எல் & டி யின் சமூக சேவைக்கு மக்கள் வரவேற்பு

கோவை செட்டிபாளையம், ஈச்சனாரி சாலையில் உள்ள, லார்சன் டூப்ரோ பொதுநல அறக்கட்டளை நடத்தும், சுகாதார மையத்தில், ஆண்டுக்கு 30 ஆயிரம் பேருக்கு மருத்துவ சேவை அளிக்கப்பட்டு வருகிறது.

சமுதாய பணியாக, 1850 பெண்களுக்கு சுய தொழில் பயிற்சியும், 400 இளைஞர்களுக்கு தொழில் பயிற்சியும் அளித்து வருகிறது.

மும்பையை தலைமையிடமாகக் கொண்டு, சர்வதேச அளவில் கட்டுமானம், சாலை போக்குரவத்து, தொழிற்சாலைக்கு தேவையான உதிரி பாகங்கள் தயாரிப்பில் முன்னணி நிறுவனமாக செயல்படும், எல்&டி என்று அழைக்கப்படும் லார்சன் டூப்ரோ நிறுவனம், வர்த்தக விரிவாக்கத்தோடு, சமுதாய பணியிலும் ஈடுபட்டு வருகிறது.

தரமான மருத்துவ வசதி

கோவையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, ஈச்சனாரி செட்டிபாளையம் ரோட்டில், உற்பத்தி கூடத்தை துவக்கிய, லார்சன் டூப்ரோ நிறுவனம், இப்பகுதியை சுற்றியுள்ள, கிராமப்புற மக்களுக்கு, தரமான மருத்துவ வசதியை வழங்க, சுகாதார மையத்தை ஈச்சனாரி அருகே துவக்கியது.

இதில் மருத்துவ சேவையோடு, பெண்கள் மற்றும் ஆண்களுக்கு பல்வேறு தொழில் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.

கோவையில், 2012ம் ஆண்டு தொடங்கப்பட்ட லார்சன் டூப்ரோ பொதுநல அறக்கட்டளையின், சுகாதார மையமானது, புற நோயாளிகளுக்கு பொது மருத்துவ சிகிச்சை அளித்து வருகிறது.

தினமும் காலை 8.30 மணி முதல் மாலை 5 மணி வரை, குழந்தைகள் நல மருத்துவம், பொது மருத்துவம், பெண்களுக்கான மருத்துவம், காது, மூக்கு, தொண்டை மருத்துவம், தோல் சிகிச்சை உள்ளிட்ட தனித்தனிப்பிரிவுகளாக செயல்பட்டு வருகிறது. இதற்காக, நாள்தோறும் துறையின் சிறந்த மருத்துவ நிபுணர்கள், மருத்துவ பரிசோதனை அளித்து வருகின்றனர்.

குறைந்த கட்டணத்தில் பரிசோதனை

பொது சுகாதார மையத்திற்கு வரும் பொதுமக்களுக்கு, மருத்துவ ஆலோசனை இலவசமாக அளிக்கப்பட்டு வந்தது. தற்போது, இதற்கு ரூ.20 கட்டணம் மட்டும் வசூலிக்கப்படுகிறது. அனைத்து வகையான ரத்தப்பரிசோதனைகள், சர்க்கரை பரிசோதனைகள், குறைந்த கட்டணத்தில் வழங்கப்படுகிறது.

இந்த அறக்கட்டளையுடன் இணைந்து, அரவிந்த் கண் மருத்துவமனையும், குறைந்த கட்டணத்தில் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறது. மேற்சிகிச்சை தேவைப்படுவோருக்கு, அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்து சென்று தகுந்த சிகிச்சை அளிக்கப்படுகிறது.

எல்&டி பொது சுகாதார மையத்தின் மூலம், கோவை புறநகர் பகுதிகளான மதுக்கரை, போத்தனூர், மலுமிச்சம்பட்டி, கிணத்துக்கடவு, ஒத்தக்கால்மண்டபம், அரிசிபாளையம், சீரபாளையம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட, கிராம மக்கள் ஆண்டுக்கு சுமார் 30,000 பேர் பயனடைகின்றனர்.

சுயதொழில் பயிற்சி

எல்&டி பொதுநல அறக்கட்டளை மூலம், கல்வி கற்க இயலாத பெண்களும், சுய வேலை வாய்ப்பு பெற, இலவச தொழிற்பயிற்சி மையமானது, 2013ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது.

இம்மையத்தில், 10 வகையான பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், அவிநாசிலிங்கம், ஜெஎஸ்எஸ் உடன் இணைந்து, பெண்களுக்கான தையல், பேசன் டிசைனிங், மெஷின்எம்பிராய்டரி, ஆரி எம்பிராய்டரி, அழகுக்கலை உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. கணினி மற்றும் அலுவலக உதவியாளர் பயிற்சிகளும், இலவசமாக அளிக்கப்படுகிறது.

பயிற்சியின் போது தைக்கப்படும் துணிகள், ஆதரவற்ற இல்லங்களுக்கும், முதியோர் இல்லங்களுக்கும் வழங்கப்படுகிறது. 2013–2017ம் ஆண்டு வரை 1850 பேர் இப்பயிற்சி மையத்தில் பயிற்சி முடித்து, சுய வேலை வாய்ப்பாகவும், பல்வேறு தொழில் நிறுவனங்களில், வேலை வாய்ப்பும் பெற்றுள்ளனர். பயிற்சி முடித்த பெண்களுக்கு, சான்றிதழ்களும் வழங்கப்படுகிறது.

3 மாத கால பயிற்சி

இது தவிர, ஆண்களுக்கான எலக்ட்ரீசியன், ஏர் கண்டிசனிங் பயிற்சியும், ரத்தினம் கல்லூரியுடன் இணைந்து சோலார் பேனல் பயிற்சிகளும், பொள்ளாச்சி மகாலிங்கம் கல்லூரியுடன் இணைந்து, 3 மாத கால பயிற்சியான வெல்டிங் பயிற்சியும், மாணவர்களுக்கு உணவு, தங்குமிடமும் உள்ளிட்ட வசதிகளும் செய்து தரப்படுகிறது. பயிற்சி மையத்தில் படித்து முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது. மேலும், இதுவரை எலக்ட்ரிக்கல், ரெப்ரிஜிரேட்டர், சோலார் பேனல் உள்ளிட்ட பயிற்சிகளில், 400க்கும் மேற்பட்ட இளைஞர்கள் வேலை வாய்ப்பை பெற்றுள்ளனர்.

நாடுமுழுவதும் சமுதாய பணி

லார்ஸன் டூப்ரோ பொது நல அறக்கட்டளை மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறது. இந்தியாவில் ஒடிசா மாநிலத்தில் கன்ஸ்பால், குஜராத்தில் வடகோரா, மகாராஷ்டிராவில் உள்ள அகமத்நகர், சூரத், தமிழ்நாட்டில் சென்னை, கோவை உள்ளிட்ட பல இடங்களில் சுகாதார மையம் செயல்பட்டு வருகிறது.