லாரி மீது வேன் மோதல்:

திருச்சி, டிச. 7–
திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அருகே இன்று அதிகாலை லாரி மீது வேன் மோதிய விபத்தில் நாகர்கோவிலிருந்து திருப்பதிக்கு சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 குழந்தைகள், 3 பெண்கள் உள்பட 10 பேர் பலியானார்கள்.
கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியைச் சேர்ந்தவர், வைத்திலிங்கம். இவர், நேற்று மதியம் தனது உறவினர்கள், குடும்பத்தினர் 15 பேரை டெம்போ வேனில் அழைத்துக் கொண்டு திருப்பதி கோயிலுக்கு சென்றார். வேனை டிரைவர் ராஜேஷ் ஓட்டி சென்றார். வேன் திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அருகே இன்று அதிகாலை 12 மணியளவில் வந்து கொண்டிருந்தது, மதுரை- – திருச்சி நெடுஞ்சாலையில் உள்ள துவரங்குறிச்சி ஊருக்குள் செல்லும் மூரணிமலை திருப்பத்தில் உள்ள சர்வீஸ் ரோட்டில் வேன் சென்று கொண்டிருந்தபோது, திடீரென முன்னால் சென்று கொண்டிருந்த போர்வெல் லாரி மீது வேன் பயங்கரமாக மோதியது. இந்த வேன் அப்பளம் போல் நொருங்கியது. விபத்தில், வேனில் பயணம் செய்த வைத்திலிங்கம் உள்பட 5 ஆண்கள், 3 பெண்கள் மற்றும் 2 குழந்தைகள் உள்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
இது குறித்து தகவல் கிடைத்ததும் துவரங்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் அப்துல்கபூர் தலைமையிலான போலீசார் மற்றும் தீயணைப்புப் படைவீரர்கள், விரைந்து வந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டனர். வேன் கடுமையாக நசுங்கி இருந்ததால், மீட்புப்பணியில் சிரமம் ஏற்பட்டது. சுமார் 1 மணிநேரம் போராடி, படுகாயங்களுடன் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த நாகர்கோவில் அடுத்துள்ள வடசேரியைச் சேர்ந்த வைஷ்ணவி, நாகர்கோவில் கீழத்தெருவைச் சேர்ந்த தானம்மாள், கன்னியாகுமரி புன்னார் குளத்தைச் சேர்ந்த வேலாதேவி, கார்த்திக், வேன் டிரைவர் ராகேஷ் ஆகியோரை மீட்டு திருச்சி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
விபத்தில் பலியான 10 பேர் உடலும் பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. விபத்து குறித்து துவரங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணையில், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டிலிருந்து வந்த போர்வெல் லாரி, துவரங்குறிச்சியை அடுத்த முத்துப்பட்டி கிராமத்துக்குப் போர் போட வந்ததாகவும், போர்வெல் லாரியை டிரைவர் சந்திரசேகரன் ஓட்டி சென்றார். போர்வெல் ஆப்ரேடர் ஸ்ரீரங்கன் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்டவர்கள், ஜெனரேட்டர் வண்டியில் உட்கார்ந்திருந்தனர், வேலைப்பளு காரணமாக சாலையோரம் வண்டியை நிறுத்தி ஓய்வெடுக்க இடம் தேடியுள்ளனர். இதனால், போர்வெல் லாரி மிக மெதுவாகப் போனதாகவும், பின்னால் வந்த வேன் மோதியதால் தான் இந்த விபத்து நடந்துள்ளது என்றும் தெரியவந்துள்ளது. ஒருவேளை போர்வெல் ஊழியர்கள் இதே வாகனத்தில் வந்திருந்தால், பலி எண்ணிக்கை கூடியிருக்கும் என்றும், படுகாயம் அடைந்துள்ள ராஜேஷ், வைத்திலிங்கம் ஆகியோர் குணமடைந்தால், விபத்துக்கான காரணம் முழுமையாகத் தெரியும் என்றும் போலீசார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.