இந்தியாவிலேயே விவசாயிகளுக்கு அதிக அளவில் இழப்பீடு தொகை:

சென்னை, ஜன.12–
இந்தியாவிலேயே விவசாயிகளுக்கு அதிக அளவில் இழப்பீடு தொகை பெற்றுத் தந்த ஒரே மாநிலம் தமிழ்நாடு தான் என்று சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெருமிதத்துடன் தெரிவித்தார்.
தமிழ்நாடு கவர்னர் 8.1.2018 அன்று சட்டமன்றத்தில் ஆற்றிய உரையின் மீது நடைபெற்ற விவாதத்திற்கான முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பதிலுரை வருமாறு:–
பண மதிப்பு இழப்பு (Demonetizaton) நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் பயிர்க் கடனை திரும்ப செலுத்த ஏதுவாக, குறுகிய கால கடன்களை, மத்திய காலக் கடன்களாக மாற்றி அமைத்ததோடு, 3 லட்சத்து 48 ஆயிரத்து 323 விவசாயிகளுக்கு ஆயிரத்து 640 கோடியே 79 லட்சம் ரூபாய்க்கு புதிய பயிர்க் கடன் வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இரண்டாம் பசுமைப் புரட்சியை ஏற்படுத்தி, விவசாயப் பெருமக்களின் வருமானத்தை இருமடங்காக உயர்த்திட அம்மாவின் அரசு, வேளாண்மை துறைக்கு அரிய பல திட்டங்களை கொண்டு வந்தது. இதன் விளைவாக, மத்திய அரசின் அதிக விளைச்சலுக்கான கிரிஷி கர்மான் விருதினை 2011-12, 2013-14, 2014-15 மற்றும்
2015-16 ஆகிய 4 ஆண்டுகளில் தமிழ்நாடு அரசு பெற்றுள்ளது என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்நாட்டில் 140 வருடங்களில் இல்லாத வரலாறு காணாத வறட்சி ஏற்பட்டதனால், மாநிலம் முழுவதும் வறட்சியால் பாதிக்கப்பட்டது என அறிவிக்கப்பட்டதோடு, 33 சதவீதத்திற்கும் அதிகமாக ஏற்பட்ட பயிர் இழப்புக்கு, இடுபொருள் மானியமாக 2 ஆயிரத்து 247 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்து, நேரடியாக 25 லட்சத்து 35 ஆயிரம் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் குறைந்த கால இடைவெளியில் மானியத் தொகை வரவு வைக்கப்பட்டது.
அம்மாவின் அரசு மேற்கொண்ட சீரிய நடவடிக்கைகளின் பயனாக, சென்ற ஆண்டில் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 15 லட்சத்து 37 ஆயிரம் விவசாயிகள் பதிவு செய்துள்ளனர். விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, மாநில அரசு தன் பங்காக 564 கோடியே 70 லட்சம் ரூபாயை மானியமாக காப்பீட்டு நிறுவனங்களுக்கு உரிய நேரத்தில் வழங்கியது. இதனால், வறட்சியால் பாதிப்படைந்த 9 லட்சத்து 27 ஆயிரத்து 909 விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகையாக 2 ஆயிரத்து 980 கோடி ரூபாய் காப்பீட்டு நிறுவனங்களால் வழங்க ஒப்பளிக்கப்பட்டுள்ளது.
இதுவரை 2 ஆயிரத்து 546 கோடியே 50 லட்சம் ரூபாய் அளவுக்கு விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக இத்தொகை வரவு வைக்க வங்கிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே, அதிக அளவு இழப்பீட்டுத் தொகையை விவசாயிகளுக்கு பெற்றுக் கொடுத்தது தமிழ்நாடு தான் என்பதை பெருமையுடன் இப்பேரவைக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்நாட்டில், உள்ள தென்னை விவசாயிகளின் வருமானம் பெருகிட, அவர்களின் 50 ஆண்டு கால கோரிக்கையான நீரா பானம் உற்பத்தி செய்ய அம்மாவின் அரசு அனுமதி வழங்கும் என 18.4.2017 அன்று நான் அறிவித்தேன். இதனைத் தொடர்ந்து, கடந்த சட்டமன்ற கூட்டத் தொடரில் இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டு, 21.12.2017 அன்று அறிவிக்கை வெளியிடப்பட்டது. இந்த அறிவிக்கையின்படி அனுமதிக்கப்பட்ட தென்னை உற்பத்தியாளர் நிறுவனம் அல்லது கூட்டுறவு சங்கம் மூலம் நீராபானம் உற்பத்தி செய்ய உரிமம் வழங்கப்படும். தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் நீராபானம் எளிதில் கிடைப்பதற்கும், ஏற்றுமதி வாய்ப்பினை உருவாக்குவதற்கும், மத்திய அரசின் தென்னை வளர்ச்சி வாரியத்தின் ஒத்துழைப்புடன், அம்மாவின் அரசு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும். இதன் மூலம் தென்னை விவசாயிகள் பல மடங்கு கூடுதல் வருமானம் பெற இயலும் என்பதோடு, இளைஞர்களின் வேலைவாய்ப்புகளும் கூடும்.
