மௌன மொழி

காலையில் எழுந்து வீட்டு வேலையை முடித்து கணவருக்கு சாப்பாடு கட்டி கொடுத்து வேலைக்கு அனுப்பி விட்டு மாநகர பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்தாள் ரெடிமேட் ஆடை ஏற்றுமதி நிறுவனத்தில் வேலை செய்யும் சுமதி.
தனது கைக் கடிகாரத்தில் மணியை பார்த்தாள் சுமதி. மணி 9.30.
வழக்கமாக 9.25 மணிக்கு வரும் பஸ் இன்னும் வரவில்லையே என்று பரபரப்புடன் பஸ் வரும் வழியை திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டிருந்தாள் சுமதி.
20 நிமிட பஸ் பயணம் செய்து அலுவலகம் அருகில் உள்ள பஸ் நிலையத்தில் இறங்கி 5 நிமிடம் நடந்து சென்றால் தான் அலுவலகத்திற்கு செல்லமுடியும்.
அலுவலகத்திற்கு 10 மணிக்குள் செல்ல வேண்டும். இல்லையேல் உயர் அதிகாரிகளிடம் திட்டு வாங்க வேண்டும் என்ற பயம்.
அதனால் மனதில் ஒருவித படபடப்புடன் பஸ் வரும் திசையை மீண்டும் மீண்டும் பார்த்தாள்.
ஒருவழியாக பஸ் வந்தது. அந்த பஸ்சில் கூட்டம் அலைமோதியது.
அதையும் பொருட்படுத்தாமல் முண்டி அடித்துக் கொண்டு பஸ்சில் ஏறினாள் சுமதி.
25 நிமிடத்தில் சுமதி இறங்க வேண்டிய பஸ் நிறுத்ததிற்கு வந்தது அந்த பஸ்.
அதிலிருந்து வேகமாக வேகமாக இறங்கி மீண்டும் தனது கை கடிகாரத்தை பார்த்தார். 10 மணிக்கு இன்னும் 5 நிமிடம் இருந்தது.
நிம்மதி பெரு மூச்சு விட்ட சுமதி வேகமாக நடந்து 10 மணிக்கு அலுவலகத்திற்குள் சென்றாள்.
அங்கு தனக்குரிய இடத்தில் உட்கார்ந்து பணியை தொடர்ந்தாள்.
அந்த நிறுவனத்தில் சுமதியுடன் சுமார் 40க்கும் மேற்பட்ட பெண்கள் வேலை செய்கின்றனர்.
11.30 மணிக்கு டீ கொடுக்கப்பட்டது. அவற்றை குடித்து விட்டு தனது பணியை தொடர்ந்தாள்.
1 மணியானதும் ஒவ்வொருவராக சாப்பிடச் சென்றனர்.
சுமதியின் தோழிகள் கயல்விழி, கோமதி, சாந்தி ஆகியோர் சாப்பிட செல்லும் போது, சுமதியை அழைத்தனர்.
சுமதியும் அவர்களுடன் சேர்த்து சாப்பிடச் சென்றாள்.
ஒரு இடத்தில் அவர்கள் கூட்டாக அமர்ந்து சாப்பாட்டை பிரித்து சாப்பிடத் தொடங்கினர்.
அப்போது ஒவ்வொருத்தரும் நேற்று இரவு பணி முடிந்து வீட்டுக்கு சென்றதும் அங்கு குழந்தைகள் மற்றும் கணவருடன் நடந்த வேடிக்கையான விஷயங்களை கூறி சிரித்துப் பேசினர்.
கோமதி என்பவர், ‘‘அடியே நேத்து ராத்திரி வீட்டுக்கு போனதும் எங்க வீட்டுக்காரரு, அவங்க அலுவலக கதையை கூறத் தொடங்கினாரு.
அவரோட நண்பர் ஒருத்தர் முட்டாள்தானமா நடந்துகிட்ட கதையை சொன்னார்.
அதை கேட்டு கேட்டு நானும் என் பசங்களும் சிரிச்சுக்கிட்டே கிடந்தோம்’’ என்று கூறினாள்.
உடனே சாந்தி… அடியே எங்க வீட்டுக்காரரு ஆபிசுல அவங்க மேனேஜர்கிட்ட சண்டை போட்டு வந்துட்டாராம். அதையே நினைச்சு புலம்பிக்கிட்டு இருந்தாரு.. அவரை சமாதானம் படுத்தவே நேரம் சரியா இருந்துச்சுடி’’ என்றாள்.
இதை அனைத்தையும் சுமதி கேட்டுக் கொண்டிருந்தாள். ஆனால் அவள் முகத்தை எந்தவித சிரிப்பும் இல்லை. மாறாக ஒருவித ஏக்கம் மட்டுமே இருந்தது.
சுமதிக்கு திருமணமாகி 1 மாதம் தான் ஆகியிருந்தது. ஆனாலும் அவளுக்கு வாழ்க்கையில் ஒரு சந்தோஷம் இல்லாத நிலை இருந்தது. காரணம் அவளது கணவரின் பரிதாபமான நிலைதான்.
சுமதியின் வாடிய முகத்தை பார்த்த கோமதி…. டக்கென்று சுதாரித்துக் கொண்டாள்.
சுமதி…. ஏன் ஒரு மாதிரி இருக்க…. நாங்க இவ்வளவு சிரிச்சி பேசிக்கிட்டு இருக்கோம். நீ என்னடானா எதையோ பறிகொடுத்தவ மாதிரி இருக்க…
அது ஒண்ணும் இல்லை…. என்று தனது முகத்தில் வராத சிரிப்பை வரவைக்க முயற்சி செய்தாள் சுமதி…
உடனே கோமதி பேசினாள்:
அடியே சுமதி நீ எதுக்கு இந்த மாதிரி இருக்கேன்னு எனக்கு புரியது.
