பார்க்காத நிமிடங்கள்

மணி மனசுக்குள் ஒரு ரணப் போராட்டமே நடந்து கொண்டிருந்தது.
சீமாவைப் பார்க்காத நிமிடங்கள் அவனுக்குள் ஒரு சிதையவே மூட்டி வைத்தது.
அவனின் நிமிடங்கள் நெருப்பாய் உயர்ந்து நின்றன.
ஐந்து விரல்களுக்கும் நடுவில் ஆறாவது விரலாக சிகரெட் முளைத்தது. அவன் உதட்டுக்கும் விரலுக்கும் ஒரு போராட்டமே நடற்து கொண்டிருந்தது. புகையும் விரல்களில் அவனின் ஆசை ஆவியாகிக்கொண்டிருந்தது.
“சீமா ……. சீமா …. ச்சீ…
இந்த இரண்டெழுத்துப் பெயர் தானே என்னை ரணம் செய்தது. அவளை நான் பார்த்திருக்கக் கூடாது. பேசியிருக்கக் கூடாது இவ்வளவு பெண்களின்னும் இந்தக் கல்லூரியில் இவள் மட்டுமேன் என் இமைகளில் விழுந்தாள். என்னை விழிகளில் சுமந்தவள் என்னுள் வலிகளை விதைத்து விட்டாள்.
பேசாத அவளுக்கு என்ன தெரியும் என் உயிர்படும் ரணம் . இத்தோடு எறநூறு சிகரெட்டைப் பிடித்தாகி விட்டது. நெஞ்சுக் கூட்டுக்குள் நிறைந்தவள் புகை சுமையில் வெளிவர மறுக்கிறாள். உயிர் எங்கு இருக்கிறதென்று எந்த விஞ்ஞானமும் விளக்கவில்லை காதலுக்கு எது பயிர் என்பது காதலிப்பவளுக்குத் தெரியுமா?
ஒருதலைக் காதல் இருதலைக் காதல் காதலில் விளைச்சலை இந்த வார்த்தையில் எந்த வார்த்தையில் அடைப்பது வறண்ட நிலத்தில் நீர் புகுவதால் தான் ஈரமாகிறது. ஒரு உதடு திறக்காமல் இன்னொரு செவி கேட்பதில்லை. நான் சொன்ன காதலை நீ நிராகரிக்கலாம்.
ஆனால் உன் நெஞ்சுக்கு எது நிஜமென்பதுதெரியும்
கோடிப் பெண்கள் கூடிவாழும் இந்த பூமியில் உன் ஜோடிக் கண்களை நேசித்தது என்பாவம் . எத்தனை பெண்களைக் கடந்திருப்பேன். இப்படி என்மனது வலித்ததில்லை சீமாவைச் சிந்தித்த மணியின் கண்கள் நீரில்
நிறைந்தன . அனிச்சையாகவே அவன் கைகள் சிகரெட்டை உதட்டுக்குக் கொண்டு போயின.
ஒரு ஆண் ஒரு பெண்னைக் காதலிப்பது குற்றமா? நேசிப்பது தவறா?
என் நெஞ்சுக் கூண்டுக்குள் உன்னை நிலைநிறுத்தியது யார் குற்றம்? மனதுக்கு தண்டனை ஒரு எந்த நீதிமன்றத்தால் முடியும்? உன் கண்களைக் கவனித்த என் இதயத்திற்கு கோடிக் கங்குகளின் உஷ்ணம் தான் பரிசா?
சீமா நீ ஏன் என்னைப் புரிஞ்சுக்கிறமாட்டேங்கிற?
உன்ன எனக்குப் பிடிக்கும் அவ்வளவு தான் என் நெஞ்சுக் கூட்டுக்குள் நிறைந்த உன்னை என் விழிப்படகில் மிதக்க விட்டு என் உதடு வழியே உத்ரவாதம் கேட்டேன் . நீ ஏன் என்னை உதறித் தள்ளினாய்?
