ஹாரன்

‘தனசேகரு …. நீ சொன்ன கத என்னாச்சு?’
‘ஓ.கே. ஆயிருச்சுடா’
‘அப்பிடியா? கன்கிராசுலேசன்ஸ்’ தனசேகரின் கையைப் பிடித்துக் குலுக்கினான் ஜெயக்குமார். அறைத் தோழன்.
‘எவ்வளவு வருசப் போராட்டம் … அப்பப்பா …. இதுக்கு ஒரு முற்றுப்புள்ளி வச்சிட்ட தனசேகரு. ரொம்ப சந்தோஷம்டா’
மேலும் கையைப் பிடித்துக் குலுக்கினான்.
‘பட்ஜெட் எவ்வளவு’
‘ம்… அனேகமா அஞ்சு, ஆறு ஆகும்’
‘ஆமா’
‘நீ சொன்னது கோடியா?
‘ஆமா … இவ்வளவு சாதாரணமா சொல்ற?’
‘ஏன் என்னாச்சு… கோடிங்கிற விசயமெல்லாம் எங்களுக்கு சாதாரணம்…’ என்றான் தனசேகர்.
‘ம்… அப்ப இன்னும் கொஞ்ச நாள்ல. கார், வண்டி, பங்களான்னு எங்கயோ போயிருவ போல’
பெறகு எவ்வளவு நாளைக்கு தான் கஷ்டப்பட்டுட்டே இருக்குறது. நாமளும் மேடேற வேணாமா?
‘ஆமாமா… இன்னும் எவ்வளவு நாளைக்கு குண்டாஞ்சட்டியில குதிர ஓட்டிட்டு இருக்கிறது. செயிச்சு முன்னுக்கு வரணும்’ என்றான் ஜெயக்குமார்.
தனசேகரின் உலகம் இப்போது அழகாய் இருந்தது. நகரும் ஒவ்வொரு நொடியும் அழகழகாய் தெரிந்தது.
‘இன்னைக்கு எங்க போகணும்?’
‘ப்ரயூசர மீட் பண்ணனும்’
எப்போ?
சாயங்காலம்
எப்பிடிப் போற?
‘பிரண்ட் டூவீலர் எடுத்திட்டு வாரேன்னு சொல்லிருக்கான்’.
‘ஓகே … சக்சஸ் பண்ற வாழ்க்கையில ஜெயிக்கிற ஜெயக்குமார். கை கொடுத்து அனுப்பினான்.
‘ஓ.கே. பாய் ரைட் மீட் பண்ணலாம்.
தனசேகர் விரைந்தான்.
நண்பன் சக்திக்கு போன் செய்தான்.
‘எங்க இருக்க?’
‘வடபழனி’ என்றான் தனசேகர்.
ப்ரடியூசர் வீடு எங்க இருக்கு? சாலிகிராமத்தில அவங்க ஆபீஸ். வீடு… காட்டுப்பாக்கத்தில இருக்கு.
போரூர் தாண்டித்தான போகணும்.
‘ஆமா’
‘சரி நீ அப்ப வடபழனி பஸ் ஸ்டாண்டுல நில்லு. ஒன்னைய வந்து பிக் பண்ணிக்கிறேன்.
‘ஓ.கே. சக்தி’
தனசேகர் வடபழனி பஸ் ஸ்டாண்டில் நின்று கொண்டிருந்தான்.
நகரும் வாகனங்களை நங்கூரம் அடித்தாற் போல பார்த்துக் கொண்டிருந்தான்.
இம்புட்டு காரு வண்டி இருக்கு. இதில நமக்கு ஒண்ணுமில்லையே படம் பண்றோம். சக்சஸ் குடுக்கிறோம். காரு, வண்டி வாங்கிட்டு ரோட்டுல சிட்டா பறக்கிறோம்’ தனசேகர் மனதுக்குள்ளே கணக்குப் போட்டுக் கொண்டிருந்தான்.
அப்போது அவனுக்கு தண்ணீர் தாகம் எடுத்தது.
‘ம்.. தண்ணி தவிக்குதே… ஏதாவது ஓட்டலுக்கு போகலாமா?
‘ச்சீ … வேணாம் … அசிங்கம்’ என ஒரு பெட்டிக் கடைக்கு விரைந்தான்.
வாட்டர் பாக்கெட் குடுங்க.
‘மூன்று ரூவா குடுங்க’
என்னது மூன்று ரூபாயா? பெரிய இலக்கிய வாதி எதையும் இலக்கியத் தோடவே பேசுவாரு’ கோபமடைந்த தனசேகர்
‘ஏங்க, ஒரு வாட்டர் பாக்கெட் மூணு ரூவாயா?’
‘ஆமா’
‘இது ரொம்ப அநியாயம்ங்க’
‘அநியாயம், நியாயமெல்லாம் என்கிட்ட பேசாத. ஒரு வாட்டர் பாக்கெட் மூணு ரூவா வேணும்னா வாங்கு. இல்ல எடத்த காலி பண்ணு. நேரம்யா இதெல்லாம். இன்னும் கொஞ்ச நாள் தான். கார்ல கூடவே வாட்டர் பாட்டில் ஜூஸ், பழங்கள்னு கொட்டிட்டு போகணும். அப்பிடி வருவேன் பாரு’ இப்ப வேரு வழியில்ல இந்த தண்ணி பாக்கெட் தான் சொந்தம். இந்தா மூணு ரூவாய சில்லறைகளை நீட்டி வாட்டர் பாக்கெட்டை வாங்கி அதன் நுனியைப் பற்களால் கடித்து தலைக்கு மேலே தூக்கி குடிக்க ஆரம்பித்தான்.
