கண்களின் பாதுகாப்பிற்கு ஏற்ற சிக்கன வழிமுறைகள் என்ன?

நமது கண் இமைகளிலே எண்ணெய் உற்பத்தியாகிறது. மெய்போமியன் (Meibomian) என்ற சுரப்பி கண் இமைகளில் ஆயிலை உற்பத்தி செய்கிறது. நாம் கண்களை சிமிட்டவும், சிரமமின்றி வழுவழுப்பாக இயங்கவும், கண்ணீரை பலப்படுத்தவும் அந்த ஆயில் அவசியமாகிறது.
‘பெண்கள் எதற்கெடுத்தாலும் அழுவார்கள். அது அவர்கள் பலகீனம்’ என்று சொல்வார்கள். ஒரு விதத்தில் பெண்களின் அழுகை, அவர்கள் கண்களுக்கு ரொம்ப நல்லது. துக்க அழுகை, விபத்து அழுகை, மிதமான அழுகை போன்ற ஒவ்வொன்றின் தன்மைக்கு ஏற்ப, கண்ணீரின் ரசாயனத் தன்மை மாறும்.
கண்ணீர் வெளியேறும் போது, கண்களில் உள்ள அசுத்தமும் சேர்ந்து வெளியேறும். அழுவது மூலம் அவர்கள் அந்த சோகத்தால் ஏற்படும் மனஅழுத்தத்தில் இருந்து விலகி, மன அமைதியையும் பெறுவார்கள். பெண்கள் அழுவதால் அவர்களுக்கு விழித்திரையில் தண்ணீர் கோர்க்கும் நோய் குறைவாக இருக்கிறது.
கம்ப்யூட்டரில் வேலைபார்ப்பவர்களுக்கு ‘கம்ப்யூட்டர் விஷன் சின்ட்ரோம்’ என்ற பாதிப்பு இப்போது அதிகம் ஏற்படுகிறது. கம்ப்யூட்டரை தொடர்ந்து அதிக நேரம் பார்ப்பதால் சுரப்பிகளில் இருந்து திரவம் வெளிவரும் வழி அடைபடும். அதனால் கண் உலர்ந்து, எரிச்சல், அரிப்பு ஏற்படும். 2 நிமிடம் கூட கண்களை திறக்க முடியாமல் அவதிப்படுவார்கள்.
கம்ப்யூட்டரில் வேலை பார்ப்பவர்கள் கண்களுக்கு போதுமான அளவு ஓய்வு கொடுக்கவேண்டும். 20 நிமிடங்கள் தொடர்ச்சியாக வேலை பார்த்ததும், கம்ப்யூட்டரில் இருந்து பார்வையை விலக்கி 20 வினாடிகள், 20 அடி தூரம் தள்ளி பார்வையை செலுத்த வேண்டும். பார்ப்பது இயற்கை காட்சியாக இருந்தால் நல்லது.
கண்களின் ஆரோக்கியத்திற்கு இரவில் எட்டு மணிநேர தூக்கம் அவசியம். இரவில் பணி புரிந்துவிட்டு பகலில் தூங்கும்போது தூக்கத்தில் அதிக கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும். மீன், பழ வகைகள், கேரட், பொன்னாங்கண்ணி கீரை, குங்குமப்பூ, பாதாம் பருப்பு, வால்நட், மஞ்சள் நிற குடை மிளகாய் போன்றவை கண் நலத்திற்கு ஏற்ற உணவுகளாகும்.