ரூ.14 லட்சத்தில் டயாலிசிஸ் கருவி:

காஞ்சீபுரம், டிச.7–
காஞ்சீபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் டயாலிசிஸ் செய்யும் கருவியை மாவட்ட கலெக்டர் பா.பொன்னையா இயக்கி வைத்தார்.
காஞ்சீபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு டயாலிசிஸ் செய்வதற்கு தலா ரூ.7 லட்சம் வீதம் ரூ.14 லட்சம் மதிப்பீட்டிலான 2 டயாலிசிஸ் கருவிகளை மாவட்ட கலெக்டர் பா.பொன்னையா அவரின் விருப்ப உரிமை நிதியிலிருந்து வழங்கினார். அந்த கருவிகளை கலெக்டர் இயக்கி வைத்து பேசியதாவது:–
காஞ்சீபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ஏற்கெனவே 5 டயாலிசிஸ் கருவிகள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் 40க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். கிட்னி பாதிக்கப்பட்டவர்களுக்கு யூரியாவின் அளவு அதிகமாக இருக்கும். இந்த நோயாளிகளுக்கு உடலின் நீரின் அளவு அதிகமாகி மூச்சு விட சிரமப்படுவர். இந்த கருவியின் மூலம் சிகிச்சை பெறுபவர்களுக்கு யூரியாவின் அளவு குறைக்கப்பட்டு மூச்சு விடுவதில் சிரமம் குறைக்கப்படுகிறது.
இந்த கருவியின் தேவையை கருத்தில் கொண்டு இங்கு ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் மேலும் இரண்டு கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் அலுவலர்கள் இதனை சரியான முறையில் உபயோகப்படுத்தி இச்சிகிச்சைக்கு வருபவர்களின் சிரமத்தை போக்கவும், நோய்க்கு உரிய தீர்வு காணவும் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் காஞ்சீபுரம் மேற்கு மாவட்ட கழக செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன், அமைப்பு செயலாளர் வி.சோமசுந்தரம், முன்னாள் எம்.பி. காஞ்சீ பன்னீர்செல்வம், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் கே.யூ.எஸ்.சோமசுந்தரம், மாவட்ட மாணவரணி செயலாளர் வீ.வள்ளிநாயகம், ஒன்றிய செயலாளர் தும்பவனம் டி.ஜீவானந்தம், காஞ்சீபுரம் எம்.எல்.ஏ. எழிலரசன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வை.ஜெயக்குமார், மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் சசிகலா உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.