தங்களது எல்லைக்குள் இந்திய ‘ட்ரோன்’ நுழைந்தது:

பெய்ஜிங்,டிச.7–
தங்களது வான் எல்லைக்குள் நுழைந்த இந்திய  ‘ட்ரோன்’ விபத்துக்குள்ளானதாக சீன அரசு ஊடகம்  குற்றம் சாட்டியுள்ளது.
இந்தியா மற்றும் சீனா இடையே நீண்ட காலமாக எல்லைப்பிரச்சனை நிலவி  வருகின்றது. சமீபத்தில் கூட டோக்லாம் விவகாரத்தில் சுமூக முடிவு  எட்டப்பட்டது. இந்நிலையில், சீனாவின் வான் எல்லைக்குள் இந்தியாவின்  ‘ட்ரோன்’  என்ற ஆளில்லாத சிறிய ரக விமானம் நுழைந்து விபத்துக்குள்ளானதாக சீன  ராணுவம் குற்றம் சாட்டியுள்ளது.
இது தொடர்பான செய்தியை வெளியிட்டுள்ள அந்நாட்டு அரசு ஊடகம், “சீன வான்  எல்லைக்குள் இந்திய ட்ரோன் நுழைந்து சீனாவின் இறையான்மையை மீறுகிறது” என்று  குற்றம் சாட்டியுள்ளது. எனினும், எந்த இடத்தில் இந்திய ட்ரோன் நுழைந்தது  என்ற தகவலை சீன ராணுவம் அளிக்கவில்லை. சீனாவின் குற்றச்சாட்டுக்கு இந்தியாவின் தரப்பில் பதில் எதுவும் தற்போது வரை அளிக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளது.