விளையாட்டல்ல வாழ்க்கை (பாகம் – 8)

பெங்களூரில் தேசியப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற தமிழர் என்ற பெருமையுடன் சென்னை திரும்பிய ராமுக்கு முதல் செல்போன் வாழ்த்து அழைப்பு சுதர்சனிடம் இருந்து வந்தது.
‘டேய், சூப்பரா ஜெயிச்சது மட்டுமல்லாம அடிதடி, துப்பாக்கிச் சண்டையை எல்லாம் பார்த்துட்டு வந்திருக்கிறாய்’ என படபடவென பேசி முடித்தான்.
அதை கேட்ட ராம் ‘நேர வாடா நிறைய பேசணும்’ என்று சுதர்சனிடம் சொன்னான்.
அப்போது ரத்தன்குமார் தன் ரகசியங்களை ஏதும் யாரிடமும் குறிப்பாக அப்பா சுரேஷிடமோ நண்பர்களிடமோ சொல்லக்கூடாது என்று கூறியது ஞாபகத்திற்கு வந்தது.
சுதாரித்துக் கொண்டு, ‘சுதர்சன் அடுத்தது என்ன மேட்ச் வருது. உன்னை அப்போது தானே பார்க்க முடியும்’, என்று கூறிக்கொண்டு இருக்கையில் மறுபுறம் சுதர்சன் தேம்பி அழ ஆரம்பித்தது கேட்டது.
‘என்ன கோச் சங்கர் இனிமே மேட்சுக்கெல்லாம் போகவே கூடாதுன்னு சொல்லிட்டார்டா…’ என்றான்.
‘ஏன்?’ என்று கேட்கும் முன்பே ‘என்னால் எங்கப்பாவுக்கு எவ்வளவு செலவுன்னு உனக்கு நல்லா தேரியுமில. அதனால் கோச்சிங் கட்டணத்தை சரிவர கொடுப்பதே இல்லை. அதனால் உன்னை பயிற்சிக்கு வா, ஆனால் மேட்சுக்கு கூட்டிக் கொண்டு எல்லாம் போக முடியாது’ என்று சொல்லி விட்டதாக கூறினான்.
‘அது ஏண்டா பயிற்சி மட்டும் தரேன்கிறார்…’
‘அதில் தான்டா விஷயம் இருக்கு’ என்று சொன்னான் சுதர்சன்.
‘எங்க ஸ்டேடியத்தில் சங்கர் மட்டும் தான் பேட்மிண்டன் கோச்சிங் தருகிறார். அதனால பல ஸ்கூல்கள் இவரிடம் கேட்டுக் கொண்டதால் அவர்கள் பள்ளி மாணவர்களில் எவரேனும் நல்ல ஆட்டக்காரர் என்றால் எங்க ஸ்டேடியத்துக்கு அழைத்து வந்து பயிற்சியும் தருவார்’.
அப்படி வந்தவர்களில் பலர் இப்போது இங்கேயே இவரிடம் மாணவர்களாக சேர்ந்து விட்டனர்.
‘இங்கே இருக்கும் ஆட்டக்காரர்களில் தேசிய தர பட்டியலில் முன்னணியில் இருப்பது நான் தான். அதனால என்னோடு விளையாடினால் இவர்கள் எல்லாம் இரண்டு பாயிண்ட் எடுத்தாலே மாவட்ட அளவு சேம்பியன்கள் ஆகிவிடுவதால் எனக்கும் நல்ல டிமாண்ட் இருக்கு!’ என்று விவரித்தான்.
‘அப்புறம் என்ன, நீயில்லாம அவர் எப்படி வகுப்பு எடுப்பாரு?
அதனால தான்டா அவரு என்ன பயிற்சிக்கு வரச்சொல்லி விளையாட கத்துக் கொடுக்காம பொடுசுகளோடு விளையாடி என்னை ‘டம்பி பீஸ்’ ஆக்கிடார்டா’ என்று கூறிவிட்டு மவுனமானான்.
ராமுக்கு என்ன சொல்வது என்று புரியாமல் யோசித்தான். சங்கர் கோச் நல்லவர் தானே, பிறகு ஏன் நல்ல ஆட்டக்காரரான சுதர்சனை நன்கு பயிற்சி பெற வைக்காமல் இப்படி மட்டம் தட்ட வேண்டும்.
