பணி மாறுதல்

பிரபா, இன்றோடு 28வது இடத்தில் வேலை செய்து கொண்டிருந்தாள். ஒரே இடத்தில் நிலையாக இல்லாமல் இருந்தது அவளுக்கு வேதனையாகவும் வெக்கமாகவும் இருந்தது.
‘பிரபா’
‘ம்’
இந்த வேலையிலாவது ஒழுங்கா இருப்பியா?
‘தெரியல’
‘ஒனக்கு நாசுக்கு தெரியல’
‘அப்பிடின்னா?’
‘அப்பிடின்னா நீயே தெரிஞ்சுக்க’
‘புரியல எழில்’
‘இதெல்லாம் ஒனக்கு நான் சொல்லணும்னு அவசியமில்ல… பிரபா’
‘நீ சொல்றது எனக்கு ஒண்ணும் புரியல எழில்’
‘ஒனக்கு கல்யாணம் ஆகியிருச்சில்ல’
‘ஆமா’
‘குடும்பம் எப்பிடி?’
‘கஷ்டம்; ரொம்ப கஷ்டம் தான் . என்ன பண்ண?’
இப்பத்தான் நீ நல்லா யோசிக்கணும். நீ வேல பாக்குறது எத்தனையாவது எடம் 28 வது இடம்’
‘ம்’ அதுக்கு காரணம் என்னன்னு தெரியுமா?
‘ம்..ஹும். அதான் எனக்கு தெரியல….’
‘தெரியாதுன்னு சொல்லாத. ஒனக்கு நெளிவு சுளிவு தெரியல பிரபா’
‘நீ என்ன சொல்ற … நான் காலையில ஆபீஸ் போனா சாயங்காலம் வரைக்கும் மாடு மாதிரி வேல செய்வேன் தெரியுமா? ஆனா, நான் எந்த எடத்திலயும் 6 மாசத்துக்கு மேல சரியா இருந்து வேல செய்ய முடியல’
‘அதான் ஒன்கிட்ட இருக்கிற கோளாறு’
நல்லா வேல செய்றது ஒனக்கு கோளாறா?
‘ஆமா’ நான் இந்த ஆபிஸ்ல எவ்வளவு நாளா வேல செய்றேன்னு தெரியுமா?
‘தெரியாது’
கிட்டத்தட்ட 25 வருசத்துக்கு மேல அதுக்கெல்லாம் ஒரு ட்ரிக் இருக்கு.
‘‘ட்ரிக்கா… அதெல்லாம் எனக்கு தெரியாது. எந்த வேல குடுத்தாலும் கொறயில்லாம வேல செய்வேன்’ என்றாள் பிரபா.
அந்த மதிய நேர இடைவெளியில் இருவரும் டைனிங் ஹாலில் பேசியபடியே சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். அப்போது குருபரன் டைனிங் ஹாலுக்குள் நுழைந்தான்.
சார் சாப்பிடுங்க
இல்ல வேணாம். நீங்க சாப்பிடுங்க என்றால் வாயெல்லாம் பல்லாக.
சார் ஒரு வாய் எடுத்து வையுங்க.
எங்க வீட்டு சாப்பாடுன்னா அப்பிடியொரு ருசியிருக்கும்.
ஒரு கை எடுத்துச் சாப்பிடுங்க என ஊட்டி விடாத குறையாக சாப்பாட்டை எடுத்துக் கொடுத்தாள் எழில்.
பிரபா எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தாள்.
சாப்பிடுங்க சார்.
குழைந்து வளைந்து குருபரனின் கையில் சாப்பாட்டைக் கொடுத்தாள்.
பிரபாவை சைடில் பார்த்தபடியே சாப்பிட்டுக் கொண்டிருந்தான் குருபரன்.
இது எதையும் கவனிக்காமலேயே சாப்பிட்டுக் கொண்டிருந்தாள் பிரபா.
‘ம்… சாப்பாடு ரொம்ப நல்லா இருக்கு’ என்றான் இரண்டு அர்த்த வசனத்தில்.
எழில் அவனுக்கு ஈடாகப் பேசிக் கொண்டிருந்தாள்.
சாப்பிடும் இடமே சலசலப்பாய் இருந்தது.
‘எழில்’
‘ம்’
‘ஒன்னோட சாப்பாட்டுல அப்பிடியொரு ருசியிருக்கே’
‘ஆமா’ எங்க சப்பாடு ஸ்பெஷல் என்றாள் கண் சிமிட்டியபடியே…
குருபரனின் வாய்க்கும் கைக்கும் ஒரு போராட்டமே நடந்து கொண்டிருந்தது.
