ஆர்.கே.நகர் தேர்தலில் 72 பேர் போட்டியிடுவதால் மிகப்பெரிய ஓட்டு எந்திரம்

சென்னை,டிச.7–
ஆர்.கே.நகர் தேர்தலில் 72 பேர்  போட்டியிடும் சூழ்நிலை ஏற்பட்டால் மிகப்பெரிய ஓட்டுப்பதிவு எந்திரம்  பயன்படுத்த வாய்ப்பு உள்ளதாக தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட 145 பேர் வேட்புமனு தாக்கல்  செய்திருந்தனர். இதில் 72 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. 73 பேர் மனுக்கள்  நிராகரிக்கப்பட்டன. மனுதாக்கலின்போது 52 பேர் தொப்பி சின்னத்தை கேட்டிருந்தனர். தற்போது  ஏற்கப்பட்ட மனுக்களில், 29 சுயேட்சை வேட்பாளர்கள் தொப்பி சின்னத்தை  கேட்டுள்ளனர்.
72 பேர் போட்டியிடுகின்ற நிலை ஏற்பட்டால் தற்போது உள்ள மின்னணு  ஓட்டுப்பதிவு எந்திரத்தை பயன்படுத்த இயலாது. தற்போது பயன்படுத்தப்படும்  மின்னணு எந்திரத்தில் 63 வேட்பாளர்கள் பெயர்கள் மட்டுமே சேர்க்க முடியும். மேலும் யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்ற 64-வது பட்டனும் உள்ளது.  இதற்கு மேல் கூடுதலாக வேட்பாளர்கள் போட்டியிட்டால் ‘மெகா’ ஓட்டு பதிவு  எந்திரத்தைதான் பயன்படுத்த முடியும் என்று தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.
இந்த ‘மெகா’ மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரத்தில் 300-க்கும் மேலான பெயர்களை உள்ளடக்க முடியும். அதனால் ஆர்.கே.நகர் தொகுதியில் அதுபோன்ற ஒரு சூழ்நிலை ஏற்பட்டால் மிகப்பெரிய ஓட்டுப்பதிவு எந்திரம் பயன்படுத்த வாய்ப்பு உள்ளது. இன்று வேட்புமனுவை வாபஸ் பெறுவதற்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.  ஏற்கப்பட்டுள்ள 72 மனுக்களில் 4 பேர் மட்டுமே அங்கீகரிக்கப்பட்ட அரசியல்  கட்சியாகும். அண்ணா.தி.மு.க., தி.மு.க., பா.ஜனதா, பகுஜன் சமாஜ் கட்சி ஆகியவை  மட்டுமே இடம் பெற்றுள்ளன. பதிவு செய்ப்பட்ட 9 கட்சிகளின் வேட்பாளர்களும்  களத்தில் உள்ளனர்.
இது தவிர 59 சுயேட்சைகளும் போட்டியில் உள்ளனர். இவர்களில் யார் -யார் இன்று மனுவை வாபஸ் பெறுகிறார்கள் என்பது மாலையில் தெரியவரும்.
இதனை தொடர்ந்து இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. அதில் எத்தனை  பேர் இடம் பெறுகிறார்கள் என்பதை பொறுத்து தான் ‘மெகா’ ஓட்டுப்பதிவு  எந்திரம் பயன் படுத்தப்படுமா? என்பது முடிவாகும்.
போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கை 63-க்கும் குறைவாக இருக்கும் பட்சத்தில் தற்போது உள்ள மின்னணு எந்திரம் பயன்படுத்தப்படும்.
இந்த எண்ணிக்கை கூடுமானால் பெரிய அளவிலான அதிக வேட்பாளர்கள் பெயர்களை உள்ளடக்கும் எந்திரத்தைதான் பயன்படுத்தி ஆக வேண்டும்.
இதுகுறித்து தேர்தல் அதிகாரி ஒருவர் கூறுகையில், “ஆர்.கே.நகர் தேர்தலுக்கு  எலக்ட்ரானிக் மின்னணு எந்திரத்தை பயன்படுத்த அனைத்து ஏற்பாடுகளும் தயார்  நிலையில் உள்ளன. 64 வேட்பாளர்களுக்கு குறைவாக இருந்தால் தற்போதுள்ள  எந்திரங்களை பயன்படுத்தலாம். யாருக்கு வாக்களித்தோம் என்பதையும் தெரிந்து  கொள்ளும் வசதியும் நவீன எந்திரங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட்டவுடன் சின்னம் பொருத்தும் பணி நடைபெறும்.  ஒரு சின்னத்தை ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் கேட்டால் குலுக்கல் முறையில்  தேர்வு செய்யப்படும்.
நவீன தொழில்நுட்பம் கையாளப்படுவதால் மீண்டும் வாக்குச்சீட்டு முறையை  பன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. பெரிய அளவிலான எந்திரத்தை பயன்படுத்தி  ஓட்டுப்பதிவை நடத்தலாம் என்றார்.