மீன்பொரி

அல்லியும் தாமரையும் பூத்துக் குலுங்கும் மாரியம்மன் கோயில் தடாகத்தில் நீர்ப் பூக்களாய் நீந்தி வாழும் மீன்களுக்கு நித்தம் பொரி போடுவதை நிறுத்த மாட்டார் நித்தியானந்தம் .
பொழுது மாறி மாறிப் புலர்ந்தாலும் பொரி ப்போடும் பழக்கம் மட்டும் நித்தியானத்தடமிருந்து மாறாதிருந்தது.
‘‘என்ன நித்தியானந்தம் சார். நானும் இருபது முப்பது வருசமா பாத்திட்டு தானிருக்கேன். பொரி போடுறத நீங்க நிறுத்த மாட்டேங்கிறீங்களே’’ அவங்கலாய்த்துச் சொன்னார் சுந்தர்.
அதிகாலைச் சூரியன் சுள் என்று சுட்டெரிக்க ஆரம்பிக்கும் ஏறும்பொழுதில் அலைமிதக்காத அந்த கோயில் குளத்தில் உயிர்ப் பூக்களாய் மேலே எழும்பி எழும்பி வந்து நித்தியானந்தன் இறைந்த பொரி யை தன் சின்ன வாயால் கொருக் கொருக் என்று கடித்துத்தின்ன ஆரம்பித்தன மாரியம்மன் கோயில் குளத்து மீன்கள்.
நித்தியானந்தன் பொறியை அள்ளிப் போட்டுக்கொண்டே இருந்தார்
“சர…. சர…. சர என விழுந்த பொரி களை பாய்ந்த வந்து பிடித்தன மீன்கள். பத்தாவது படிக்கு கீழேயும் கீழிருந்து மூன்றாவது படிக்கு மேலேயும் உட்கார்ந்திருந்தார் நித்தியானந்தம்.
நித்தியானந்தம் சார்…
“ம்”
“இவ்வளவு வருசமா பொரி போட்டு என்னத்தக் கண்டீங்க? அவரைவிட ஒருபடி மேலே உள்ள படியில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார் சுந்தர்.
இல்ல சுந்தர் வாயில்லாத இருந்த ஜீவனுங்களுக்கு உணவு குடுக்கிறதில ரொம்ப சந்தோசப்படுறேன் . மத்த சீவராசிக மாதிரி இல்ல இந்த மீன்கள் கொளத்த விட்டு போக முடியாது.
படிதாண்டிப் போயி பசியப் போக்க முடியாது. கடவுளோட மச்ச அவதாரங்கள் தான் இந்த மீன்கள் என்ற படியே பொரி யை அள்ளிப் போட்டுக் கொண்டிருந்தார் நித்தியானந்தம்.
தடாகத்தில் தத்தளித்துக் கொண்டிருந்த தவளையை தண்ணீர்ப் பாம்பு தாவிக் குதித்து தின்ன முற்பட்டபோது தவளை தன் தலையை தண்ணீருக்குள் முக்கிக் கொண்டு முங்கு நீச்சலில் முன்னேறியது.
நீர்மேல் விழுந்த பொரி களைத்தின்று கொண்டிருந்தன குளத்து மீன்கள்.
ஏன் நித்தி சார் ? இந்த மீனுகளை எல்லாம் கொழம்பு வச்சு சாப்பிட்டா எப்படியிருக்கும் என்றார் எச்சில் ஒழக
‘‘ச்சே நீயெல்லாம் ஒரு மனுசனாய்யா சாமி மீனுகளை போயி சாப்பிடனும்னு சொல்ற? ஒங்கூட கூட்டு வச்சதே பெரிய தப்புய்யா’’
என்னத்தங்க தப்பா கேட்டேன் மீனு நல்லாயிருக்கு சாப்பிடலாமான்னு கேட்டேன் தப்பா என்ன?
தப்புதான் சாமிய போயி சாப்பிடணும்னு சொல்ற போய்யா அந்தப்பக்கம் என்று கோபமாய்த்திட்டினார் நித்தியானந்தம்.
அவர் பேசுவதை கொஞ்சம் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தன மீன்கள் பொரி முழுவதும் தீர்ந்து போனபின் மீன்களிடம் சொல்லி விட்டுப் படிகளில் ஏறினார்.
