கன்னியாகுமரியில் 7 கிராமங்களில் மின்சார சப்ளை சீராக்க ராம்கோ குரூப் ஊழியர்கள் நடவடிக்கை

சென்னை, டிச. 6–
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 29ந் தேதி அன்று பெய்த பலத்த மழை மற்றும் சூறைக்காற்றால் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து மின் கம்பிகளின் மீது விழுந்ததால், மின்கம்பங்கள் சாய்ந்து மின் விநியோகம் பாதிக்கப்பட்டது. மேலும், பலத்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் வெள்ள நீர் சூழ்ந்தது.
மாவட்ட நிர்வாகத்தின் துரித நடவடிக்கை மூலம் உடனடியாக மழை நீர் புகுந்த வீடுகளில் உள்ள மக்கள் அருகில் உள்ள சமுதாய கூடம், பள்ளிக்கட்டிடம் ஆகிய நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். மேலும் சாய்ந்த மின் கம்பங்கள் சரி செய்யப்பட்டு மின் இணைப்பு வழங்கும் பணியும், பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கும் பணியும் துரிதமாக நடைபெற்று வருகிறது.
மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து ஓக்கி புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகள் மேற்கொள்ள ராம்கோ நிறுவனம் சார்பில் 10 பவர் ஷா (மரம் வெட்டும் எந்திரம்) உடன் 20 பணியாளர்கள் மற்றும் அவர்களை வழிநடத்த ராம்கோ விற்பனை அதிகாரிகள் மற்றும் ராம்கோ சமூக சேவை கழகத்தினர் உடனடியாக மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெற்று ஓக்கி புயலால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு உடன் சென்று நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஓக்கி புயலால் சேதடைந்த மின் கம்பங்கள் சரிசெய்து மின் இணைப்பை 100% அனைத்து பகுதிகளிலும் வழங்கும் பொருட்டு மாவட்ட நிர்வாகத்திற்கு உதவி செய்யும் நோக்கில், ராம்கோ நிறுவனப் பணியாளர்கள் 20 பேர் மரம் வெட்டு எந்திரத்தின் மூலம் நேசமணி நகர், அருமை நல்லூர், கடுக்கரை, அழகிய பாண்டியபுரம், ராஜாக்கள் மங்களம், ஆசாரிப்பள்ளம், வல்லகுமார விளை ஆகிய பகுதிகளில் விழுந்த மரங்கள் உடன் அகற்றினார்கள். மேலும் பல்வேறு இடங்களில் மரங்கள் அகற்றும் பணியிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் ராம்கோ நிறுவனம் சார்பில் நிவாரண முகாம்களில் உள்ள அனைவருக்கும் பால், பிஸ்கட், ரொட்டி ஆகியவை விநியோகம் செய்யப்பட்டது.
அதுமட்டுமல்லாது ஓக்கி புயலால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்து, கீரிப்பாறை, தடிக்காரக்கோணம், வாலைத்துவையல், திருமலை சமுத்திரம், வடிவீரம், அளந்த கரை, இடலக்குடி, தேரைக்கால்புதூர், தக்கலை, நடுவூர், குமரியணை, இருப்பையான்குடி காலனி, கருப்புக்கோட்டை, உதிரப்பட்டி, மணலோடை, புறாவிளை, திருப்பதிசாரம், ஆழம்பாறை, ஊத்துவால்மடம், கரிக்காள், சபரிஅணை, சுசீந்திரம், வடிவீஸ்வரம், புத்தேரி, வெள்ளமடம் ஆகிய நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள 2400 பெண்களுக்கு சேலைகளும், 2400 ஆண்களுக்கு வேஷ்டிகளும் ராம்கோ நிறுவனம் சார்பில் வழங்கப்பட்டுள்ளது.
ராம்கோ நிறுவனம் சார்பில் ஓக்கி புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரணப் பணிகளை அறிந்து  துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் மின் துறை அமைச்சர் தங்கமணி, வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்ட கலெக்டர் ஆகியோர் பாராட்டினர்.