கோவை அரசு பள்ளிகளில் சிறப்பு நிலை குழந்தைகளுக்கான கழிப்பறை

ஸ்வர்கா அறக்கட்டளை சார்பில், எஸ்ஆர்பி அம்மணியம்மாள் பள்ளியில், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு கழிப்பிடத்தினை, நிர்வாக அறங்காவலர் ஸ்வர்ணலதா திறந்து வைத்தார்.

கோவை ஆர்எஸ் புரத்தில், ஸ்வர்கா அறக்கட்டளை சார்பில், மாநகராட்சி எஸ்ஆர்பி அம்மணியம்மாள் மேல்நிலைப்பள்ளியில், மாற்றுத்திறனாளிகளுக்காக அமைக்கப்பட்ட கழிப்பிடத்தை, ஸ்வர்கா அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ஸ்வர்ணலதா திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், பள்ளி தலைமை ஆசிரியை மல்லிகா வரவேற்றுப் பேசினார். மாநகராட்சி கல்வி அதிகாரி உமா வாழ்த்துரை வழங்குகையில், இன்றைய காலகட்டத்தில், மாற்றுத்திறனாளி மாணாக்கர்கள், பல்வேறு புதிய சாதனைகளை படைத்தும், கல்வியிலும், தலை சிறந்து விளங்குவது பெருமைக்குரியதாகும். ஸ்வர்கா அறக்கட்டளையானது, மாற்றுத்திறனாளிகளுக்காக, அவர்களின் உடல் நிலையைக் கருத்தில் கொண்டு, கழிப்பிட வசதிகள் அமைத்து தருவது, மிகுந்த சந்தோஷத்தை அளிக்கிறது என்று பேசினார்.

சாய்தள வசதியுடன்…

ஸ்வர்கா அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் ஸ்வர்ணலதா பேசுகையில், உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி, உடல் ஊனமுற்றோர்களுக்காக, கோவை மாநகராட்சி பள்ளிகளில், சிறப்பு பிரச்சாரமாக, சர்க்கர நாற்காலி மற்றும் நட்புணர்வு வளர்த்தல், அவர்களுக்கு பள்ளிகளில் தேவையான கழிப்பிட வசதியினை செய்து தருதல் போன்றவைகளை, 2016 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 3ம் தேதி துவங்கப்பட்டு, ராமநாதபுரம் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கடந்த மே மாதம் நிறைவேற்றியது.

இந்த காலகட்டத்தில், வாகராயம்பாளையம் அரசுப்பள்ளி, பாப்பநாயக்கன்புதூர் மாநகராட்சி பள்ளி, அரசூர், கணபதி, மாநகராட்சி எஸ்ஆர்பி அம்மணியம்மாள் மேல்நிலைப் பள்ளியில், மாற்றுத்திறனாளிகள் தரைத்தளத்திலுள்ள வகுப்பறைகளை அணுக சாய்தளங்களும், சர்க்கர நாற்காலியில் அணுக கூடிய கழிப்பறைகள் மற்றும் சக்கர நாற்காலிகளிலுள்ள குழந்தைகளை, பள்ளிக்குள் இயக்க வசதியான இடங்களை தேர்வு செய்து, சாய்தளங்கள் அமைக்கப்பட்டன.

கல்விக்கு உதவுவோம்

இந்தநிலையில், இந்த பள்ளியில் மாற்றுத்திறனாளிகளுக்கான கழிப்பிடம் அமைக்கப்பட்டு, திறப்பு விழா செய்யப்பட்டது. எங்களைப் போன்றோர்கள், நரம்பு வியாதி காரணமாக பாதிக்கப்பட்டு, சக்கர நாற்காலிகளைப் பயன்படுத்தி வருகிறோம்.

ஆகவே, நீங்கள் உங்கள் வீட்டின் அருகில், வசதியில்லாத மாற்றுத்திறனாளி குழந்தைகளை பள்ளியில் சேர்க்க பிரச்சாரம் செய்யுங்கள். நாங்களும் அவர்களது கல்வி முன்னேற்றத்திற்காகவும், அவர்கள் உடல் நலத்தை கருத்தில் கொண்டும், என்றும் துணை நிற்போம் என்று கூறினார். பின்னர், மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பாளர்கள் ஸ்வராஜ், ஆனந்த் செல்வராஜ், தினேஷ்குமார் பாண்டியா மற்றும் ஆசிரியர்கள் உட்பட மாணவிகள் கலந்து கொண்டனர்.