கோவை மாவட்டத்திற்கு கொடிநாள் நிதி வசூல்: ரூ.90.76 லட்சம் இலக்கு

கோவை மாவட்டத்திற்கான, கொடிநாள் நிதிவசூல், ரூ.90.76 லட்சம் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது என, கலெக்டர் (பொ) துரை ரவிச்சந்திரன் தெரிவித்து உள்ளார்.

கோவை கலெக்டர் அலுவலகத்தில், இந்திய கொடி நாளை முன்னிட்டு, கலெக்டர் (பொ) துரை ரவிச்சந்திரன், நிதிவசூல் செய்யும் பணியினை தொடங்கி வைத்தார். பின்னர், அவர் தெரிவித்துள்ளதாவது:–

நாட்டின், முப்படை வீரர்களின் மகத்தான சேவையினை, நினைவு கூறும் வகையில், நாடு முழுவதும், டிசம்பர் 7ம் நாள், கொடி நாளாக, ஆண்டுதோறும் கடைபிடிக்கப்பட்டு வருகின்றது.

நாட்டைப் பாதுகாக்கச் செல்லும் வீரர்களின் குடும்பத்துக்குப் பாதுகாப்பு அளிப்பதும், போரில் மரணமடைந்த வீரர்களின் வாரிசுகள், குடும்பத்தினருக்கு உதவி செய்வதற்கும், படைப்பணியிலிருந்து விடுவிக்கப்படும் ராணுவ வீரருக்கு மறுவேலைவாய்ப்பு அளிப்பதற்கும், நம் அனைவரின் பங்களிப்பு மிகவும் அவசியம்.

முன்னாள் படை வீரர்கள் ஊனமுற்ற படைவீரர்கள், போர் விதவைகள் மற்றும் குடும்பத்தினருக்கு, மாவட்ட முன்னாள் படைவீரர் நலத்துறை மூலம் வழங்கப்படும், நலத் திட்டங்களுக்காக, கொடி நாளில் திரட்டப்படும் நன்கொடைகள் முழுவதுமாகப் பயன்படுத்தப்படுகின்றன.

இலக்கை தாண்டி நிதிவசூல்

ஒவ்வொரு ஆண்டும், கொடி நாள் வசூல் இலக்கைத் தாண்டி, கோவை மக்கள் நன்கொடை அளித்து வருகின்றனர். கடந்த ஆண்டு, ரூ.82.51 லட்சம், கோவை மாவட்டத்திற்கு, இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால்,ரூ.1.05 கோடி நிதி வசூல் மேற்கொள்ளப்பட்டது.

இது, கோவை மாவட்டத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்கினை விட, 27.1% கூடுதலாகும். ஒவ்வொறு ஆண்டும், படைவீரர் கொடி நாள் நிதிக்கு இலக்கினை விட, கூடுதலாக வாரி வழங்கும், கோவை மக்களிடம், 2018ம் ஆண்டிற்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்கான ரூ.90,76,200 விட, கூடுதலாக வழங்கிட கேட்டுக்கொண்டார்.