உதவி

விமலா அடையாறு டிப்போவில் நின்று  தன்வழிப்பாதையில் வரும் பேருந்தை எதிர்பார்த்துக் காத்திருந்தாள் . அது வருவேனா? என்று அடம்பிடித்துக் கொண்டிருந்தது.
ச்சே.. ஏன் தான் இந்த பஸ்காரங்க இப்படிச் செய்றாங்களோ? வந்தா ஒண்ணா வாராது. இல்ல வாதில்ல. நேரத்துக்கு டியூசன் போக முடியல . தெனமும் இதோ ரோதனையா இருக்கு. சலித்தபடியே நின்றிருந்தாள். அவள் வழித்தடப் பேருந்தை விட மற்றதெல்லாம் விரைந்து கொண்டிருந்தன.
சலிப்பின் உச்சிக்கே போனாள்  விமலா
யம்மா  யம்மா என்ற யாரோ ஒரு பெண்ணின் குரல் கேட்டு விசுக்கெனத் திரும்பினாள்.
என்னங்க? “
நாங்க வெளியூர் இங்க வந்து மாட்டிக்கிட்டோம் ;கொண்டு வந்த பர்ஸ் காணாமப்போச்சு : ஒரு பத்து ரூவா இருபது ரூவா குடுத்தா போயிருவோம் என்றாள் ஒரு பெண்மணி. உடன் மூன்று பேர் நின்றிருந்தார்கள். இருவது ரூவா குடுத்தா போயிடுவீங்களா ? விமலா வியப்பாய் கேட்டாள்.
முடியாது தான் அவ்வளவு பணமும் ஒங்க கிட்டயே கேக்க முடியாதில்ல. ஒங்கள மாதிரி ஆளுக்கிட்ட வாங்கிட்டு போயிருவோம் .ஒங்களுக்கு ஆட்சேபணையில்லைன்னா, ஐநூறு ரூவா குடுங்க என்றாள்  அந்தப்பெண்
ஐ நூறா?
ஆமாங்க நீங்க தான கேட்டீங்க . உடன் வந்திருந்த இரண்டு பெண் குழந்தைகளும் ஒரு பெரியவரும் நின்றிருந்த தோரணையைப் பார்த்த போது விமலாவுக்கு என்னவோ போலானது. இப்படி வயசுப் புள்ளைகள வச்சிட்டு சீக்கிரம் கூட்டிட்டு போங்க என தன் கைப் பையிலிருந்து ஐ நூறு ரூபாயை எடுத்து நீட்டினாள்.
அம்மா ரொம்ப நன்றிம்மா என்றபடியே பணத்தை வாங்கிய பெண் ஒரு கைகளையும் எடுத்துக் கும்பிட்டாள்.
போங்க சீக்கிரம் ஊரப் பாத்துட்டு போங்க.
சரிம்மா ஒன்னோட நல்ல மனசுக்கு நீ ரொம்ப நல்லா இருப்பம்மா. ஒனக்கு நல்ல தொண சீக்கிரமே அமையும்.
ஆசிர்வாதம் செய்தார் பெரியவர் விமலாவுக்குள் ஒரு பிரளயத்தையே ஏற்படுத்தியது.
ஒனக்கு நல்ல வரனா சீக்கிரமே அமையும்.  ச்ச … இது உண்மையானா எப்படி இருக்கும் ? பாக்கிற வரனெல்லாம் தட்டிட்டே போகுதுன்னு அம்மா ரொம்ப வருத்தப்படுவா .ஆனா யாருன்னே தெரியாத ஒரு அம்மா இப்படி சொல்லிட்டு போறாங்க. உள்ளுக்குள் உதறல் எடுத்து  கண்களில் கண்ணீர் வழிந்தது.
அப்போதும் அவள் வழித்தடப் பேருந்து வந்த பாடில்லை
எம்புட்டு நேரம் நிக்கிறத கடுகடுத்தாள் . ஏம்மா நானும் பாத்திட்டு தான் இருக்கேன். பஸ்ஸுக்காக காத்திட்டு இருக்க ஆனா யாருன்னே தெரியாதா .ஒருத்தவங்களுககு ஐநூறு ரூவா குடுத்து விடுறது தம்பும்மா என்றாள் உடன் நின்றிருந்த ஒரு பயணி.
பாவம்ங்க வெளியூர்ல இருந்து இங்க வந்து மாட்டிக்கிட்டாங்க. கூட ரெண்டு பொம்பளப்புள்ளைங்க வேற பாக்க பாவமா இருந்துச்சு.  காசு பெருசா என்ன? போகட்டும.இதெல்லாம் ஒரு தர்மம்தான என்றாள் விமலா
நீ மெட்ராஸ்க்கு புதுசா?
ஆமா
அதான் போகப் போகத் தெரிஞ்சுக்கிருவ
என்னவாம்?
என்னவாமா?