பணம் பத்தும் செய்யும் என்பார்களே அது இது தானே? என்று யோசிக்க ஆரம்பித்தான்.
அன்று இரவே அப்பா சுரேஷிடம் சுதர்சனின் நிலையை விவரித்தான். அவரும் என்ன சொல்வது என்று புரியாமல் யோசித்தார். அவர் மனதில் ‘ஏதோ ஒரு சிறு ஆனந்தம் துளிர் விட்டதை ராமுவும் கவனித்தான்.
‘அடச்சே, என் அப்பாவும் இப்படி எனக்கு எதிரில் ஒரு நல்ல ஆட்டக்காரர் இல்லாமல் போனால் நல்லது என்று சந்தோஷப்படுகிறாரே’ என நினைத்து வருந்தினான்.
*****
மறுநாள் எப்போதும் போல் காலை ஐந்து மணிக்கெல்லாம் நேரு உள்ளரங்கத்தின் வெளிப்புற ஜிம் பகுதியில் உடற்பயிற்சி கோச் ரஜினி சார் முன், முதல் ஆளாக நின்றான்.
‘சூப்பர் ஆட்டம் ராம்’ என்று பாராட்டிய ரஜினி சார் தான் அவரை பெங்களூர் அழைத்துச் சென்ற கோச் ஆவார்.
‘சார், நீங்க தமிழக பேட்மிண்டன் அணியின் பயிற்சியாளர் என்பதால் கேட்கிறேன். சிவகாசி சுதர்சனை உங்க மாணவனாக அழைத்து வந்து பயிற்சி தர முடியுமா? என கேட்டான்.
‘ராம், அதிலே ஒரு சிக்கல் உண்டு. தமிழக அணியில் இருக்கும் உனக்கு நான் விசேஷ கோச்சாக இருக்க அனுமதி உண்டு. ஆனால் சுதர்சனோ மாநில அளவில் இரண்டாவது தான். அதாவது உன்னை அவன் ஜெயித்து, அடுத்த தேசிய போட்டிக்கு போனால் மட்டுமே என்னால் அவனுக்கு பயிற்சி தர முடியும்’ என்று விவரித்தார்.
‘அப்டீனா, நான் மாநில அளவில் தோற்றால் சுதர்சனுக்கு நல்ல பேட்மிண்டன் எதிர்காலம் என்கிறீர்கள். அப்படித்தானே சார்? என்றும் கேட்டு விட்டான்.
‘கவலைப்படாதே, நான் உன்கு சொல்லிக் கொடுக்கும் வரை, உன்னை வேறு ஒரு தமிழக வீர் ஜெயித்து விடவே முடியாது’ என்று நம்பிக்கையுடன் கூறினார்.
‘சார்… நான் தோற்கவும் கூடாது. சுதர்சனும் நல்லா பயிற்சி பெற வேண்டும். அதற்கு என்ன சார் வழி’ என்று அவரையே கேட்டான்.
‘யோசிப்போம்டா’ என்று கூறிவிட்டு பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டு காலை நேர கடினமான பயிற்சிகளை துவக்கினார்.
*****
சுரேசும், ரஜினி சாரும் ஏதோ ரகசியமாக பேசிக் கொண்டிருந்ததை பார்த்த ராம் மெல்ல அருகே சென்றபோது, ‘சரி ரஜினி நாங்க புறப்படுகிறோம்’ என்று கூறி விடை பெற்று விட நாங்கள் வெளியேறினோம்.
அந்த வாரம் முழுவதும் அதிகமாக உடற்பயிற்சி சமாச்சாரங்களே இருந்தது. ஏனோ அதிகமாக ஆட்டப் பயிற்சியே கிடையாது!
அடுத்த மூன்று மாதங்களுக்கு எந்த பெரிய மேட்சும் இல்லாததால் கால் வேகத்திற்கும் இலகுவாக கையை உயர்த்தி முழு பலத்துடன் அடிக்க கைகளுக்கு விசேஷ பயிற்சியும் தந்தபடி இருந்தார். எம்பி குதிக்கவும் லாவகமாக தரையில் இறங்கியவுடன் மீண்டும் அடுத்த சாட்டுக்கு ரெடியாக உடல் வேகத்திற்கும் பயிற்சிகள் தொடர்ந்தது.
