ஆளில்லா விமானங்களை இயக்க உதவும் நகரும் கட்டுப்பாட்டு நிலையம்

சென்னை, ஜன.12–-
ஆளில்லா சிறிய ரக விமானங்களை இயக்க உதவும் நகரும் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு நிலையத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–-
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முகாம் அலுவலகத்தில், சென்னை அண்ணா பல்கலைக்கழக எம்.ஐ.டி. வளாகத்தில் அமைந்துள்ள வான்வெளி ஆராய்ச்சி மையத்தால் மக்களின் பயன்பாட்டிற்கு உதவும் வகையில், இயற்கை பேரிடர் மற்றும் சமுதாய பணிகளை மேற்கொள்வதற்காக உருவாக்கப்பட்ட ஆளில்லா விமானத்தினை இயக்க உதவும் நகரும் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு நிலையத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
அம்மா கடந்த 25.9.2015 அன்று சட்டசபை விதி எண்.110-ன் கீழ் வெளியிட்ட அறிவிப்பில், ஆளில்லா வான்வெளி வாகனம் மூலம் தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளுக்கு சிறப்பான சேவையை அளிக்கும் வகையில் அண்ணா பல்கலைக்கழகம் மூலம் ஆளில்லா வான்வெளி வாகனம் வடிவமைக்கும் திட்டத்திற்காக அண்ணா பல்கலைக்கழகத்திற்கு 20 கோடி நிதி வழங்கப்படும் என்று அறிவித்து, நிதியுதவி வழங்கினார். இதன்மூலம், இயற்கை பேரிடர் காலங்களில் மீட்புப் பணிகள் மற்றும் பாதுகாப்பு பணிகள் சிறப்புற மேற்கொள்ளவும், பாதிக்கப்பட்ட பகுதியை ஆய்வு செய்து மதிப்பு மிகுந்த தகவல்களை பெற்றிடவும், இவ்வாகனத்தின் திறன்களை பயன்படுத்தி நிவாரணப் பணிகளை விரைந்து மேற்கொள்ளவும், பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் மற்றும் அபாயங்கள் ஆகியவற்றை கண்காணிக்கவும் இயலும்.
சென்னை அண்ணா பல்கலைக்கழக வான்வெளி ஆராய்ச்சி மையத்தால் பல்வேறு வகையான ஆளில்லா விமானங்கள் உருவாக்கப்பட்டு, பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளுக்கும், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், போக்குவரத்துக்கு இடையூறுகளை கண்காணிப்பதற்கும் காவல்துறையால் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. மேலும், வெள்ளத்தடுப்பு பணிகளுக்காக வருவாய்த் துறையாலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
தற்போது இத்தகைய பல்வேறு வகையிலான சிறிய ஆளில்லா விமானங்களை ஒருங்கிணைத்து, அவசர நிலை மற்றும் பேரிடர் மீட்பு பணிகளை மேற்கொள்வதற்கு ஏதுவாக, அண்ணா பல்கலைக்கழக வான்வெளி ஆராய்ச்சி மையத்தால், இந்தியாவிலேயே முதன் முறையாக நகரும் வகையிலான கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு நிலையம் வடிவமைத்து உருவாக்கப்பட்டுள்ளது. பேரிடர் மற்றும் அவசர காலத்திலும், மின்சாரம் மற்றும் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலையிலும், இந்த நகரும் நிலையத்தை தொடர்ந்து 3 நாட்கள் இயக்க முடியும் என்பது இதன் சிறப்பு அம்சமாகும்.
இந்த நிகழ்ச்சியில், உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன், உயர்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் சுனீல் பாலீவால், தொழில்நுட்ப கல்வி ஆணையர் (முழு கூடுதல் பொறுப்பு) டாக்டர் ஆர். பழனிசாமி, அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் டாக்டர் கணேசன், அண்ணா பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் பரிமாற்ற மைய இயக்குநர் எஸ். தாமரைசெல்வி, வான்வெளி ஆராய்ச்சி மைய இயக்குநர் டாக்டர் கே. செந்தில்குமார் மற்றும் வான்வெளி ஆராய்ச்சி மையத்தின் விஞ்ஞானிகள் கலந்து கொண்டார்கள்.