இதுவரை 3 கோடியே 20 லட்சம் குடும்பங்களுக்கு இலவச கியாஸ் சிலிண்டர் சப்ளை மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தகவல்

சென்னை.டிச.7 ,
உலக சுகாதார ஆய்வறிக்கையின்படி, ஒரு மணி நேரம் அடுப்பில் விறகு  சமையல் செய்வதால் ஏற்படும் சூழல் கேடானது, 400 சிகரெட் எரிவதால் ஏற்படும் அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிவித்துள்ளது.
இன்றும் கிராமப் புறங்கள் மற்றம் மலைப்பகுதியில் உள்ள பெண்கள் விறகு அடுப்பை பயன்படுத்துகின்றனர். இதனால் சுவாசப்பிரச்சனைகள் சார்ந்த நோய்களுக்கு ஆளாகிறார்கள். இதை தடுக்க, கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட பிரதமரின் திட்டத்தின் கீழ், இதுவரை 3 கோடிய 20 லட்சம் குடும்பங்களுக்கு இலவச எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டுள்ளது என்று மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
ஏழை குடும்பப் பெண்கள் அடுப்படியில் விறகு மூட்டி சமைப்பதிலிருந்து விடுபெறும் வகையில் பிஎம்யுஒய் திட்டமானது கடந்த ஆண்டு மே 1–ம் தேதி வழங்கப்பட்டது. ஒரு குடும்பத்துக்கு எரிவாயு அடுப்பு, காஸ் சிலிண்டர் ஆகியன இலவசமாக வழங்கப்பட்டது. இவற்றின் மதிப்பு ரூ.1,600 ஆகும். மூன்று ஆண்டுகளில் 5 கோடி குடும்பங்களுக்கு இத்திட்டத்தை விரிவுப்படுத்த வேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் ஒன்றரை ஆண்டிலேயே பாதிக்கும் மேல் இலவச எரிவாயு இணைப்பு அளிக்கப்பட்டுள்ளது என்று தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
இந்தத் திட்டத்துக்காக 8 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், தர்மேந்திர பிரதான் தெரி வித்துள்ளார்.   1955 ம் ஆண்டிலிருந்து 2014 ம் ஆண்டு வரை இந்தியாவில் 14 கோடி குடும்பங்கள் வரை மட்டுமே சமையல் எரிவாயு சிலிண்டர்களை பயன்படுத்தியுள்ளன. ஆனால் மூன்று ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை 21.4 கோடியாக உயர்ந்துள்ளது.   தற்போது 77 சதவீத வீடுகளில் சமையல் எரிவாயு பயன்படுத்தப்படுகிறது. அடுத்த 2 முதல் 4 ஆண்டுகளுக்குள் அனைத்து மக்களும், அதாவது 100 சதவீத மக்களும், சமையல் எரிவாயு பயன்படுத்தும் நிலை ஏற்படுத்தப்படும்.  ஆதலால் தற்போது, அதிகரித்துவரும் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்தார். மேலும் விநியோகஸ்தர்களின் எண்ணிக்கை கடந்த 2 ஆண்டுகளில் 25 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது என்றார்.