பிரபாவைச் சாப்பிடுவது போலவே சாப்பிட்டக் கொண்டிருந்தான். இது எதையும் கவனிக்காமல் சாப்பிட்டுக் கொண்டிருந்த பிரபாவை உசுப்பினாள் எழில்.
‘சார்’
‘ம்’
‘இவங்க பிரபா’
‘வணக்கம் சார்’ என்றாள் தலை குனிந்தபடியே
‘ஓ…’ அப்பிடியா? என்று அகலத் திறந்த விழிகளால் பிரபாவை தலையிலிருந்து கால் வரை கண்களால் அளந்தான் குருபரன்.
‘எங்க இருந்து வாரீங்க?’
இங்க பக்கத்தில இருந்து தான்.
‘ஓ’ சரி சாப்பிட்டு வாங்க’
‘ஓ.கே.’ குருபரன் விடை பெற்றான்.
மதிய இடைவேளை முடிந்து அலுவலக வேலை மீண்டும் ஆரம்பமானது.
பிரபாவின் இருக்கைக்கு அருகிலேயே இருந்தாள் எழில்.
பிரபா வேலையில் கண்ணும் கருத்துமாய் இருந்தாள்.
எழில் எழுந்து போய் குருபரனின் அருகிலேயே நின்று கொண்டு கொஞ்சினாள். குழாவினாள். ‘சார், சூப்பர், நீங்க ரொம்ப ஜீனியஸ் சார்.
சூப்பர் அப்பிடி ஒர்க் பண்றீங்க. ஒங்களுக்கு நல்ல அறிவு இருக்கு’ என்று அவளின் கைகள் மேலே படப்பட பேசிக் கொண்டிருந்தாள்.
பிரபா தலை குனிந்தபடியே அவளின் வேலையில் கவனம் செலுத்திக் கொண்டிருந்தாள்.
அன்று அலுவலக வேலை முடிந்து இருவரும் பேருந்துக்காக நின்றிருந்தார்கள்.
‘பிரபா, ஒனக்கு சமார்த்தியம் பத்தாது.
‘எப்பிடி?’
‘நீ ஆபிஸ்ல இருக்கிறது சரியில்ல’
‘ஏய் என்ன சொல்ற… நான் தான் என்னோட வேலைய சரியா செய்றனே’ ‘அமான் தப்பு… குருபரன் யாரு?
‘தெரியாது’
‘அவர் தான் இந்த ஆபிஸோட ஆணிவேர். அவர அப்பிடி இப்பிடின்னு கொஞ்சம் கவனிச்சிட்டய்னா நீ எங்கயோ போயிரலாம்.
‘நீ சொல்றது புரியல’
‘ஏய் மரமண்ட’ இப்பிடி ஆபிஸ்ல இருக்கிய பெரிய ஆளுகள கைக்குள்ள போட்டு வச்சுக்கிரணும்.
அப்பிடிப் போட்டு வச்சுட்டம்னா, நாம எத வேணும்னாலும் சாதிக்கலாம். இங்க இருக்கிற எல்லா ஆம்பளைங்களும் சபலம் தான், நீ கொஞ்சம் அப்பிடி இப்பிடின்னு இருந்து பாரு, அப்பெறம் நீ இந்த எடத்து விட்டு போகணும்னு அவசியமில்ல. இங்கயே இருக்கலாம்’ என்றாள் எழில்.
‘நான் அப்பிடி இருக்க முடியாது. அந்தப் பொழப்பு எனக்கு தேவையில்ல’ என்று கோபமாகப் பேசினாள்.
‘ஓ… அதான் நீ இத்தன எடம் மாறியிருக்கியா?
‘ஆமா… இந்த ஈனப் பொழப்பு தேவையில்ல. வாழ்ந்தா மானத்தோட வாழணும். இல்ல மானத்தோட சாகணும்’ என்றாள் பிரபா.
நீ வாழத் தகுதியில்லாதவ’
‘போடி என்னோட மானத்த விட்டுட்டு தான் வாழணும்னா அது அவசியமில்ல’ வீராப்பாப் பேசிய பிரபா அடுத்த வேலைக்கான இடத்தைத் தேடிக் கொண்டிருந்தாள்.

 ராஜா செல்லமுத்து