பூக்குழி

சிறுகதை ராஜா செல்லமுத்து

 

மார்கழி மாதத்துக் கொட்டும் பனியில் மளமளவென எரிந்து கொண்டிருந்தது ஐயப்ப பக்தர்களின் பூக்குழி.
விறகுக்கட்டைகளை எரியும் தீயில் மேலும் வீசிக் கொண்டிருந்தார்கள். எரியும் தீயில் விழுந்த கட்டைகள் தீயோடு தீயாய் ஐக்கியமாயின. சாத்தையா சுவாமிகள் தலைமையிலான ஐயப்பக்தர்கள் குழு பூக்குழியில் இறங்கத் தயாராக இருந்தார்கள்.
கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை சாமியோவ் … ஐயப்போ…
சாமி சரணம் ஐயப்ப சரணம்.
என்ற பஜனைப் பாடல்கள் கீற்றுப் பந்தலையும் தாண்டி ஊரில் எல்லை வரை கேட்டுக்கொண்டிருந்தது.
இந்த வருசம் எத்தன கன்னிச்சாமி இருக்காங்க சாமி
“எட்டுப்பேரு சாமி”
“ம்”
“பூக்குழி எறங்குவாங்களா?
“எறங்குறேன்னு சொல்லியிருக்காங்க சாமி’’
” ம்…. கன்னிச்சாமிக எல்லாம் நல்லா துடியா இருப்பாங்க . அவங்களுக்கு பூக்குழி எறங்க ஏற்பாடு பண்ணுங்க சாமி என்ற கட்டளையை விட்டு நகர்ந்தார் சாத்தையா சுவாமிகள்.
வ.உ.சி. திடல் முழுக்க மக்களின் கூட்டம் மண்டிக் கிடந்தன. நடைபாதை வியாபாரிகளின் கூட்டம் அதிகமாகவே இருந்தது.
மளமளவென எரியும் தீயில் குளிருக்கு இதமாய் சூடு வாங்கிக் கொண்டிருந்தது. மாலை போடாத கூட்டம் இந்த சாமிக எல்லாம் சபரிமலைக்கு எப்படி போறாங்களாம்?
கொஞ்சப் பேரு பாதயாத்திரை, கொஞ்சப்பேரு பஸ்லதான் போறாங்க போல
நம்ம ஊர்ல தாங்க இந்த பூக்குழி வழக்கும் ரொம்ப வருசமா நடந்திட்டு இருக்கு
இது கடளோட பெரி சக்திங்க நம்ம சுத்துபட்டுல இருக்கிற மொத்த மக்களும் சேந்து பூக்குழி எறங்குறது. பெரிய விசயம்ங்க. எல்லாம் சாமியோட சக்தி என பேசிக்கொண்டே குளிர் காய்ந்து கொண்டிருந்தது கூதல் கூட்டம். தீ நாக்குகள் பனி விரல்களை விரட்டி விரட்டி வெட்டிக் கொண்டிருந்தன .விறைத்த கைகளை தீயின் பக்கம் நீட்டி சூடு வாங்கிய உள்ளங்கைகளை இரண்டு பக்க கன்னங்களிலும் ஒத்தடம் கொடுத்தார் குளிர்வாசிகள்.
பஜனைப் பாடல்களின் சத்தம் விடாமல் கேட்டுக் கொண்டே இருந்தது.
பூக்குழி இறங்கும் புனித நிகழ்வைக் காண மக்கள் பின்னிரவில் நிலா பயணப்படும் பனிநேரம் எரிந்துக்கொண்டிருந்த கங்குகளைத் தட்டினார்கள். கட்டைக் கங்குகளாயிருந்த தீக்கங்குகள் சின்னச் சின்னதாய்ச் சிதறின
இதுலதான் தீ மிதிப்பாங்களா?
“ஆமா”
“ரொம்ப சூடா இருக்குமே”
“ஆமா, எல்லாம் சாமி பாத்துக்கிரும். என்னய்யா சொல்ற. எல்லாத்தையும் சாமிபாத்துக்கிருமா?
“ஆமா , எல்லாம் தெய்வ சக்தி தீயெல்லாம் சாமிகளுக்கு பூமெத்த மாதிரி அவங்களுக்கு சூடெல்லாம் தெரியாது என்றார் வேடிக்கை பார்த்து கொண்டிருந்த ஒருவர்.
