எடப்பாடி – ஓ.பி.எஸ். வீதிவீதியாக பிரச்சாரம்

சென்னை, டிச.7–
ஆர்.கே. நகர் தொகுதியில் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தேர்தல் பிரச்சாரத்தை துவக்கினார்கள்.
திறந்த ஜீப்பில் வீதிவீதியாக சென்று அண்ணா தி.மு.க. வேட்பாளர் இ.மதுசூதனனை ஆதரித்து பிரச்சாரம் செய்து இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார்கள்.
அவர்கள் சென்ற இடமெல்லாம் மக்கள் எழுச்சியுடனும் உற்சாகத்துடனும் பொதுமக்கள் வரவேற்றார்கள்.
‘இந்த தொகுதி அம்மாவின் தொகுதி. அம்மா விட்டு சனெ்ற பணிகள் தொடர மதுசூதனனுக்கு வாக்களியுங்கள்’ என்று அவர்கள் பிரச்சாரம் செய்தனர்.
ஆர்.கே. நகர் தொகுதியில் அண்ணா தி.மு.க. வேட்பாளராக இ.மதுசூதனன் போட்டியிடுகிறார். இரு அணிகளும் இணைந்த பின் அவர் இந்த முறை இரட்டை இலை சின்னத்தில் நிற்கிறார்.
நேற்று மாலை தண்டையார்பேட்டையில்  அண்ணா தி.மு.க. செயல்வீரர்கள், வீராங்கனைகள், ஊழியர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அண்ணா தி.மு.க. தொண்டர்கள் மிகுந்த எழுச்சியுடனும் உற்சாகத்துடனும் கலந்து கொண்டனர். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இந்த கூட்டத்தில் பேசுகையில்,
இது அம்மாவின் அசைக்க முடியாத இரும்பு கோட்டை என்பதை நிரூபிக்கும் வகையில் மதுசூதனனை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யுங்கள். கடினமாக உழைத்து வெற்றியை தேடி தாருங்கள் என்று கேட்டு கொண்டனர்.
தலைமை தேர்தல்
பணிமனை திறப்பு
இதனை அடுத்து இன்று காலை அண்ணா தி.மு.க.  தலைமை தேர்தல் பணிமனை திறப்பு நிகழ்ச்சி நடந்தது.  காசிமேடு எஸ்.என்.செட்டி சாலையில் அமைக்கப்பட்டிருந்த தேர்தல் பணிமனையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றி வைத்தார்கள். அங்கு சிறிது நேரம் அமைச்சர்கள், நிர்வாகிகளுடன் அமர்ந்து ஆலோசனை நடத்திய பின்னர் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடனடியாக புறப்பட்டு சென்றார்கள்.
தண்டையார்பேட்டை 47–வது வட்டம் ஹரி நாராயணபுரத்தில்  உள்ள பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. இந்த சிறப்பு பூஜையில் எடப்பாடி பழனிசாமி,  ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் அங்கிருந்து தேர்தல் பிரச்சாரத்தை  துவக்கினார்கள்.
திறந்த ஜீப்பில்….
திறந்த ஜீப்பில் வேட்பாளர் இ.மதுசூதனன், கழக ஒருங்கிணைப்பாளரும் துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும்  முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் ஜெயக்குமார், விஜயபாஸ்கர், பாண்டியராஜன், தேர்தல் பொறுப்பாளர் டி.ஜி. வெங்கடேஷ் பாபு உள்ளிட்டவர்கள் சென்றார்கள்.
அங்கு அண்ணா தி.மு.க. தொண்டர்களும் பொதுமக்களும் பெருமளவில் திரண்டிருந்தனர். ஏராளமான பேர் இரட்டை இலை சின்னத்தை கையில் ஏந்தி  சென்றார்கள்.
திறந்த ஜீப்பில் நின்றவர்களும், நிர்வாகிகளும், தொண்டர்களும் அண்ணா தி.மு.க. கொடியின் நிறமான கறுப்பு வெள்ளை சிவப்பு நிற துண்டை கழுத்தில் அணிந்திருந்தார்கள். எங்கும் உற்சாகமும் எழுச்சி  காணப்பட்டது.
திறந்த ஜீப்பில் நின்ற எடப்பாடி பழனிசாமி,  ஓ.பன்னீர்செல்வத்திடம் ஏராளமான பொதுமக்கள் கை குலுக்கி  வாழ்த்து தெரிவித்து இரட்டை இலைக்கு தான் ஓட்டு என்று உறுதி அளித்தனர்.
