எச்.ஐ.வி. தொற்று பரவாமல் இருப்பதற்காக புதிய மருந்துகள் வழங்கப்படுகிறது. உழவர்களுக்கு முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ஆயிரம் ரூபாய் மாத ஓய்வூதியம். முதியவர்களுக்கும், இளம் விதவைகளுக்கும் வயது வரம்மை தளர்த்தி ஓய்வூதியம், பசுமை வீடு கட்டும் திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் 2,375 எச்.ஐ.வி. ஆலோசனை மற்றும் பரிசோதனை சேவை மையங்கள் மூலம் 2016-–17-ம் ஆண்டு எச்.ஐ.வி, எய்ட்ஸ் பற்றிய ஆலோசனை மற்றும் விழிப்புணர்வு 30,81,765 பொதுமக்கள் மற்றும் 9,68,248 கர்ப்பிணிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்துடன் ‘‘சமத்துவப் பொங்கல்” நிகழ்ச்சியை தமிழ்நாட்டிலுள்ள 55 ஏ.ஆர்.டி மையங்களிலும் வெகு விமரிசையாக கொண்டாட ஏற்பாடு செய்யபட்டுள்ளது. தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் புதுபிக்கப்பட்ட இணைய தளம், நம்பிக்கை மையத்தின் சின்னம் (லோகோ) மற்றும் சொற்றொடர் வெளியீடு, மற்றும் கம்பியில்லா இணைய வசதியினை (ஒய்–பை) துவக்கி வைத்ததற்கு பெருமகிழ்ச்சி அடைகிறேன் என்றார்.
தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கத்தின் கீழ் இயங்கும் நம்பிக்கை மையத்தின் 20 ஆண்டு சேவைகள் நிறைவுற்றதை முன்னிட்டு புதிய சின்னம் மற்றும் சொற்றொடர் போட்டி அறிவிக்கப்பட்டு மின்னஞ்சல் மூலம் சுமார் 1,254 சின்னம் மற்றும் சொற்றொடர் பெறப்பட்டது.
திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆய்வக நுட்புனர் ஜி.வாணி சிறந்த சின்னம் போட்டியாளராகவும், திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி, மகளிர் கல்லூரி செஞ்சுருள் சங்க ஒருங்கிணைப்பாளர் க. அகிலாண்டேஸ்வரி சிறந்த சொற்றொடர் போட்டியாளராகவும் தேர்வு செய்யப்பட்டு அவர்கள் இருவருக்கும் தலா ரூ.10,000 பரிசு தொகை அவர்களது மாவட்ட கலெக்டர்கள் வழங்குவார்கள்.
இந்நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை முதன்மைச் செயலாளர் ஜெ. ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்க திட்ட இயக்குநர் கி. செந்தில்ராஜ், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரிய தலைவர் வே.ராஜாராமன், தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குநர் பி. உமாமகேஸ்வரி, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை இயக்குனர் குழந்தைசாமி, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குனர் இன்பசேகரன், மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு, இணை இயக்குநர் சேகரன், உயர் அலுவலர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவன பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.