தாகம் தொண்டை வரை தீர்ந்து நின்றது. வாய்க்கு வரும்போது வறட்சியாய் இருந்தது.
‘ம்க்கும்’ இந்த பாக்கெட் வாட்டர் வாங்கி குடிச்சு. என்னைக்கு நாம முன்னுக்கு வாரது. சீக்கிரமே, சீக்கிரமே படம் டைரக்ட் பண்ணனும். லைப்ல செட்டில் ஆகணும்’. தனக்குத்தானே சொல்லிக் கொண்டிருந்த போது சக்தி டூவீலரை அவன் முன்னால் நிறுத்தினான்.
‘என்னாடா ரோட்டுல நின்னுட்டே கனவா?
‘இல்லையே’
நான் தான் பாத்தனே… நீயா பேசிட்டு நின்னுருந்த.’
சரி சரி ஏறு போகலாம்.
என சக்தி சொல்ல தனசேகர் வேகமாய் டூவிலரில் ஏறினான்.
‘சரி போப்பா…’ இப்பவே டிராபிக் ஆரம்பிச்சிருச்சு… என்னைக்கு காட்டுப்பாக்கம் போறது. போறதுக்குள்ள கண்ணு முழி பிதுங்கிப் போகும்’ என பயணமானார்கள்.
மெல்ல மெல்ல நகர்ந்து போன டூவிலர் போரூர் சிக்னலில் நின்றது.
ம்க்கும்…., இங்கன நின்னா அம்புட்டு தான். எப்பிடியும் சிக்னல் வெலக ஒரு மணி நேரம் ஆகும் போல’ . தனசேகர் புலம்பிய போது, அவனை ஒட்டி ஒரு அரசுப் பேருந்து வந்து நின்றது. சுற்றிலும் வந்த பேருந்துகள் ஒன்றாய் வர வர எல்லா வண்டிகளுக்கும் நடுவே தனசேகர் டூவிலரின் பின்னால் உட்கார்ந்திருந்தான்.
‘பம்… பாம்…’ என ஹாரனை அழுத்தினார் ஓட்டுனர்.
இது இது வேறயா?
ஹாரன அடிச்சிட்டு, எங்க, யார முந்திட்டு போறீங்க. போகப் போறீங்க’ இந்த ஊர்ல தான்யா, எல்லாமே அவசரமா இருக்கானுக என்று தனசேகர் சொல்லிக் கொண்டிருந்தபோது அந்தப் பேருந்தின் ஹாரன் பிடுங்கிக் கொண்டு சத்தம். அந்தப் பகுதியையே ரணகளமாக்கியது.
‘பாம்ம்ம்ம்ம்ம்’ என்ற சத்தம் போரூரையே பிய்த்துக் தின்று கொண்டிருந்தது.
பேருந்து அருகே இருந்த தனசேகரின் இடது காதிலிருந்து ரத்தம் வழிய ஆரம்பித்தது.
‘ஐயோ எனக் கத்தினான் தனசேகர்.
‘சிக்னல் விலகியது’
சக்தி டூவீலரை ஓரங்கட்டினான்,
‘என்னாச்சு தனசேகர்’
பதட்டப்பட்டான்.
தனசேகரால் எதுவும் பேச முடியவில்லை. சைகையில் ஏதோ சொன்னான். தனசேகரை டூவிலரில் உட்கார வைத்துக் கொண்டு மருத்துவமனை விரைந்தான் சக்தி.
தனசேகரை பரிசோதனை செய்தார் மருத்துவர்.
‘எப்பிடி இது ஆச்சு?’
‘சார் போரூர் சிக்னல்ல டூவிலர்ல வெயிட் பண்ணிட்டு இருந்தோம். நான் ஹெல்மெட் போட்டிருந்தேன். இவன் ஹெல்மெட் போடல. பக்கத்தில இருந்த பஸ்ல ஹாரன் ஒடஞ்சு போச்சு. ஒரே சத்தம். வண்டிக்கு முன்னாடி இவன் இருந்ததால இப்பிடி ஆகிப்போச்சு’ என சக்தி சொன்னதும் ஆசுவாசப்பட்ட மருத்துவர்
‘இவரு என்னா வேல பாக்குறாரு’
அசிஸ்டண்ட் டைரக்டர் சார்.
ரொம்ப வருச போராட்டத்துக்கு பெறகு இப்ப தான் இவனுக்கு படம் கமிட் ஆகியிருக்கு’ என்றான் சக்தி.
‘ச்சே, பாவம்…’
‘ஏன் சார் பதட்டமாய்க் கேட்டான் சக்தி.
இவரோது காது போச்சுங்க, இனி அம்புட்டு தான். கேக்காது, ஆபரேஷன் பண்ண அம்பதாயிரம் ரூபா ஆகும். அதோட ஆறு மாசம் பெட் ரெஸ்ட்லயே இருக்கணும் என டாக்டர் சொல்ல சக்திக்கு தூக்கி வாரிப் போட்டது.
சார் என்ன சொல்றீங்க?
‘எஸ் தம்பி’
பணத்துக்கு ஏற்பாடு பண்ணிட்டு வந்து அட்மிசன் போடுங்க. ஆபரேசன ஆரம்பிக்கலாம்’ என மருத்துவர் சொல்லிவிட்டு நகர்ந்தார்.
‘ச்சே இவனோட லட்சியம் அழிஞ்சு போச்சே’ என்ற சக்தி திரும்பினான்.
தனசேகர் காதைப் பிடித்தபடியே உட்கார்ந்திருந்தான்.
காதிலிருந்து ரத்தம் மட்டுமல்ல, அவனுடைய சினிமாக் கனவுகளும் வழிந்து கொண்டே இருந்தன.