நாங்கள் எல்லாம் எங்க வீட்டில் சிரித்து பேசுறத கேட்டா உனக்கு கவலையா இருக்கா…
இதுக்கெல்லாம் நீ கவலைப்படக்கூடாது.
ஒவ்வொருத்தருக்கு ஒரு குறை இருக்கத்தான் செய்யும்…. சிலரோட குறை வெளிய தெரியாது…
சிலரோட குறை வெளியில் தெரியும்.
பாவம் தான் நீ. சின்ன வயதில் அப்பா இல்லாமல் வளர்ந்தாய்.
உங்க அம்மா கஷ்டப்பட்டு உன்னை டிகிரி படிக்க வச்சுட்டாங்க.
பிறந்த வீட்டில் தான் கஷ்டத்தை அனுபவித்து வந்தாய். உன்னோட திருமண வாழ்க்கையாவது கஷ்டம் இல்லா இருக்கட்டும்னு தான் உங்க அம்மா உனக்கு கொஞ்சம் வசதியான இடத்தில் கல்யாணம் பண்ணி வச்சாங்க.
உன் புகுந்த வீட்டில் எல்லா வசதியும் இருக்கு. ஆனா… என்ன உங்க வீட்டுக்காரருக்கு சின்ன குறை இருக்கு…
அவருக்கு என்ன வாய் பேச முடியாது…. காது கேட்காது… இது தான் குறை…
உன்னோட மனசு படும் பாடு எங்களுக்கும் புரியும்.
வீட்டுக்காருக்கு வாய் பேச முடியாது என்றால் நமது துக்கத்தையும் சந்தோஷத்தையும் அவரிடம் பரிமாறிக் கொள்ள முடியாதுதான்…
ஒவ்வொரு பொண்ணும் தன்னோட கஷ்டத்தையும் சந்தோஷத்தையும் தன் வீட்டுக்காரரிடம் வாய்விட்டு பேசி மன ஆறுதல் அடைவார்கள்.
கணவர் கூறும் ஒவ்வொரு வார்த்தையும் ஒரு பெண்ணிற்கு ஆனந்தத்தை கொடுக்கும். அந்தப் பாக்கியம் உனக்கு இல்லை.
இதுக்காக நீ கவலைப்படக் கூடாது.
உன் கணவர் ரொம்ப நல்லவர். அவருக்கு வாய் பேச முயடிாத மற்றும் காது கேட்காத குறை மட்டும் தான்.
நீ செய்த தியாகத்திற்காக உன் கணவர் உன்னை காலம் முழுவதும் சந்தோஷமா வைத்திருப்பார்.
இது கூட உனக்கு ஒரு விதத்தில் நல்லது தான்….
ஏன்னு கேளு… என்று சாந்தி பேசினாள்…
எங்க வீட்டுக்காரரு ஒரு நேரத்தில் நல்லா பேசுவாரு… அவருக்கு கோபம் வந்துட்டா அவர் வாயில் இருந்து வரும் வார்த்தையை காதில் கேட்கவே முடியாது…
எங்க வீட்டில் பாதி நேரம் நாங்க இரண்டு பேரும் சண்டை போட்டுக்கிட்டு தான் இருப்போம். அதை எல்லாம் இங்க வெளியே சொல்றது இல்லை. அதனால் உனக்கு அது தெரியாது.
என் வீடு மட்டுமல்ல… இங்கு இருக்கிற எல்லோர் வீட்டிலேயும் இதே மாதிரி தான்.
உனக்கு அந்த கஷ்டமே இருக்காது…
அதனால் உனக்கு கிடைத்த இந்த வாழ்க்கை ரொம்ப நல்லதுன்னு நினைச்சு…. கிடைத்ததை சந்தோஷமா ஏத்துக்கோ… என்றாள் சாந்தி.
உடனே கயல்விழி… சுமதி நீ குறையை நிறையா மாத்த நீ முயற்சி செய்.
உங்க வீட்டுக்காரரு நல்லா சைகை மூலம் பேசுறாரு… அதனால் நீயும் அதை கத்துக்கோ…
பேச முடிந்தவர்களுக்காக தூர்தர்ஷனில் ஒவ்வொரு ஞாயிற்று கிழமையும் ‘‘சைன் லாங்க்வேஜ்’’ செய்தி வாசிப்பு இருக்கும்.
இப்பக்கூட பிபிசி டி.வியில் ஆங்கில சேவையில் எப்பவும் இந்த சைன் லாங்க்வேஜ் இருக்கும்.
அந்த சைகை மொழியை நீயும் கத்துக்கோ…
நீயும் அந்த மொழியை கத்துக்கிட்டு அழகா உன் வீட்டுக்காரரு கூட சைகை மொழியில் பேசு.
வாழ்க்கை சந்தோஷமா மாறிடும் என்றாள் கயல்விழி.
மறுநாள் சுமதி ஓடிவந்தாள்.
அக்கா நானும் எங்க வீட்டக்காரர் செய்யும் சைகையை கொஞ்சம் கொஞ்சம் புரிஞ்சுக்க ஆரம்பிச்சிட்டேன்.
நீங்க சொல்ற மாதிரி அந்த மொழியை கத்துக்கிறேன் என்றாள் சுமதி.
அப்போது சுமதியின் முகத்தில் இதுவரையில்லாத சிரிப்பு வரத்தொடங்கியது.

துரை.சக்திவேல்