அக்கம் பக்கம்

“ஏம்மா நீங்க சொல்ற அத்தனையும் திருடன் சொன்னானா?
“ஆமாங்க”
“எப்படி? ’’என்று வியப்பாகக் கேட்டார் இன்ஸ்பெக்டர்
சிவகாமி அழுது கொண்டே பதில் சொன்னாள்.
எம்பேரு சிவகாமி யான்னு கேட்டான்
“ம்”
வீட்டு நம்பர் சொன்னான்.
அப்பெறம்? ஆர்வ மிருதியில் கேட்டார் இன்ஸ் பெக்டர்
என்னங்க நீங்க சொல்றது ரொம்ப ஆச்சர்யமா இருக்கு
எனக்கே தெரியல சார். ஒரு திருடனுக்கு இவ்வளவு எப்படி தெரிஞ்சுச்சுன்னு நெனச்சாலே ஒரு மாதிரியா இருக்குங்க என்று மேலும் தேம்பினாள் சிவகாமி.
எப்படி வீட்டுக்கு வந்தான் என்று இன்னொரு முறை கேட்டார் . இன்ஸ்பெக்டர் இது செல்வராஜ் வீடான்னு கேட்டான்.
ஆமான்னு சொன்னேன் .
அப்பெறம் …
நீங்க சிவகாமிதானேன்னு என்னோட பேரச்சொன்னான்.
ஆமான்னு சொன்னேன் .அப்பெறம் தான் ஏதோ கம்பெனியில இருந்து வாரோம் . ஒங்களோட பேருக்கு பரிசு விழுந்துருக்குன்னு சொன்னான்.
ஓ… அப்படியான்னு கேட்டேன்
ஆமாங்க ஒங்களோட பேருக்கு எங்க கம்பெனி மூலமா பரிசு விழுந்திருக்குன்னு சொன்னான். சரி நம்ம பேர சொல்றானேன்னு வீட்டுக்குள்ள விட்டேங்க. ரெண்டு பேரு வந்தானுக .வீட்டுக்குள்ள நொழஞ்ச வேகத்தில வீட்ட பூட்டிட்டானுக.
“ஏன் வீட்டப் பூட்டுனீங்கன்னு கேக்குறதுக்குள்ள என்னோட கழுத்தில கத்திய வச்சு
அழுத்திட்டானுக . என்னடான்னு கேக்குறதுக்குள்ள என்னோட வாயில துணிய வச்சு அமுக்க என்னைய ஒரு மூலையில கட்டி வச்சுட்டானுக. படுபாவிப்பயக ” என்று வறட்சி அழுகையாய் அழுதாள் சிவகாமி.
நீங்க சொல்றது ரொம்ப ஆச்சர்யமா இருக்கும்மா. ஒரு வேள எவனாவது ஒங்க பேர்ல ஏதாவது தெரிஞ்சு வந்து திருடியிருப்பானா?
தெரியலையே திருடுறவன் ராத்திரி வருவான் . கத்திய காட்டி மெரட்டி திருடுவான்னு கோவிப்பட்டிருக்கோம். ஆளுகள புடுச்சுருக்கோம். நீங்க சொல்றது… எனக்கு மட்டுமில்ல .எங்க டிபார்டுமெண்டடுகே ஆச்சரியமா இருக்கும்மா என்று குழப்பதில் தலையிலிருந்து தொப்பியைக் கழற்றி விட்டு சொட்டைத் தலையில் வேர்த்திருந்த வியர்வையை கைக்குட்டையால் ஒற்றி ஒற்றி எமுத்தார் இன்ஸ்பெக்டர்
இந்த விசித்திரக் கேஸை வசாரிக்கும் போது வியப்பாகப் பார்த்துக் கொண்டிருந்தனர் அந்த ஸ்டேசன் போலீஸ்காரர்கள்.
ம்…. எப்படிக் கண்டு பிடிக்கிறது. இங்க பாரும்மா இங்க போஸ்ட்ல ஒட்டி வச்சுக்கிற திருடனுகெல்லாம் திருட்டயே தொழிலா பண்ணுறவனுக . அவனுகெல்லாம் யாரு வீட்டுக்கும் போயி பேர் சொல்லியெல்லாம் திருடமாட்டானுக. அதுவும் ராத்திரி திருடனுக தான் .நீங்க சொல்ற ஆளுகள பாத்தா இந்த தொழிலுக்கு புதுசா வந்த ஆளுக மாதிரி தெரியுதேம்மா என்றார் இன்ஸ்பெக்டர்.
வீட்டுல ஒரு பொட்டு தங்கமில்ல தாலியக்கொடியையும் சேத்து அடிச்சிகிட்டுப் போயிட்டானுக. வீட்டுல கொஞ்சங்கூட பணமில்லீங்க .அதுவும் போச்சு .இத எப்படியாவது கண்டுபிடிச்சி குடுங்க என்று மேலும் மேலும் தேம்பினாள் சிவகாமி .
இன்ஸ்பெக்டர் குழப்பத்தின் உச்சிக்கே போனார்.