நீ வேண்டும் என்று சொல்வதற்கு எனக்கு எப்படி உரிமை உள்ளதோ? அப்படியே நீ என்னை வேண்டாமென்று சொல்வதற்கு உனக்கும் உரிமை அதிகாரம் உண்டு.
ஆனால் விளைந்த என் அன்பை நீ கொச்சை படுத்தியது தான் எனக்குக் கோபம்.
நீ என்னை வேண்டாமென்று சொன்னதைக் கூட என்னால் ஏற்றுக் கொள்ள முடிந்தது.
ஆனால் மற்றவர்களிடம் சொன்ன குற்றச் சாட்டை மட்டும் என்னால் தாங்க முடியவில்லை . என் நடவடிக்கைகளுக்கு நங்கூரம் அடித்து விட்டு இன்று நாடகமாடுகிறாய் .உன்னால் எப்படி முடிகிறது?
நான் என்ன சொன்னேன் . ஒர் உயிர் இன்னொரு உயிர் மீது பாசம் வைத்தது பிழையா?
உன்னை என் தாயாய்… நான் உனது தாயாய்… நினைத்து குற்றமா?
அடிமனதின் ஆழத்தில் முளைத்த அன்பிற்கு நீ ஆணியடித்து விட்டாய் …..சீமா ….. என் செல்லமே…. பெண்ணாய்ப் பிறந்து நீ தான் ஏதோ ஒரு ஆணுக்கு தானே நீ வாழ்க்கைப்படப் போகிறாய். அது ஏன் நானாக இருக்க நீ நினைக்க வில்லை.
ச்சே …. மனசு ரணமாய் வலிக்கிறது சீமா
உனக்குத் தெரியுமா? என் இரவுகள் எல்லாம் நீ தான்; என் வானத்தில் கோடி நட்சத்திரங்கள் கொட்டிக் கிடந்தாலும் என் துருவ நட்சத்திரம் நீ தான் என்பது தெரியுமா?
உன் ஒற்றைக்கல் மூக்குக்திக்குள் ஒரு கோடி மின்னல்களை ஒளித்து வைத்துள்ளாய் . அது தான் என் ஜீவஒளி என்பது உனக்கு தெரிய நியாயமில்லை தான் . உலகுக்கு எது வோண்டுமானாலும் திசைகள் இருக்கட்டும். என் திசையின் மூலமே உன் முகம் தான் சீமா.
என் காதல் உன் வார்த்தையில் சிக்கி தற்கொலை செய்து கொண்டது. உன் ஒற்றைச் சொல்லில் என் காதல் உயிர்பிறக்கும் ; இறந்த பிறகும் உயிர்பெறும் வித்தை காதலில் தான் நிஜம் சீமா .நீ என்னைக் கடக்கையில் என்னுள் அவ்வளவு பூக்கள் பூக்கிறதென்ன உனக்குத் தெரியுமா? உன் சின்னச் சிரிப்பில் சில சிகரங்களைச் சுமந்த என் மனது உன் கோபத்தால் நிறைய எரிமலைகளை உற்பத்தி செய்கிறது.
சீமா…. என் காதலி உன்னைக் காதலிக்கிறேன் என்று சொல்ல மாட்டேன் .ஏனெனில் காதல் என்பது உன் அகராதியில் கெட்ட வார்த்தை போல. உன் பதில் வரும் வரை காத்திருப்பேன் .அதுவரையில் என் துணையாக இந்தப் புகை இருக்கும். இல்லை நான் இறந்ந பிறகு சதை இருக்கும் என் விரல்களில் விளையாடும் சிகரெட்டுக்கு என்னைப் பிடித்திருக்கிறதே சீமா. என்னை உனக்குப் பிடிக்காதா?
அது வரையில் என் உதடுகளைச் சுடாமல் இருக்க வேண்டுமென்று என் சிகரெட்டுக்காவது சொல்லிவிட்டுப்போ
ராஜா செல்லமுத்து