எடப்பாடி பேச்சு
தேர்தல் பிரச்சாரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:–
ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தல் வரலாற்று சிறப்பு மிக்க  தேர்தல். இந்த தேர்தல் வெற்றி அண்ணா தி.மு.க.வின் வலிமையை நிரூபிக்கும்  தேர்தல். அம்மா இந்த தொகுதியில் நின்று வெற்றி பெற்று முதலமைச்சரானார்.  இதன் மூலம் இது அம்மா தொகுதியானது. இந்தியா முழுவதும் பேசப்பட்ட தொகுதி  ஆனது.
இந்த தொகுதியில் அம்மா வெற்றி பெற்று முதல்வரானதும் தொகுதிக்கு எண்ணற்ற திட்டங்களை வாரி வாரி வழங்கினார்.
இந்த தொகுதியில் பலர் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார்கள்.  ஆனால் இந்த தொகுதி மக்களின் வளர்ச்சிக்கு போதிய திட்டங்களை  வகுக்கப்படவில்லை. அம்மா முதலமைச்சரானதும் மக்கள் கோரிக்கைகளை வைத்தனர்.  அந்த கோரிக்கைகளை எல்லாம் அம்மா நிறைவேற்றி தந்தார். ஏழை எளிய மக்களின்  பொருளாதார மேம்பாட்டுக்கு ஏராளமான திட்டம் தந்தார். அடிப்படை வசதிகளை  செய்து தந்தார்.
‘இந்த தொகுதியில் வெற்றி பெற்றால் நாங்கள் அதை செய்வோம், இதை  செய்வோம்’ என்று ஸ்டாலின் கூறுகிறார். தி.மு.க. வெற்றி பெற்றால் இந்த தொகுதி  பலம் பெறும் என்றெல்லாம் சொல்கிறார்.
சென்னையில் 5 ஆண்டு காலம் ஸ்டாலின் மேயராக இருந்தார். இந்த  ஆர்.கே. நகர் தொகுதி சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட தொகுதி. ஸ்டாலின்  அதிகாரத்துக்கு உட்பட்ட தொகுதி. அப்போது எந்த திட்டத்தை ஆர்.கே. நகர்  தொகுதிக்கு அவர் கொண்டு வந்தார். உள்ளாட்சி துறை அமைச்சராகவும் இருந்தார்.  அப்போது இந்த தொகுதியில் திரும்பி பார்க்கவில்லை. மக்களின் அடிப்படை  தேவைகளை நிறைவேற்றி தரவில்லை.
அம்மா இந்த தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு  முதலமைச்சரான பின்பு தான் இந்த தொகுதிக்கு விடிவு காலம் ஏற்பட்டது. ஏழை  எளிய மக்களுக்க பல்வேறு திட்டங்களை, உதவிகளை வாரி வழங்கினார்.
மதுசூதனனை
வெற்றி பெற செய்யுங்கள்
அம்மா விட்டு சென்ற பணிகளை தொடர அண்ணா தி.மு.க. வேட்பாளர்  மதுசூதனனுக்கு ‘இரட்டை இலை’ சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு  வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுங்கள். மதுசூதனன் மூத்த முன்னோடி  தலைவர். 60 ஆண்டுகளாக கட்சிப்பணி, மக்கள் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.  மக்களுக்காக பல்வேறு போராட்டங்களை நடத்தி சிறை சென்றவர். இந்த தொகுதிக்கு  பல்வேறு திட்டங்கள் வர அடித்தளமாக இருந்தவர். ஆர்.கே. நகர் தொகுதியில்  என்னென்ன திட்டங்களை கொண்டு வரலாம். மக்களின் தேவைகள் என்ன என்று  மதுசூதனனிடம் அம்மா கேட்டு அவர் சொன்ன திட்டங்களை எல்லாம் அம்மா  நிறைவேற்றி இருக்கிறார்.
இந்த தொகுதியில் அத்தனை இடங்களையும் தெரிந்து வைத்திருக்கும்  ஒரே வேட்பாளர் மதுசூதனன். மக்களின் தேவைகளை நிவர்த்தி செய்ய ஏழை எளிய  மக்களின் வாழ்வு வளம் பெற அத்தனை திட்டங்களையும் நிறைவேற்றி தர இரட்டை  இலை சின்னத்தில் வாக்களித்து மதுசூதனனை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில்  வெற்றி பெறச் செய்யுங்கள்.
இன்று இந்த இடத்தில் இருந்து (கொருக்குப்பேட்டை) பிரச்சாரத்தை  துவக்கி இருக்கிறோம். இது ராசியான இடம். இந்த வெற்றி உங்கள் வெற்றி. ஏழை  எளிய மக்களின் வெற்றி.
இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.