அவிநாசியில் ரூ.34 லட்சத்தில் கிராம ஊராட்சி சேவை மைய கட்டிடம்:

அவிநாசியில், ரூ.34 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட, கிராம ஊராட்சி சேவை மைய கட்டிடங்களை, சட்டப்பேரவைத்தலைவர் தனபால் திறந்து வைத்தார்.

திருப்பூர் மாவட்டம், அவிநாசி ஊராட்சி ஒன்றியம், மங்கரசு வளையபாளையம் ஊராட்சி, பேரநாயக்கன்புதூர் மற்றும் புஞ்சைதாமரைக்குளம் ஊராட்சி, புஞ்சைத் தாமரைக்குளம் ஆகிய பகுதிகளில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், தலா ரூ.17 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட, புதிய கிராம ஊராட்சி சேவை மைய கட்டிடங்களை, சட்டப்பேரவைத்தலைவர் தனபால், கலெக்டர் கே.எஸ்.பழனிச்சாமி முன்னிலையில், பொது மக்களின் பயன்பாட்டிற்காக, திறந்து வைத்தார்.

அலுவலர்களுக்கு அறிவுறுத்தல்

இந்த மையமானது, பொது மக்களின் அனைத்து இணையதள சேவைகளுக்கும், இதர திட்டங்களுக்கும், பயன்படுத்தபடவுள்ளது. மேலும், பொது மக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி வழங்கப்பட்ட, மனுக்களை பெற்றுக் கொண்டு, சட்டப்பேரவைத் தலைவர், இதன் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

பொது மக்களின் அடிப்படைத் தேவைகளான, குடிநீர் வசதி, சாலை, மின்சார வசதி, சாக்கடை வசதி மற்றும் போக்குவரத்து வசதி போன்றவைகளுக்கு, அதிக முக்கியத்துவம் அளித்து, முழுமையாக தீர்க்கப்படும் எனவும், தனபால் தெரிவித்தார்.

இந்நிகழ்வின் போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ரமேஷ்குமார், கூட்டுறவு சங்கத் தலைவர் வேலுசாமி, அவிநாசி வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வட்டாட்சியர், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.