ஏய்…. யார்றா அவன்? பேசாம சாமி மீனப்போயி கொக்கி போட்டுட்டு இருக்கான் பாரு. போடா என விரட்டினார். நித்தியானந்தம் அவரின் அதட்டல் குரலைக் கேட்ட சிறுவர்கள் மீன் கொக்கியை அப்படியே போட்டு
ஓடினார்கள் .புள்ளைகள சும்மா விட மாட்டானுக போல. மீன்களை ஒரு பார்வை பார்த்து விட்டு வீடு திரும்பினார் நித்தியானந்தம் அன்று இரவு முழுவதும் பலத்த மழை பார்க்குமிடமெல்லம் சேறும் சகதியுமாய் இருந்தன. இருந்தும் நித்தியானந்தம் மீன்களுக்கு இரை போடுவதை நிறுத்தாமல் அன்று பொறியை வாங்கிக் கொண்டு குளக்கரை வந்தார்.
ஏய்யா இந்த மழையிலயும் மீனுகளுக்கு பொறி போடணுமா? வீட்டுல இருக்க வேண்டியது தான. அவர் மீது அக்கரைப் பட்டார் ஒருவர் .
பாவம்ங்க மீனுக. மழ பேயும் ;ஆனா அதுகளுக்கு இரை கெடைக்குமா? என்ற பழயே படிகளில் இறங்கினார். மழையாதலால் கோயிலில் கூட்டம் அதிகம் இல்லாமல் இருந்தது. ஈரம் சுமந்த படிகளில் மெல்ல மெல்ல இறங்கினார்.
நித்தியானந்தனின் வாசனையைப் பார்த்த மீன்கள் தண்ணீருக்கடியிலிருந்து மெல்ல மெல்ல மேல வந்தன . தம் நன்றியைத் தெரிவித்தன .ஒன்று இரண்டு மூன்று என படிகளில் இறங்கின.
நித்தியானந்தன் அடுத்ததடுத்த படிகளில் இறங்கிய போது அவரின் கால்கள் அவரின் செயல் பாட்டிலிருந்து
நழுவின ;படிகளிலிருந்து கீழே விழுந்தார். தனக்கு இரை போடும் மனிதன் குளத்தில் தவறி விழுந்ததைப் பார்த்த மீன்கள் பதறி ஓடின.
கையிலிருந்து மீன்பொட்டலம் தண்ணீரில் சிதறி விழ நித்தியாானந்தம் ஆழக்குளத்தில் அப்படியே விழுந்தார். நீர்ப்பரப்பில் விழுந்து சிதறின பொறிகள்.
கீழே கீழே என குளத்தின் அடியாழம் வரை சென்று பட்டென்று விழுந்தார் நித்தியானந்தம். நீரின் மேற்பரப்பில் கிடந்த பொரி களைத் தின்ன எந்த மீனும் வரவில்லை. காற்றின் அலை வரிசைகளில் சென்றன பொரிகள்; மழையாதலால் குளத்திற்கோ  கோவிலுக்கோ யாரும் வரவில்லை.
நீரில் மிதந்தன பொரிகள் மீன்கள். மேலே வரவில்லை கீழே மூச்சையாகிக்கிடந்த நித்தியானந்தத்தை சுற்றியே வந்து கொண்டிருந்தன . நித்தியானந்தம் தண்ணீர் குடித்துத் தண்ணீர் குடித்து இறந்துபோனார்.
மீன்கள் உண்ணாமல் உண்ணாவிரதம் இருந்தன காற்றின் திசைகளில் பறந்தன ஈரம் சுமந்த பொரி கள்.
நித்தியானந்தத்தைக் காணாமல் தேடினர்
இந்த மழையில எங்க போனாரு. இவரைத் தேடின உறவுகள்.குளக்கரை வந்தனர்.
அங்குமில்லை
எங்க போனாரு இவரு?  நித்தியானந்தம் எங்கும் அகப்படவில்லை.
பொரி  எல்லாம் தண்ணி மேல கெடக்கு. ஆளக் காணாமே தேடியது உறவுகள் ;ஒன்று இரண்டு மூன்று என நாட்கள் கடந்தன.
குளத்தில் விழுந்த நித்தியானந்தன் உடல் விறைத்துப் போய் தண்ணீரின் மேலே வந்து மிதந்தது. அவருடன் அத்தனை குளத்து மீன்களும் செத்து மிதந்தனது
ஊர் மக்கள் கூடினார்கள்.
என்னவொரு பாசம்யா …… மீனுக்கு எர போட்ட மனுசன் செத்து போனவுமே அத்தன மீனுகளும் செத்து மெதக்குதே. ஆர்ச்சர்யமா இருக்குங்க…
ஒரு உசுருமேல நாம அவ்வளவு பாசம் அன்பு காட்டுறமோ ?அதுக்கு தகுந்த மாதிரி தான் அதுகளுக்கு நம்ம மேல பாசம் காட்டும் .
அதுக்கு நித்தியானந்தம் தான் நல்ல உதாரணம் எனப் புகழ்ந்தது ஊர்.