இஸ்ரோ தலைவர் சிவனுக்கு முதலமைச்சர் எடப்பாடி வாழ்த்து

சென்னை, ஜன 12–
இந்திய வான்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) புதிய தலைவர் கே.சிவனுக்கு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி வாழ்த்துக் கடிதம் அனுப்பி உள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:–
‘இஸ்ரோ தலைவராக நீங்கள் நியமிக்கப்பட்டுள்ளதற்காக உங்களுக்கு எனது வாழ்த்துக்களை கூறிக்கொள்கிறேன். கடின உழைப்பின் மூலமும், திறமையாலும் இவ்வளவு பெரிய பதவியை நமது மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் அடைந்திருப்பது தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்ப்பதாக அமைந்துள்ளது.
வான்வெளி ஆராய்ச்சியில் நீண்டகால மற்றும் தனித்துவமான உங்கள் பணிக்கு கிடைத்துள்ள மிகப்பொருத்தமான அங்கீகாரம் இதுவாகும். உங்களுக்கு கிடைத்துள்ள பதவி உயர்வுக்காக தமிழக மக்கள் மற்றும் தமிழக அரசின் சார்பில் வாழ்த்துகிறேன். இந்தப் புதிய பதவியில் நீங்கள் மேலும் மேலும் பல வெற்றிகளை அடையவும் வாழ்த்துகிறேன்’.இவ்வாறு அதில் கூறியுள்ளார்.