*****
ஒரு நாள் திடீர் என சுதர்சன் கூப்பிட்டான், ‘டேய் என் நிலமை படுமோசமாக பேச்சுடா… என்றான். நாளைக்கு கேரள கோச் ஒருவர் எங்க ஸ்டேடியத்திற்கு வரார்டா. அவருக்கும் எங்க சங்கர் கோச்சுக்கும் ஆகாதாம். ஆகவே இருவரும் சேர்ந்து விசேஷ கேம்ப் நடத்த இருந்ததை மாற்றி, சங்கர் வெளியேறியதை தொடர்ந்து அந்த கேரள கோச்சே தனியாக பயிற்சி தரப்போறாராம்.
‘எங்க ஸ்டேடியத்தில் அவர் வகுப்புகள் நடத்த கட்டணம் செலுத்தி விசேஷ பயிற்சி எடுக்கப் போறார்டா. அவரிடம் ஸ்டேடியத்து அதிகாரிகள், எனக்கு பயிற்சி தரக்கூடாது என்று சொல்லி விட்டார்கள்…’
என்றான்.
‘அப்ப இதுவரை எப்படிடா அனுமதித்தார்கள்?’ என்று ராம் கேட்டான்.
‘இப்பத்தான்டா தெரியுதா சங்கர் சார் எவ்வளவு நல்லவர் என்று. பசங்களுக்கு விளையாட நானும் ஒரு கோச் என்பதால் எனக்கு என ஒரு தொகையை சம்பளமாக தராமல் ஸ்டேடியத்தில் கட்டி விட்டாராம்!
அதனாலத்தான் எனக்கு எந்த பிரச்சினையுமின்றி பயிற்சி தந்துள்ளார்.
ஆனால் எங்கப்பா வேலை காரணமாக என்னோடு ஸ்டேடியம் வருவதே இல்லையா, இந்த தகவல் எங்களுக்கு தெரியவே தெரியாது என்று கூறினான்.
இதுவரை பயிற்சி கிடையாதா? என்று ராம் கேட்க இது மேட்ச் இல்லாத நேரம் என்பதால் எனக்கு உடற்பயிற்சியும் கை கால்களை உறுதியாக வைத்துக் கொள்ள ஒரே நேரத்தில் ஐந்து பேருடன் விளையாடவும் வைத்துள்ளார்.
இப்போது என்னால் அந்த ஐந்து பேருக்கு ஒருவர் என்ற ஆட்டத்தில் பறவை போல் பறந்து, பறந்து, சின்ன பசங்களிடம் ஸ்மேஸ் அடித்து விளையாடாமல் பாயிண்ட் வெல்வது எப்படி? என்ற ஆட்ட முறையை கற்று வருகிறேன், என்றவுடன் ராமின் அடிவயிறு சற்றே ஒரு மாதிரியாக குறைந்தது.
ராமுக்கு சுதர்சனை வீழ்த்த இருந்த ஒரே ஆயுதம் அங்கும் இங்கும் இறகுப் பந்தை அனுப்பி சுதர்சனை ‘ஸ்மேஸ்’ அடித்து பாயிண்ட் பெற விடாமல் தவிக்க வைப்பது தான்.
ஆனால் ஐந்து சிறுவர்கள் என்றாலும் இறகு எங்கு சென்றாலும் அதை உடனுக்குடன் எடுக்கும் வேகமும் அதை பாயிண்டாக மாற்றும் விவேகமும் பெற்று விட்ட சுதர்சனிடம் இனி பழைய ஆட்டம் எடுபடாது என்பதை புரிந்து கொண்டான்.
அன்று இரவே, அப்பா அடுத்த முறை சுதர்சனுடான ஆட்டம் வந்தால் அதை மறக்காமல் பார்த்து ரசிக்க தவறி விடாதீர்கள். படு பரபரப்பாக இருக்கும் என்று உத்திரவாதம் தந்தான்!
*****

டிக்ரோஸ்