டெல்டா விவசாயிகளின் நலனைப் பாதுகாக்கும் நோக்கத்துடன், 2017-18–ம் ஆண்டில் 56 கோடியே 92 லட்சம் ரூபாய் செலவில் குறுவை சிறப்பு தொகுப்புத் திட்டமும், 41 கோடியே 15 லட்சம் ரூபாய் செலவில் சம்பா சிறப்பு தொகுப்பு திட்டமும் செயல்படுத்தப்பட்டுள்ளது.
மானாவாரி விவசாயிகளின் நலனுக்காக தமிழ்நாட்டில் மற்றுமொரு சிறப்புத் திட்டமாக 802.90 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மானாவாரி சிறப்பு தொகுப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதுமட்டுமல்லாது, 40 லட்சம் சிறு, குறு விவசாயிகளை ஒருங்கிணைத்து, கூட்டுப் பண்ணைய முறையை ஊக்குவிக்க முதற்கட்டமாக நடப்பாண்டில் 100 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் கூட்டுப் பண்ணையத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
நுண்ணீர் பாசனத்திற்கு இந்தியாவிலேயே எங்கும் இல்லாத அளவில் சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவிகித மானியமும், பிற விவசாயிகளுக்கு 75 சதவிகித மானியமும் வழங்க 2011-12–ம் ஆண்டிலேயே புரட்சித் தலைவி அம்மாவால் உத்தரவிடப்பட்டு, இந்தத் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தினை தமிழ்நாடு அரசு தொடர்ந்து சிறப்புற செயல்படுத்தி வந்த காரணத்தினால், மத்திய அரசு இத்திட்டத்திற்கு 2016-17 –ம் ஆண்டில் வழங்கிய 110 கோடி ரூபாய் மானியத்தை 2017-18–ம் ஆண்டில் 285 கோடி ரூபாயாக உயர்த்தி வழங்கியுள்ளது. இத்துடன், தமிழ்நாடு அரசு தனது பங்கான 518 கோடியே 75 லட்ச ரூபாயும் சேர்த்து 803 கோடியே 75 லட்சம் ரூபாய் மானியத்தில் நுண்ணீர்ப் பாசன அமைப்புகள் வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறது.
மத்திய அரசு தற்போது அமல்படுத்திய ஜி.எஸ்.டி. வரி விதிப்பினால் நுண்ணீர் பாசன அமைப்புகளின் விலையானது உயர்ந்தது. விவசாயிகள் இந்த விலை உயர்வினால் பாதிக்கப்படாமல் இருக்க, அம்மாவின் அரசு முடிவெடுத்து, நுண்ணீர்ப் பாசன அமைப்பிற்கான ஜி.எஸ்.டி வரி விதிப்பினால் விவசாயிகள் செலுத்தும் கூடுதல் நிதியினை, தமிழ்நாடு அரசே ஏற்று அதற்கான ஆணையை பிறப்பித்துள்ளது. இதன்மூலம், நுண்ணீர் பாசன முறையினை அமைக்க முன்வரும் விவசாயிகளை கூடுதல் நிதிச் சுமையிலிருந்து இந்த அரசு பாதுகாத்துள்ளது.
புரட்சித்தலைவி அம்மாவின் பிறந்த நாளையொட்டி 2011-12–ம் ஆண்டு முதல் மரக் கன்றுகள் நடும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டமானது, 2017-18–ம் ஆண்டு மாபெரும் அளவில் 65 கோடியே 85 லட்சம் ரூபாய் செலவில் 31 மாவட்டங்களில் 69 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும் திட்டமாக செயல்படுத்தப்படும்.
இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.