முரண்டு பிடித்து சிவப்புக் கங்குகளாய் நின்றிருந்த தீக்கங்குகளைத் தடியால் அடித்துச் சமப்படுத்தினார் ஒரு சாமி . காவி உடை யுடுத்திய சாமிகளெல்லாம் தீக்கங்குகளைப் பார்த்துவிட்டு சாதாரணமாய் நின்றிருந்தார்கள். வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு மட்டும் தான் பயத்தில் வேர்த்துக் கொட்டியது.
அடித்து சமமாக்கப்பட்ட தீக்கங்குகள் ஒரே தளத்தில் தீப் பாதையாய்க் கிடந்தன.
யப்பா எவ்வளவு தீக்கங்குகன்னு பாரு. இங்க நிக்கும் இம்புட்டு சூடா இருக்கே. இதுல எப்படித்தான் எறங்குவாங்கன்னு தெரியலையே.
எல்லாம் சாமியோட சக்திங்க
யாருக்கும் ஒண்ணும் ஆகாது,
என்னது ஒண்ணும் ஆகாத? ஆச்சர்யமா இருக்குங்க
அதுதான் மால போட்டுருக்காங்க. வெரதம் இருக்காங்க .அதான் அவங்களுக்கு கடவுள் சக்திய குடுத்திருக்காரு என்ற பேசிய படியே நின்றது வேடிக்கை பார்க்க வந்த கூட்டம் எல்லா சாமிகளும் வந்திட்டாங்களா?
ஆமா சாமி
எல்லாரையும் வரிசையா நிக்கச் சொல்லுங்க.  சரிங்க சாமி என்ற இன்னொரு சாமிசாமிகளை வரிசைபடுத்தி நிறுத்தினார். எல்லாம் ஒண்ணா ஓடனும் ஒருத்தர ஒருத்தர் முந்திட்டு ஓடக்கூடாது.
சரியா சாமி
சரிங்க சாமி என எல்லாச்சாமிகளும் தலையாட்டினார்கள்.
தீயின் நான்கு பக்கமும் எலுமிச்சைப் பழங்களை சொல்லி நரநறவெனப் பல்லைக் கடித்தார் .ஏதோதோ சொல்லி முணங்கினார்.
ம்… சாமிகள் பூக்குழியில் இறங்கலாம் என அருள் வந்து கத்தினார்.
வரிசையாய் நின்றிருந்த சாமிகள் படப்படவென தீக்கங்குகள் மேலே சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா என்ற பெருங்குரலோடு ஓடினார்கள். வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த கூட்டம் பக்திப்பரவசத்தில் கன்னத்தில் போட்டுக் கொண்டார்கள்.
சாமிகளின் ஊடே அந்த இருளாயிக் கிழவியும் ஓடி வந்தாள்.
ஏய் புடிடா அந்தம்மாவ புடிடா என ஆட்கள் கத்தக் கத்த இருளாயிக் கிழவி பூக்குழிக்குள் மிதித்து நசுக்கி எதிர்புறம் திரும்பினாள்.
ஐயய்யோ என்னாச்சு யார்ரா இந்தக் கூட்டத்தில இருளாயிய விட்டது என்று ஒருவர் முறைத்துக் கேட்டார்
தெரியலீங்க ;அந்தம்மாவா ஓடி வந்திருச்சு என்று சாமிசொல்ல தீயை மிதித்து ஒரு திசையில் போன இருளாயி மறுதிசையிலும் தீயில் மிதித்து வெளிவர ஆசைப்பட்டாள்.
அவளைப்பிடித்து அடக்கினார்கள்.
‘‘ஏய்…. இந்த கிறுக்கு பொம்பிளைய அந்த பக்கம் கூட்டிட்டு போங்க சாமிகள்’’ விரட்டினார்கள்.
ஸ்ஸ்ஸ்ஸ்…. என்று சூடு தாளாமல் கால்களைப் பிடித்து உட்கார்ந்தனர் .கன்னிச் சாமிகள் ஒரு சில சாமிகளுக்குகூட கால்களில் தீக்காயங்கள் ஏற்பட்டன.
இருளாயிக் கிழவியின் பாதங்களில்சிறு தீக்காயங்கள் கூட இல்லை எல்லாம் எல்ல வல்ல ஐயப்ப சாமிக்கே வெளிச்சம்