ஆர்.கே. நகர் தொகுதி ஜெயலலிதாவின் கோட்டை என்பதை நிரூபிப்போம்

சென்னை, டிச.7-
ஆர்.கே. நகர் தொகுதி அம்மாவின் அசைக்க முடியாத கோட்டை என்பதை நிரூபிப்போம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் சூளுரைத்தனர்.
அண்ணா தி.மு.க. சார்பில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் குறித்து செயல்வீரர்கள் – வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று மாலை நடைபெற்றது.
இந்த கூட்டத்துக்கு அண்ணா தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமை தாங்கினார்கள்.
தேர்தல் பொறுப்பாளர் டி.ஜி. வெங்கடேஷ்பாபு எம்.பி. வரவேற்று பேசினார்.
கூட்டத்தில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி.வேலுமணி, டி.ஜெயக்குமார், கே.ஏ.செங்கோட்டையன், டாக்டர் சி.விஜயபாஸ்கர், செல்லூர் ராஜூ, உதயகுமார், பெஞ்சமின்,  கே.பாண்டியராஜன், நிலோபர் கபில், பி.தங்கமணி, அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் தமிழ்மகன் உசேன், செய்தி தொடர்பாளர் ஆர்.எம்.டி. ரவீந்திர ஜெயின்,  முன்னாள் அமைச்சர்கள் பா.வளர்மதி, எஸ்.கோகுல இந்திரா,  கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், எம்.பி.க்கள் டாக்டர் மைத்ரேயன், வைத்தியலிங்கம், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அண்ணா தி.மு.க. வேட்பாளர் மதுசூதனன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
இந்திய துணை கண்டமே ஆர்.கே.நகர் தொகுதியை நோக்கிக்கொண்டிருக்கிறது. ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் நாம் சந்திக்கும் முதல் தேர்தல். இரட்டை இலையின் செல்வாக்கு மக்களிடத்தில் எப்படி இருக்கிறது? என்பதை பார்க்கும் செயல். ஒவ்வொரு தொண்டர்களும் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா கண்ட கனவை நினைவாக்க இரவும், பகலுமாக உழைக்க வேண்டும்.
மக்களுக்காக உழைத்து மறைந்த நம் தலைவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக இந்த தேர்தலில் வெற்றியடைய வேண்டும்.
தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது இந்த தொகுதிக்கு என்ன செய்தார்கள்?
அதிகாரத்தில் இருந்தபோது எதுவும் செய்யாமல், இப்போது வந்து நாங்கள் வெற்றி பெற்றால் மக்களுக்கு சேவை செய்வோம் என்று மு.க.ஸ்டாலின் கூறுகிறார். அதிகாரத்தில் இருந்த போது எந்த திட்டத்தையும் நிறைவேற்றாதவர்கள், இப்போது வெற்றி பெற்று எப்படி நிறைவேற்றுவார்கள்? மக்களை ஏமாற்றுவதற்காக கூட்டணி சேர்ந்து தி.மு.க. போட்டியிடுகிறது.
இரும்பு கோட்டை
ஆர்.கே.நகர் ஜெயலலிதாவின் இரும்பு கோட்டை. நம் உயிரை கொடுத்தாவது நம்முடைய வேட்பாளரை வெற்றி பெற வைக்க வேண்டும்.
வாக்காளர்களை நேரடியாக சந்தித்து ஆட்சியின் திட்டங்களை எடுத்துச் சொல்ல வேண்டும். தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை பின்பற்றி நடக்க வேண்டும்.  வீடு வீடாகச் சென்று வாக்குகளை சேகரிக்க வேண்டும். உழைப்பு ஒன்றுதான் வெற்றி பெறும். உழைப்பால்தான் கட்சி உயர்ந்துள்ளது. மற்றவர்களைப்போல கொல்லைப் பக்கமாக வரவில்லை.உழைப்பை தேர்தலில் அளித்து மதுசூதனனை வெற்றி பெறச் செய்ய வேண்டும். வெற்றி பெற்ற பின், ஆர்.கே.நகர் தொகுதி மக்களின் தேவைகள் அனைத்தும்
பூர்த்தி செய்யப்படும்.
ரூ.320 கோடி திட்டம்
தேர்தலில் வேட்பு மனு செய்யும்போது, குறைபாடு இருந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரி நடவடிக்கை எடுப்பார். நாடு முழுவதும் ஒரே சட்டம்தான். தமிழகத்துக்கென தனி சட்டம் இல்லை. ஆனால், ஆளுங்கட்சி தலையிட்டு வேட்பாளர் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கும், எங்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லை.
முறையாக வேட்புமனு தாக்கல் செய்திருந்தால் யாரும் நிராகரிக்க மாட்டார்கள். எனவே அரசுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆர்.கே.நகரில் ஜெயலலிதா இருந்தபோது ரூ.320 கோடிக்கும் மேலான பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளார். நாமும் ஒருமித்த கருத்துடன் ஒன்றுபட்டு உழைத்து மதுசூதனனை வெற்றி பெறச் செய்வோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
ஓ.பன்னீர்செல்வம்
ஆலோசனை கூட்டத்தில் அண்ணா தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-
இந்த தேர்தலில் நம்மை எப்படியாவது அசைத்து பார்க்கவேண்டும் என்று அனைத்து கட்சிகளும் யூகம் வகுக்கின்றன. அதனால்தான் வேட்புமனு தாக்கலில் கூட விரும்பத்தகாத நிகழ்வுகளை சிலர் அரங்கேற்றி பார்த்தார்கள். தேர்தல் பிரச்சார காலங்களில் நம்மை பல்வேறு பிரச்சினைகளுக்கு உள்ளாக்க அவர்கள் முயல்வார்கள். எதிர்க்கட்சிகளின் வியூகங்களை தவிடுபொடியாக்க வேண்டும்.
அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டிய காலகட்டத்தில் உள்ளோம். கடந்த முறை ஆர்.கே.நகரில் இடைத்தேர்தல் நடந்தபோது இரு பிரிவாக தேர்தல் களத்தில் இருந்தோம். 2 சின்னங்களில் நிற்கும் கட்டாயம் ஏற்பட்டது. இரு பெரும் தலைவர்களின் ஆன்மாதான், பிரிந்திருந்த நம்மை இணைத்து, இரட்டை இலை சின்னத்தை பெற்றுத் தந்துள்ளது. விஞ்ஞானப்பூர்வமாக தேர்தல் பணியாற்றுவதில் சிறந்தது அண்ணா தி.மு.க. என்ற நல்ல பெயர் உள்ளது. தொண்டர்கள் இணைந்து செயல்பட்டால் அண்ணா தி.மு.க. வெற்றி பெறும் என்பது வரலாறு. அதன்படி நாம் செயல்பட வேண்டும். ஒற்றுமையுடன் செயல்பட்டு ஆர்.கே.நகர் அம்மாவின் கோட்டை என்பதை மீண்டும் நிரூபிக்க வேண்டும்.
சத்திய சோதனை
இந்த தேர்தல் சத்திய சோதனை. யாரேனும் நம்மை பற்றி தவறாக செய்திகள் சொல்லும்போது உடனுக்குடன் தக்க பதிலை நமது பேச்சாற்றல் மூலம் வெளிப்படுத்தவேண்டும்.
அண்ணா தி.மு.க. தொண்டர்கள் களத்தில் இறங்கிவிட்டால் அவர்களை மறைப்பதற்கு எந்த இயக்கத்துக்கும் தெம்பு, திராணி இல்லை. இதை யாரும் அசைக்கவோ, ஆட்டவோ முடியாது.
இவ்வாறு அவர் பேசினார்.