கோவையில் கீரைக்கென பிரத்யேக கடை

தென்னிந்தியாவில் முதன் முறையாக, ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்து வாங்கும் வகையில், கோவை சாய்பாபா காலனியில், கீரைக்கென பிரத்யேக கடை திறக்கப்பட்டு உள்ளது.

கோவையில், கீரை விற்பனை செய்ய, இணையத்தளத்தில், கீரைக்கடை.காம் துவக்கப்பட்டுள்ளது. இந்த இணையத்தளத்தின் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக ஸ்ரீராம் பிரசாத்ஜி உள்ளார்.

வாடிக்கையாளர் சேவை மற்றும் விநியோக தொடரை பிரேம்குமாரும், போக்குவரத்து மற்றும் தர நிர்ணயத்தை மகேஷ்குமார் என்பவரும் கவனித்துக்கொள்கின்றனர். கீரையை, ஆன்ட்ராய்ட் மற்றும் ஐபோன்களில் ஆர்டர் செய்யலாம்.

இது குறித்து, ஸ்ரீராம் பிரசாத்ஜி கூறியதாவது:–

கீரைகளை எங்களது சொந்த பண்ணையில் மட்டுமின்றி, கூட்டாக இருகூர், சித்ரா, தொண்டமுத்தூர் மற்றும் பொள்ளாச்சி ஆகிய இடங்களிலிருந்தும், நேரடியாக விற்பனைக்கு பெறுகிறோம். 30 வயதுக்கு மேற்பட்ட விவசாயிகள், நேரடியாக விற்பனை உதவி செய்கின்றனர்.

இயற்கை உரங்கள்

விற்பனை செய்வதற்கு, 2 மணி நேரத்துக்கும் முன் அறுவடை செய்யப்படுகிறது. தற்போது, காலையில் அறுவடை செய்யப்படும் கீரை, 15 முன்னணி அபார்ட்மென்ட்களில் விற்பனைக்கு வைக்கப்படுகின்றன. இயற்கை உரங்களையே விவசாயிகள் பயன்படுத்துகின்றனர்.

பஞ்சகவ்யா, ஜீவாமிர்தம் உள்ளிட்ட இயற்கை திரவியங்கள் பயன்படுத்தப்படுகின்றன. தற்போது, வாடிக்கையாளர்கள் வெளியில் 5 முதல் 8 வகையான கீரைகளை மட்டுமே பயன்படுத்துகின்றனர்.

நாங்கள் 40 வகையான கீரைகளை விற்பனை செய்ய உள்ளோம். மதியம், கீரை பொரியலும், மாலையில் கீரை சூப்புகளை, விற்பனை செய்யவும் திட்டமிட்டுள்ளோம்.

ஆன்லைனில் ஆர்டர்

விவசாயிகள் உற்பத்தி செய்வதில் மட்டுமே, கவனம் செலுத்துகின்றனர். எப்படி, அவற்றை ஆன்லைனில் விற்பனை செய்வது எனத்தெரியாது. விவசாயிகள், இவற்றை ஆன்லைனில் விற்பனை செய்ய, தகவல் தொழில் நுட்ப உதவியால், 2 ஆண்டுகள் ஆய்வு செய்து, புதிய முறையை கண்டறிந்துள்ளோம். விவசாயிகளையும், தொழில்நுட்பத்தையும் இணைப்பதாக கீரைக்கடை.காம் இருக்கும்.

காலை 9 மணி முதல் 11 மணி வரை ஆர்டகளை, எங்களது செயலிகள் (ஆப்) மூலம் செய்யலாம். அல்லது முன்கூட்டியே தெரிவித்தால், புதியதான கீரைகளை பெறலாம்.

ஆப்களை கீரைக்கடை என டைப்செய்து ஆன்ட்ராய்ட், ஐபோன்களில் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.

விற்பனையில் கமிஷன்

விவசாயிகள் தற்போது காய்கறிகள் மற்றும் கீரைகளை கொள்முதல் செய்வதோடு, தங்களது நிலத்தையும் குத்தகை அடிப்படையில் அளிக்கின்றனர். அவர்களது செலவுகளை, நாங்கள் கவனித்துக்கொள்வதோடு, விதைத்தல், பராமரித்தல் பணிகளை மேற்கொண்டு, விற்பனையில் கமிஷன் பெறுகின்றனர்.

ரத்த அழுத்தம், சர்க்கரைநோய், இருதய பிரச்சினைகள், கண்பிரச்சினை, நரம்பியல் மற்றும் மறதி போன்றவைகளை கட்டுக்குள் வைக்க, கீரை வகைகளை தருகிறோம். கீரையின் மருத்துவ குணங்களையும் எங்களது செயலியில் அளித்துள்ளோம்.

தற்போது, 700 கட்டு கீரைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறோம். இதை, 2000 முதல் 3000ம் கீரை கட்டுக்களாக, அடுத்த மூன்று மாதங்களில் உயர்த்த உள்ளோம்.

கீரைக்கென ஷோரூம்

தென்னிந்தியாவிலேயே முதல் முறையாக, நாங்கள் கீரைக்கென தனிப்பட்ட ஷோரூமை கோவையில் உள்ள சாய்பாபாகாலனியில் திறந்துள்ளோம். தற்போதுள்ள, 40 வகை கீரகைளையும், 100 வகையாக உயர்த்த உள்ளோம். 3 பொறியியலாளர்கள், எங்களது அணியை வலுப்படுத்த உள்ளனர்.

தரம், விதைத்தல், அறுவடை, விநியோகம், வாடிக்கையாளர் திருப்தி, தொழில்நுட்பஉதவி, போக்குவரத்து, ஆன்லைன் ஆர்டர் உள்ளிட்டவை திட்டமிட்டுள்ளோம்.

அடுத்த ஓராண்டுக்குள், ஒவ்வொரு பின்கோடு பகுதியிலும், ஒரு கீரைக்கடை துவக்க திட்டமிட்டுள்ளோம். சென்னை, பெங்களூரு மற்றும் பிறநகரங்களுக்கு விரிவாக்கம் செய்ய உள்ளோம்.

இதற்கான கிளைகளை துவக்கவும், வணிக விசாரணைகளையும் வரவேற்கிறோம். கீரை பற்றியும், அவற்றின் பயன்கள் பற்றியும், மக்களிடையே விளக்கி, ஒரு பசுமை புரட்சியை உருவாக்க திட்டமிட்டுள்ளோம். ஆரோக்கியமான உணவு; ஆரோக்கியமான வாழ்வே எங்களது குறிக்கோள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.