கரீபியன் கடல் பகுதியில் பயங்கர நிலநடுக்கம்-: சுனாமி எச்சரிக்கை

ஹவானா, ஜன. 10–
கரீபியன் கடலில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் ஜமைக்கா, மெக்ஸிகோ, ஹோண்டூராஸ், கியூபா உள்ளிட்ட பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்திய நேரப்படி இன்று காலை 8.30 மணிக்கு கரிபீயன் கடற்பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ஜமைக்கா மேற்குபகுதியில் கடலுக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.6ஆக பதிவான நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் வீடுகள் குலுங்கின.
கியூபா, ஹோண்டுராஸ், மெக்ஸிகோ உள்ளிட்ட நாடுகளில் நிலநடுக்கம் உணரப்பட்டது. அங்கு இரவு நேரம் என்பதால் தூங்கிக்கொண்டிருந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.
கடலில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் என்பதால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதியிலிருந்து 1000 கி.மீ தொலைவுக்கு சுனாமி தாக்க வாய்ப்புள்ளதாக பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.
ஜமைக்கா, மெக்ஸிகோ, ஹோண்டூராஸ், கியூபா, பெலிஸ், கோஸ்டா ரிகா, கேமேன் தீவுகள், பனாமா, கவுதமாலா, பியூர்டோ ரிகா, மற்றும் கரீபியன் கடற்பகுதியில் உள்ள பிரிட்டிஷ் தீவுகளுக்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தால் குறைந்தது ஒரு மீட்டர் உயரத்துக்காவது கடல் அலைகள் எழும்பும் என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் கடலோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் உடனடியாக வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.
அமெரிக்க வளைகுடா நாடுகள் மற்றும் கிழக்கு கடற்பகுதியில் உள்ள நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை.