கெடுதல் நினைப்பவருக்கும் நன்மை செய்

சிறுகதை துரை. சக்திவேல்

இரண்டு சக்கர வாகனம் பழுது பார்க்கும் கடையில் வேலை பார்க்கும் சந்திரன் அங்கிருந்த வாகனத்தை பழுது பார்க்கும் வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தான்.
அப்போது அதே கடையில் வேலை பார்க்கும் முரளி…
டே…. மச்சான் முதலாளி எங்கடா .ரொம்ப நேரமா ஆளையே காணோம்… டீ சாப்பிடலாமா… என்றான்.
சரி சொல்லு சாப்பிடலாம் என்றான் சந்திரன்.
அப்போது எதிரே உள்ள டீக் கடை மாஸ்டரை கைதட்டி அழைத்த முரளி 2 டீ எடுத்து வரச் சொன்னான்.
அந்த டீக் கடையில் வேலை பார்க்கும் சிறுவன் 2 டீ எடுத்துக் வந்தான்.
முரளியும் சந்திரனும் டீ குடிக்கத் தொடங்கினர்.
அப்போது முரளி, டேய் மச்சான் உனக்கு தான் எல்லா வண்டியும் ரிப்பர் பார்க்க தெரியுமே. நீ தனியா ஒரு கடை போட வேண்டியது தானே.. என்று கூறினான்.
டே …. முரளி எனக்கு அதுக்கு எல்லாம் வசதி கிடையாது. அந்த ஐடியாவும் இல்லை.
அப்படி சொல்லாத சந்திரன் உனக்கு நிறைய நண்பர்கள் இருக்காங்க… அதுமட்டுமல்லாம நீ உன் நண்பர்களுக்கு எல்லாம் நிறைய உதவி செய்ற. அதனால அவங்க மூலம் உனக்கு வண்டி வந்துக்கிட்டு தான் இருக்கும். அதனால நீ தனியா கடை போடலாம்.
டே … முரளி அந்த வேலையே வேண்டாம் நீ உன் வேலையை பாரு… நீ வேனும்னா தனியா கடையை தொடங்கிக்கோ. என்ன ஆளை விடு என்றான் சந்திரன்
மச்சான் எனக்கு அந்த அளவுக்கு அனுபவம் இல்லை. அது மட்டுமல்லாம முழு வேலையும் எனக்கு தெரியாது. அதனால தான் உன்னை சொல்றேன்.
இப்ப எதுக்கு அந்த விஷயத்தை பற்றி பேசுற..
எங்க வீட்டு பக்கத்தில் ஒரு கடை ஒண்ணு வாடகைக்கு வருது…
நீயும் நானும் சேர்ந்து கடையை ஆரம்பிக்கலாம். பணத்துக்கு நான் ஏற்பாடு செய்றேன். உன் கிட்ட தொழில் இருக்கிறதால நாம இரண்டு பேரும் சேர்ந்தே செய்யலாம். சம்பாதிக்கு பணத்தில் செலவுக்கு போக மீதியை ஆளுக்கு பாதி எடுத்துக்கிடலாம் என்றான் முரளி.
டே ….முரளி அதெல்லாம் ஒத்து வாராது நீ உன் வேலையை பாத்துக்கு போ… என்று கூறினார்.
மச்சான்…. கொஞ்சம் யோசித்து இரண்டு நாளில் சொல்லு… நல்ல வாய்ப்பு உன்னை தேடி வருது… விட்டு விடாதே… கொஞ்சம் யோசித்து சொல்லு என்றான்.
சரி.. சரி யோசித்து சொல்றேன்…. நம்ம முதலாளி வந்துகிட்டு இருக்காரு உன் வேலையை போய் பாரு… என்றான் சந்திரன்.
இரவு வேலை முடிந்து சந்திரன் தனது வீட்டுக்கு சென்றான்.
தனது பெற்றோரிடம் பேசினான். அவர்களுக்கு அதில் உடன்பாடு இல்லை.
இப்ப எதுவும் வேண்டாம் ;கொஞ்ச நாள் கழித்து பார்க்கலாம் என்றனர்.
அதன் பின் சந்திரன் தனது நண்பர்களிடமும் இதை பற்றி பேசினான்.
அப்போது அவர்கள் சந்திரா… அந்த முரளி ரொம்ப மோசமானவன்… அவனை நம்பி இந்த வேலையில் இறங்காதே… நீ உன் வேலையை பாரு என்று அறிவுரை கூறினர்.
மறுநாள் காலை சந்திரன் வழக்கம் போல் கடைக்கு சென்றான்.
அன்றும் முரளி சந்திரனிடம் கூட்டாக கடை நடத்தலாம் என்று சந்திரனை கேட்டான்.
சந்திரன் யோசித்து பார்த்தான்… சரி அவன் சொல்வதை கேட்கலாம் என்று கடை தொடங்குவதற்கு சம்மதித்தான்.
கடைக்கான ஏற்பாடுகளை முரளி செய்தான். அவனுக்கு வாகனம் ரிப்பர் செய்யும் வேலை முழுவதும் தெரியாது. அதனால் வேலையை சந்திரன் பார்த்துக்கொண்டான்.
அவர்கள் இரண்டு பேரும் எந்தவித ஒப்பந்தமும் போடாமல் வெறும் வார்த்தைகளால் தங்களுக்குள் வருமானத்தை பிரித்துக் கொள்வதற்கான உடன்படிக்கையை பேசிக் கொண்டனர்.
முரளியும் சந்திரனும் தாங்கள் வேலை பார்க்கும் கடை உரிமையாளரிடம் புதிய கடை தொடங்குவதை கூறினர்.
உடனே அவர் சந்திரனை அழைத்து, முரளியை நம்பி செல்ல வேண்டாம் என்று அறிவுரை வழங்கினார்.
சந்திரனுக்கு வேறு வழியில்லாததால் முரளியுடன் கடை தொடங்கும் பணியில் ஈடுபட்டார்.
புதிய கடையும் தொடங்கப்பட்டது.
சந்திரனுக்கு நிறை நண்பர்கள் உண்டு. அதனால் அவர்கள் மூலம் நிறைய வண்டிகள் வரத் தொடங்கின.
முரளி கடைக்கு தேவையான முதலீடுகள் மட்டும் செய்துவிட்டு, சந்திரனுக்கு சிறு சிறு உதவிகளை மட்டும் செய்தான்.
மற்றபடி முழு வேலையையும் சந்திரனே செய்ய வேண்டி இருந்தது.
இதை பொருட்படுத்தாமல் சந்திரன் இரவும் பகலும் உழைத்தான்.
வருமானம் அதிகமாக வரத் தொடங்கியது.
முரளி கடை வாடகை, மின்சார செலவு மற்றும் அவனுக்குரிய சம்பளம் என்று பெருந் தொகையை மாதம் மாதம் எடுக்க தொடங்கினான்.
மேலும் இரண்டு சக்கர வாகனங்களை வாங்கி விற்கும் வேலையையும் செய்து பணம் சம்பாதிக்க தொடங்கினான்.
ஆனால் சந்திரனுக்கு குறிப்பிட்ட அளவு மட்டுமே பணம் கிடைத்தது.
இதையும் கண்டு கொள்ளாமல் சந்திரன் தொடர்ந்து வேலை பார்த்து வந்தான்.
முரளி தனது வசதி வாய்ப்பைகளை அதிகப்படுத்திக் கொண்டான்.
சந்திரன் அதே நிலையில் தான் இருந்தான். வாழ்க்கையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
ஒரு கட்டத்தில் முரளி தனது கடையில் மேலும் இரண்டு பேரை வேலைக்கு சேர்த்துக் கொண்டு, சந்திரனை ஓரம் கட்ட தொடங்கினான்.
இது சந்திரனுக்கு புரிய தொடங்கியது. நமது முழு உழைப்பையும் பறித்து கொண்டு தன்னை முரளி ஏமாற்றுகிறான் என்பதை உணர்ந்தான்.
ஒரு கட்டத்தில் இது குறித்து முரளியிடம் நேரடியாகவே சந்திரன் கேட்டான்.
முரளி நீ…. கொடுத்த வாக்குறுதியை மறந்துட்டியா… சம்பாதிப்பதில் செலவு செய்வது போக மீதியை ஆளுக்கு பாதி எடுத்துகிடலாம்னு கூறினாய்… இப்ப நீ மட்டும் அதிக அளவு பணம் எடுத்துக்கிட்டு எனுக்கு கொஞ்சமா கொடுக்கிறேயே இது நியாயமா என்று கேட்டான்.
டேய் …. மச்சான் நான் முதல் போட்டு இந்த கடையை ஆரம்பித்தேன். அப்புறம் எனக்கு வருமானம் வேண்டாமா? என்று திருப்பிக் கேட்டான்.
அப்போது தான் சந்திரனுக்கு உண்மை புரிந்தது.
உடனே முரளியுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டான்.
அப்போது கோபம் அடைந்த முரளி, சந்திரனை வேலையை விட்டு செல்லும்படி கூறினான்.
சந்திரன் கோபம் அடைந்தான்… இருந்த போதிலும் அதை கட்டுப்படுத்திக் கொண்டு கடையை விட்டு வெளியேறினான்.
நடந்த விபரத்தை நனது நண்பர்களிடம் கூறினான் சந்திரன்.
அப்போது அவனது நண்பர்கள்… டேய் மச்சான் அன்னைக்கே நாங்க சொன்னோம் நீ கேட்டகவில்லை.
இப்ப நீ ஒரு வார்த்தை சொல்லு… அந்த முரளி கடையை அடித்து காலி செய்துவிடலாம். அவனையும் நாலு தட்டு தட்டலாம் என்று கூறினார்கள்.
சந்திரன் அவர்களை தடுத்து நிறுத்தி… அதெல்லாம் ஒன்றும் தேவையில்லை..
அவனை விட்டுவிடுங்கள் என்று பெருந்தன்மையுடன் விட்டு விட்டு அடுத்து என்ன செய்யலாம் என்று யோசிக்க தொடங்கினான்.
அப்போது அவன் வசிக்கும் பகுதியில் புதியதாக ‘‘தொடக்கிய’’ நிறுவனத்தின் சர்வீஸ் ஷோரூம் திறப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தது.
சந்திரன் நேராக அங்கு சென்று தான் வாகனம் பழுது பார்க்கு டிப்ளமோ படிப்பு படித்து இருப்பதையும் 10 ஆண்டுகள் இதே தொழிலில் இருந்து வருவதையும் எடுத்துக் கூறினான்.
அதனை கேட்ட அந்த நிறுவனத்தின் மேலாளர், உடனடியாக சந்திரனை வேலைக்கு சேரும்படியும் அந்த நிறுவனத்தின் தலைமை மெக்கானிக் வேலை தருவதாகவும் மாதம் 20 ஆயிரம் ரூபாய் ஊதியம் தருவதாகவும் கூறினார்.
சந்திரன் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே கிடையாது. உடனே அந்த வேலையில் சேர்ந்தான்.
அந்த நிறுவனத்தில் தொடர்ந்து வேலை பார்த்து வந்தான்.
இதற்கிடையே முரளியின் கடையில் வேலை பார்த்துக் கொண்டிருந்த 2 ஊழியர்கள் வேலையை விட்டு சென்று விட்டனர்.
முரளிக்கு வாகனம் ரிப்பர் செய்ய முழுவதும் தெரியாததால் அவனால் கடையை நடத்த முடியவில்லை… அவனது தொழிலும் முடங்கியது.
இப்படியே 6 மாதம் ஓடியது.
சந்திரனுக்கு பதவி உயர்வும் சம்பள உயர்வும் கிடைத்தது. அவன் உயர்ந்த நிலைக்கு சென்றான்.
முரளி தொழில் முடங்கியதால் கடையை மூடம் நிலை ஏற்பட்டது. வருமானம் இன்றி முரளி அவதிப்பட்டான்.
இந்த விபரம் சந்திரனின் நண்பர்களுக்கு தெரிந்ததும்….
உடனே அவர்கள் சந்திரனிடம் முரளியின் நிலையை எடுத்துக் கூறினர்.
சந்திரன் அவர்களிடம் ஒன்றும் கூறவில்லை. அதை விடுங்கடா… அவன் என்ன ஆனா நமக்கு என்ன என்று கூறினான்.
இப்படிய காலம் ஓடியது.
முரளிக்கு வருமானம் இல்லாததால் வேலைக்கு செல்ல முயற்சி செய்தான்.
முரளி சந்திரனுக்கு செய்த துரோகம் –அந்த பகுதியில் உள்ள மோட்டார் சைக்கிள் பழுது பார்க்கும் தொழிலில் உள்ளவர்கள் அனைவருக்கும் தெரிந்தது.
அதனால் முரளியை யாரும் வேலைக்கு எடுத்துக் கொள்ளவில்லை.
ஒரு நாள் காலை சந்திரன் தனது வண்டியில் வேலைக்கு சென்று கொண்டிருந்தான்.
எதிரே முரளி பரிதாபமாக நடந்து வந்து கொண்டிருந்தான்.
சந்திரனை பார்த்ததும்… முரளி தலையை குனிந்து கொண்டு சாலையில் இருந்து கடைக்கு சென்றான்.
அவனை பார்த்ததும் சந்திரன், தனது மோட்டார் சைக்கிளை ஓரமாக நிறுத்திவிட்டு
சந்திரன் இருக்கும் இடத்திற்கு வந்தான்.
சந்திரனை பார்த்ததும் முரளிக்கு வாயில் வார்த்தைகள் வரவில்லை. தலையை குனிந்து நின்று கொண்டிருந்தான்.
டே…. முரளி என்னடா… என்ன செய்ற… ஏன் இப்படி இருக்கிற என்று கேட்டான்.
உடனே முரளி டே ….மச்சான் என்னை மன்னித்திடுடா… என்று அழத்தொடங்கினான்.
தனது நிலையை எடுத்துக் கூறி… தான் வேலை எதுவும் இல்லாமல் வறுமையில் இருப்பதாக கூறினான்.
உடனே சந்திரன்… தான் வேலை பார்க்கும் நிறுவனத்திற்கு வந்த தன்னை பார்க்கும்படி கூறிவிட்டு, அவன் கையில் 500 ரூபாய் கொடுத்தான்.
முரளி பணம் வேண்டாம்… வேலை ஏதாவது வாங்கிக் கொடுத்தா நல்லது என்றான்.
சரி என்னை வந்து பாரு… நான் உனக்கு வேலை தருகிறேன் என்று கூறினான்.
அதன் பின்னர் சந்திரன் வேலைக்கு கிளம்பி சென்றான்.
சிறிது நேரத்திற்கு பின்னர் முரளி சந்திரனை பார்க்க அவன் வேலை பார்க்கும் நிறுவனத்திற்கு சென்றான்.
சந்திரன் அதற்கு முன் அந்த நிறுவனத்தின் மேலாளரிடம் முரளிக்கு வேலை வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டான்.
அதன்பேரில் முரளிக்கு வேலை வழங்கப்பட்டது.
உடனே முரளி சந்திரனின் கையை பிடித்து கண்ணீர் மல்க நன்றி தெரிவித்துக் கொண்டான்.
இந்த விஷயம் சந்திரனின் நண்பர்களுக்கு தெரியவந்தது.
உடனே அவர்கள் சந்திரனை சந்தித்து… எதுக்கு முரளியை வேலையில் சேர்த்து விட்டாய் என்று சண்டை போட்டனர்.
டேய் ….நமக்கு தீங்கு செய்தவனுக்கு கொடுக்கிற பெரிய தண்டனை எதுனா… நம்ம அவனுக்கு நன்மை செய்றதுதான் என்று சந்திரன் கூறினான்.
அவர்களும் சந்திரனின் நல்ல உள்ளத்தை பாராட்டினார்கள்.