குழந்தை

பாம்… பாம்… பாம்…. ஹாரன் சத்தம் காதைக் கிழித்துக் கொண்டிருந்தது.
யோவ், ஏய்யா இப்படி ஹாரனப் போட்டு அடிச்சு காதக் கெடுக்குறீங்க. இந்த மெட்ராஸ்ல ஹாரன அடிச்சு யாரும் யாரையும் முந்திட்டு போக முடியாது . மெல்ல போங்க ஹாரன் அடிக்காம போங்க தேவப்பட்டா மட்டும் ஹாரன அடிங்க மத்தபடி சத்தத்த கொறைங்க என்ற உபதேசத்தை பேருந்தில் இருந்த படியே சொன்னார் ஒரு பெரியவர்,
பெருசு இந்த ஷேர் ஆட்டோ காரனுக இருக்கானுகளே அவனுக ரொம்ப மோசம். எங்கள எப்படி வண்டிய நிப்பாட்டுவானுகன்னே தெரியாது. யாரு எங்க கைகாட்டுறாங்களோ அங்கயே நிப்பாட்டிருவானுக – அவனுக்கு அவங்க குடுக்கிற பத்து ரூபா தான் பெருசு. மனுசனோட நேரத்த யோசிக்க மாட்டானுக என்றார் இன்னொரு பயணி.
பிரதான சாலையில் ஊர்ந்து ஊர்ந்து வந்து கொண்டிருந்தது. அந்த அரசுப் பேருந்து .
யப்பப்பா….. இந்த ஊர்ல மட்டும் தான் இவ்வளவு காரு வண்டிகள் ஓடிட்டு இருக்கு, வேற எங்கயும் இந்த அருயாயத்துப் பாக்க முடியாது ஒரே ஒரு ஆள் தாங்க ஒரு பெரிய கார ஓட்டிட்டுப் போறான் முன்னாளயெல்லாம் ஒரு கார் வாங்கவே கண்ணு முழி பிதுங்கிப் போயிரும் இப்ப எப்படித் தான் இம்புட்டு காரு வண்டிக வாங்குறானுகளோ? புல்லரிப்பாய் பேசினார் ஒரு பயணி.
பேருந்துக்குள் புகுந்திருந்தது வேர்வை வராத நெருக்கம், டிக்கெட், டிக்கெட், சார் யாராவது டிக்கெட்டு எடுக்கணும்னா, எடுத்திருங்க வர்ற ஸ்டாப்ல செக்கர் இருப்பாங்க அப்பெறம் குய்யோ முறையோன்னு கத்தக் கூடாது எச்சரிக்கை சொன்னார், நடத்துனர்.
தார்ச்சாலையெங்ழும் நிறைந்து நின்றிருந்தன, வாகனங்கள். அங்கு பாருங்க, இந்த எடத்தில சிக்னல் வேல செய்யாமப் போயி ரெண்டு மூணு வாரமாச்சு, இத எவனாவத கவனிக்கிறானான்னு பாருங்க நாலு தெசையில இருந்து வர்ற வண்டிக அப்படியே மொத்தமா ஒண்ணு சேருது யாரும் யாரையும் முன்னாடி போகணும்னு தான் ஆசப்படுறாங்க பேருந்தில் இருந்தவர்கள் எல்லாமே தத்துவம் பேச ஆரம்பித்தார்கள்.
எப்படியும் இந்த பஸ் கே.கே. நகர் டிப்போ போக ரெண்டுமூணு மணி நேரம் ஆகிரும் போல
கொறச்சு சொல்றிங்க அஞ்சு ஆறு மணி நேரம் ஆகுமுன்னு சொல்லுங்க பயணிகளின் பேச்சு பட்டி மன்றமானது அப்போது வீல் என்று ஒரு குழந்தை அலறியது எங்கெங்கோ திரும்பியிருந்தார்கள். ஒரு சேரத்திரும்பிப் பார்த்தார்கள்.
நகரும் பேருந்து வேகம், மனித வெக்கை , காற்றில்லாத புழுக்கமென அந்தக் குழந்தையை அது வருத்தி வாட்டியது.