சரி வீட்டுக்கு போங்க .முடிஞ்ச அளவுக்கு கண்டு பிடிக்க முயற்சி பண்றோம்.
என்னது முடிஞ்ச அளவு முயற்சி பண்றீங்களா? முடியாது சார் வீட்டுல ஏதுமில்ல .சீக்கிரமே கண்டு பிடிங்க…
சரி போங்க நீங்க மட்டும் தானே வந்திருக்கீங்க ஒங்க வீட்டுக்காரர் எங்கம்மா
அவரு வெளியேபோயிருக்காரு. எப்ப வருவாரு? நாளைக்கு தான் வருவாரு,
ஓ, அப்படின்னா ஒங்க வீட்டுக்காரரு இல்லாத நேரத்தில கைவரிசைய காட்டியிருக்கானுக இல்ல,
ஆமா சார்
எங்க போயிருக்காரு?
வேல விசயமா வெளியே போயிருக்காருங்க.
“ம்” சரி நாங்க கூப்பிடும் போது வாங்க என்று சொல்லி அனுப்பி வைத்தார் இன்ஸ்பெக்டர்.
சிவகாமி  வருத்தத்துடன்  அந்தக்காவல் நிலையத்தைவிட்டு வெளியேறினாள்.
இது ரொம்ப ஆச்சர்யமா இருக்குங்க வீட்டு நம்பர் பேரு அட்ரஸ் எல்லாம் சொல்லி ஒருத்தன் திருடுறான்னா இது சாதாரணமா திருட்டா இருக்காது ஏதோ பிளான் பண்ணித்தான் அடிச்சிருக்கானுக.
ஒருவேள அவனுக சொந்தக்காரனுகளா?
ம் ….இருக்கலாம்.
இல்ல ஏதாவது இவங்க விசயங்கள தெரிஞ்ச யாரோ வந்து திருடியிருப்பாங்களோ ? காவல் நிலையத்திலிருந்து காவலர்களுக்கு பதற்றம் பற்றிக் கொண்டது.
யாராயிருக்கும் பிடிகிடைக்காமலே பிய்த்துக் கொண்டார்கள் போலீஸார்கள்.
சிவகாமி புலம்பிய படியே வீடு திரும்பினாள் ;எல்லாம் வெறிச்சோடியே கிடந்தது.
எந்த எடுபட்ட பயலுகளோ இந்த மாதிரி பண்ணிட்டு போயிட்டானுகளே. பேரச்சொல்லி அட்ரஸ் சொல்ற அளவுக்கு எவன் வந்து திருடுனான் குழம்பினாள் சிவகாமி.
ஏன்டா  …. இந்த வேல நல்லா இருக்கே. இப்படி எவனாவது போன்ல வீட்டுல இருக்கிறத பத்தி வெலா வாரியா பேசுனான்னா நாம பேசாம போயி சுருட்டிட்டு வந்திர வேண்டியது தான். பயபுள்ள அக்கம் பக்கத்து ஆளுக இருக்காங்க . இவங்க யாரு என்னான்னே தெரியாம அவனுக பேசாம அள்ளி விடுறது . வீட்டுல இருக்கிற நகை நட்டு பணம் எல்லாத்தையும் விலா வாரியா சொல்றது. நமக்கு அவன் சொன்னது ரொம்ப வசதியா சரியா இருந்துச்சில்ல. கும்பிடப் போன தெய்வம் குறுக்க வந்தமாதிரி இப்படி ரெண்டு மூனு பஸ்ல எறுனம்னா நல்லா சம்பாரிக்கலாம் போல இருக்கு எனப் பேசிக் கொண்டனர் திருடர்கள்.
சிவகாமி நகையையும் பணத்தையும் பறிகொடுத்து விட்டு வீட்டில் புலம்பிக் கொண்டிருந்தாள்.
தம்பி நம்ம வீடு நம்பர் 12, மூர்த்தி தெருவுல தான் இருக்கு. எம்பேரு சிவக்குமார்; என் பொண்டாட்டி பேரு சிவகாமி அந்த தெரிவுல யாரக் கேட்டாலும் கண்ண மூடிட்டு சொல்லுவாங்க என்று இன்னொரு நபரிடம் தன் பெருமையைச் சொல்லிக் கொண்டிருந்தார் சிவக்குமார் .திருடர்கள் வேறொரு பேருந்தில் பின்னால் உட்கார்ந்திருந்தனர்
தம்பி நாங்கெல்லாம் அப்படியொரு வசதியுள்ள ஆளுக. எங்களுக்கெல்லாம் பணங்காசு பெருசில்ல
எங்க வீட்டுக்கு வந்து பாருங்க. சகல வசதியும் இருக்கு
எப்படி நாங்களா ஹலோ ஒனக்கெல்லாம் சொன்னா புரியாது. நம்பர் 66, ஜவஹர் தெரு, கொட்டிவாக்கம் போ. எங்க வீடு எப்படின்னு தெரியும் என்றார்.
அவர். அடுத்த நிறுத்தத்தில் இறங்கிய திருடர்கள் அவர் சொன்ன முகவரியை நோக்கி முன்னேறினார்கள்.

ராஜா செல்லமுத்து