ஞாயிற்றுக்கிழமை

வார நாட்கள் எல்லாம் வேலை நாட்களாக இருந்தால் சுகம். விடுப்பு என்பது வீண் ஞாயிற்றுக்கிழமை மோகனுக்கு அந்நியமாய்ப்பட்டது.
ச்சே…. இந்த ஞாயிற்றுக்கிழமை ஏன் வருதோ? இன்னும் இருப்பத்தி நாலு மணிநேரம் அவள பாக்காம இருக்க முடியாதோ?
வெளியில் அலைந்து புலம்பியது அவன் மனது.
நிர்மலா. இவள் தானே நெஞ்சம் நிறைந்தவள் .
அலுவலக நேரங்களில் அவள் இல்லை என்றால் என் நாட்கள் எட்டிக் காயாய்க் கசக்கும்.
அவள் இருக்கை பார்த்தால் தான் இதயம் இருப்புக் கொள்ளும்; இப்போது இந்த ஞாயிறு என்னைக் கொல்கிறதே. விட்டம் பார்த்து உட்கார்ந்து கொண்டிருந்தவனின் நெற்றியில் வந்து நிர்மலா நின்றாள்.
ஓவர் டைம் போட்டுக் கூட அவள வேலைக்கு கூப்பிடுங்க .இவள பாக்காம என்னால இருக்க முயடியாது. புலம்பினான் ;முட்டினான் ; மோதினான் ; பொழுதெல்லாம் புலம்பித் தீர்த்தான்அவன்.
சூரியன் இன்று மட்டும் சுள் என அவனைச் சுட்டது.
நிர்மலா …. நீ இன்னைக்கு என்ன செஞ்சிட்டு இருப்பே?
வீட்டுல தூங்குவியா?
துணி துவைப்பியா?
சமைப்பியா?
என்ன செய்வே? ஆராய்ந்தது மோகனின் மனது அவளின் முகத்தை இழுத்துக் கொண்டு வந்தான்.
மனதுக்குள்ளயே அவளுடன் பேசினான் .
அலுவலக நடவடிக்கைகள் கடந்து அவனுள் அவள் விட்டுச் சென்ற ஞாபகங்கள் கூடு கட்டின –
சரியாகப் பின்னாத கூந்தல் சரிசெய்யப்படாத ஆடைகள் என நிர்மலாவை நிஜமாகவே மனதுள் எழுத ஆரம்பித்தான்.
ஏய்… நிர்மலா எந்திரிடி மணி பத்தாச்சு அம்மா கூவினாள்.
இன்னைக்கு லீவு தானம்மா ;கொஞ்சம் தூங்கிக்கிறனே.
….ம்…. வயித்துக்கு லீவு இல்லையே
ஆமா ஒரு நாள் கூட சும்மா இருக்க விடுறதில்ல. சலித்துக்கொண்டே எடுத்தாள் நிர்மலா?
சொல்லும்மா,
டிரெஸல்லாம் ஊற வச்சுருக்கேன். தொவச்சுப் போடு,
ம்…
நிர்மலா…
சொல்லு…
சிக்கன் எடுத்திட்டு வரவா?
ஓ.கே,
நிர்மலா….
அப்பா…
என்னோட வேட்டிக்கு நீலம் போட்டுரு
சரிப்பா….
இப்படியாய் இருப்பாளோ?
நிர்மலாவின் ஞாயிற்றுப் கிழமையை நினைவில் கொண்டு வந்து நிஜமாக்கினான் மோகன்.
இப்பித்தான் இருப்பாளோ?
அலுவலகத்தில் கணினியோடு வேலை செய்பவள் இன்று அடுப்படியில் குளியலறையில் கிடக்கிறாளா? நிர்மலாவுக்கு உருவம் கொடுத்தான்
ச்சே ….இன்னும் பனிரெண்டு மணி நேரம் அவளப் பாக்க முடியாது போலவே. பாவம் பெண்கள் ஞாயிற்றுக் கிழமை கூட அவர்களுக்கு ஓய்வு இல்லை . நிர்மலா மாதிரி இங்க நிறையப் பெண்கள் தங்களின் சுதந்திரத்தை விட்டு விட்டுத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
அவளை நாம் பார்க்காதது ஒரு புறம் சோகம் தான். ஆனால் அவளின் ஞாயிற்றுக் கிழமை இம்சைகள் நிறைந்ததா? மோகன் நிர்மலாவிற்காய் வருந்தினான். இரவு கூட அவனுக்கு ரணமாய் இருந்தது. விழிகளில் அவளைச் சுமந்து கொண்டே தூங்கினான்.
திங்கட் கிழமை விடியற்காலை அவனுக்கு சொர்க்க வாசலாய்த் தெரிந்தது.
இப்ப இன்னும் கொஞ்ச நேரத்தில நமக்கு நிர்மலா தரிசனம் கெடைக்கும் அவள பாக்கலாம் பேசலாம் மோகனின் மனசுக்குள் மொட்டுக்கள் முளைத்தன
அலுவலகம் ஆரம்பமானது .
நிர்மலா இப்போது நிஜமாய் அவன் முன்னால்….
அருகிலிருந்த தோழி கேட்டாள் :
‘‘நிர்மலா ஞாயிற்றுக்கிழமை என்ன பண்ணுன?’’
ஜாலியா பிரண்டுக கூட சினிமாவுக்குப் போய்ட்டு ஷாப்பிங் பண்ணிட்டு வந்தேன். மூச்சுமுட்டாமல் சொன்னாள்.
அடிப்பாவி சினிமாவுக்குப் போய்… ஜாலியா இருந்தியா?
அப்ப நான் தான் தப்பு கணக்கு போட்டுட்டனா?
மோகன் வருந்தினான்.
‘‘இந்த திங்கட் கெழமையெல்லாம் ஏன் வருதுன்னு தெரியல . ஞாயிற்றுக்கிழமை தான் ஜாலி’’ நிர்மலா சொன்னாள்.
அடிப்பாவி ஒனக்கு ஜாலியா?
‘‘எனக்கு மட்டும் தான் வேதனையா? மோகன். நீங்க ஏன் தெனமும் ஒரு நாள் கூட லீவு போடாம ஆபீஸ் வாரீங்க….’’
‘‘லீவு போட்டு ஜலியா என்ஜாய் பண்ணுங்க.’’ மோகனுக்கு அறிவுரை சொன்னாள். என் ஞாயிற்றுக்கிழமை பற்றித் தெரிய அவளுக்கு வாய்ப்பில்லைதான்.
மோகனின் மூளை இப்போது அவளையே சுற்றியது.
ராஜா செல்லமுத்து