வீல்….. வீல்…. . எனக் கதறிக் கொண்டே இருந்தது. எல்லோர் பார்வையிலும் கருணை அப்பிக் கிடந்தது. போக்குவரத்து நெரிசலைப் புறக்கணித்துவிட்டு குழந்தையின் அழுகையில் கவனம் செலுத்தினர் பயணிகள்
பாம்….பாம்… என்ற ஹாரனை மீண்டும் அழுத்தினார் ஒட்டுநர்.
இவரு வேற எடையில  கொழந்த வேற அழுதிட்டு இருக்கு. இதுல ஹாரன் வேறயா? சும்மா இருக்க மாட்டீங்களா?
என்ன இங்கனயே வண்டிய நிப்பாட்டவா? எரும மாடு மாதிரி வண்டிய போட்டு ரோட்டுல நிக்காறானுக ஹாரன் அடிக்கலன்னா ஒரு பயலும் வண்டிய நகர்த்த மாட்டானுக என்றால் ஓட்டுநர்.
வீல் வீல்…. என முனுக்கி முறுக்கி அழுது கொண்டிருந்துது. குழந்தை ச்சே …. பாவம்ங்க கொழந்த எப்படி அழுகுதுன்னு பாருங்க
ஏம்மா கொழந்தய அமத்துமா?
என்று ஒரு ஈரமுள்ள பெண் முன்மொழிந்தாள்.
சுடிதாரில் இருந்த அந்தக் குழந்தையின் தாயால் பாலூட்ட முடியவில்லை என்னம்மா முடியலையா?
ஆமாங்க என்பது போல் தலையாட்டினாள் அந்தத்தாய்.
குழந்தை தன் அழுகையை நிறுத்தவே இல்லை. பேருந்து ஆமை வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்தது.
பயணிகளின் கவனம் முழுவதும் அந்தக் குழந்தையின் அழுகையிலேயே குவிந்தது.
ஈரம் தொட்டாத உதடுகள் இல்லை. எல்லாம் குழந்தையின் அழுகையையே ஆராதித்தார்கள். அந்தத்தாய், அழுத குழந்தையை தோளில் போட்டுத் தட்டிக் கொடுத்தாள் குழந்தை தன் அழுகையை நிறுத்தவே இல்லை அந்தத் தாயின் முகம் பரிதாபத்தின் உச்சிக்கே போனது. அழுதழுது முகம் சிவந்து போனது குழந்தையின் முகம் பேருந்து இன்னும் மெல்ல மெல்லவே ஊர்ந்து கொண்டிருந்தது.
குழந்தை தன் அழுகையை நிறுத்தவே இல்லை யார்யாரோ என்னென்வோ செய்தார், குழந்தை தன் அழுகையை இல்லை இதைப் பார்த்துக் கொண்டிருந்த ஒரு தாய் சடாரென குழந்தையைத்தன் கையில் வாங்கினாள்.
தன் மாராப்பை விலக்கி குழந்தையின் முகம் புதைத்தாள். எல்வோரும் ஆச்சரீயம் கலந்து பார்த்தார்கள்.
பாவம்ங்க புள்ள ரொம் நேரம் அழுதிட்டு இருக்கு அதான் என்றாள் குழந்தையை வாங்கியவள். மார்பில் முகம் புதைந்த குாந்தை மூச் மூச்சென்று பால்க்குடிக்க ஆரம்பித்தது குழந்தையின் அழுகைச்சத்தம் கொஞ்சம் அடங்கியது அதுவரையில் அடைபட்டுக் கிடந்த கோக்குவரத்து நெரிசல் கொஞ்சம் விலகியது சீரான வேகத்தில் பேருந்து பயணப்பட்டது யாரோ ஒருத்தியின் மார்ப்பில் பாலக்குடித்துக் கொண்டிருக்கும் குழந்தையின் தலைமுடி அடிக்கும் காற்றில் லேசாக அசைந்து கொண்டிருந்து.

ராஜா செல்லமுத்து