இவங்கெல்லாம் ரொம்ப ஏமாத்துறவங்க. இவங்களுக்கு இதே பொழப்பு தான் தெனமும் யார்கிட்டயாவது இப்படி பணம் கேட்டுட்டு இருப்பாங்க. நீ குடுக்கும் போதே தடுத்துருப்பேன் .வேணாம்னு தான் விட்டுப்பிடேன்.
இல்லங்க நீங்க பொய் சொல்றீங்க. விமலா விடாமல் அந்தப் பெண்ணுடன் வாதம் செய்து கொண்டிருந்தாள்.
இன்னைக்கு இல்லன்னாலும் ஒரு நாள் இத நீ கண்டிப்பா தெரிஞ்சுக்கிருவ என்றாள் அந்தப் பெண்.
இருவரும் வாதம் செய்து கொண்டிருந்த போதே விமலாவின் வழித்தடப் பேருந்து வந்து சேர்ந்தது. அந்தப்பெண்ணை முறைத்துப் பார்த்துக் கொண்டே பேருந்தில் ஏறினாள் விமலா’
ச்ச்.. ஏன் தான் இப்படி இருக்காங்களோ? உதவியும் செய்யமாட்டாங்க. செய்ற உதவியையும் தடுக்குறாங்க புலம்பியபடியே பேருந்தில் பயணமானாள்.
மறுநாள் தான் ஹோம் டியூசனை முடித்துவிட்டு அடையாறு டிப்போவில் நின்றிருந்தாள். தன்னுடைய வழிப்பேருந்தை எதிர்பார்த்திருந்தாள்.
ம்ஹுகும் அது வருவேனா? என்று இருந்தது. இந்த பக்கம் மட்டும் ஏன் பஸ்க வர மாட்டேன்கிதோ?
சரி தி. நகர் போயி வேற பஸ்ல போயிரலாம். ஒரே பஸ்ல போறது இனிமே ஆகாது. கட்பண்ணிட்டு போயிர வேண்டியது தான் என முடிவு செய்து தி. நகர் பஸ்ஸில் ஏறினாள். சிறிது நேரத்தில் பேருந்து தி. நகர் வந்து சேர்ந்தது.
தி. நகர்ல இருந்து நமக்கு பஸ் ஈஸியாக கெடைக்கும் முடிவு செய்து கீழே இறங்கினாள். அவள் நினைத்தபடியே அவளின் வழித்தடப் பேருந்து நின்றிருந்தது. ஆகா இனிமே தி. நகர். போயிர வேண்டியது தான் முடிவு செய்து பேருந்தில் ஏறப் போனாள்.
பேருந்தை நோக்கிச் சென்றவள் சற்று பின்வாங்கினாள். அங்க பார்த்த காட்சி அவளை உருக்குலையச் செய்தது. பஸஸில் அவள் ஏறாமலே பஸ் புறப்பட்டது.
ச்சே…. இப்படியும் ஆளுக இருப்பாங்களா. இதெல்லம் ஒரு பொழப்பா. அந்த அம்மா சொன்னது சரித்தான் போல என்ற படியே தூரமாய் இருந்து வேடிக்கை பார்த்தாள்.
சார் நாங்கள் வெளியூர் காரங்க. இங்க வந்த எடத்தில பர்ஸ் தொலைச்சிட்டோம் . பொம்பளை புள்ளைங்க ஊருக்கு போகனும் . பத்து ரூவா இருபது ரூவா இருந்தா குடுங்க என்றாள் விமலாவை ஏமாற்றிய அதே பெண்.
இருவது ரூவா குடுத்தா போதுமா? என்றார் இதைக் கேட்டவர் .
ஐநூறு ரூவா ஆகும் மொத்தப் பணத்தையும் ஒங்க கிட்ட கேக்க வருத்தமாயிருக்கு . ஒங்கள மாதிரி நல்ல மனுசங்ககிட்ட கேட்டு கேட்டு வாங்கிட்டு போக வேண்டியது தான் வேற வழியில்ல என்று அந்தப்பெண் சொன்ன போது அவர் தன் பர்ஸிலிருந்து பணத்தை எடுத்தார்.
அதற்குள் விமலா அந்த இடத்திற்கு வந்தாள். தன் கையில் ஒரு ஐநூறு ரூவாயை நீட்டினாள்.
இதை எதிர்பாக்காத அந்தப்பெண் வெலவெலத்துப் போனாள். என்னைய மன்னிச்சிருமா என்றாள் இந்தப்பெண்.
அசிங்கமா இல்லையா? கைகால் நல்லா தான இருக்கு. ஒழைச்சு சாப்பிடணும் .இப்படி மத்தவங்பள ஏமாத்தி பொழைக்க கூடாது .விமலா விளாசினாள். வெக்கித் தலைகுனிந்த அந்தப்பெண் அந்த இடத்தை விட்டே நகர்ந்தாள். என்னமா என்னாச்சு?
என்றாள் பணத்தை நீட்டியவர் ஒண்ணுமில்லங்க .
சும்மா என்று தான் பணம் கொடுத்த விசயத்தைச் சொல்லாமலே நகர்ந்தாள் விமலா.

ராஜா செல்லமுத்து