வழித்தடம்

ஏப்பா படியிலயே நிக்கிறியே உள்ள வரமாட்டியா?
படியில் பயணம் சொடியில் மரணம்னு எழுதி வச்சிருக்கோம்ல .
படிச்சவன் தான உள்ள வரவேண்டியது தான. ஆணியடிச்சதுமாதிரியே அங்கனயே நின்னுட்டு இருந்தா என்ன அர்த்தம். அவ்வளவு பெரிய கூட்டத்திலும் அர்த்த புஷ்டியோடு பேசிக் கொண்டிருந்தார் நடத்துனர் நாகராஜன்.
ஏன் உள்ள வந்தா எடமா வச்சிருக்கீங்க? இவ்வளவு வக்கனையா கூப்பிடுறீங்களே வம்பிழுத்தான் ஒரு பயணி. எடத்த பாத்து நீ தான்யா நிக்கனும். விட்டா வீட்டுல இருந்து வரும் போதே ரிசர்வ் பண்ண சொல்லுவ போல எனறார் உடன் பயணிக்கும் ஒரு பயணி.
பேருந்து மெல்ல மெல்ல நகர்ந்து கொண்டிருந்தது.
ஏம்மா, உள்ள தள்ளி நில்லுங்கம்மா . எவ்வளவு எடங்கெடக்குன்னு பாருங்க உள்ள தள்ளுங்க.
சார் ஒரு டிக்கட் பாஸ் பண்ணுங்க
எங்க?
கோயம்பேடு
இந்தா தம்பி ஒரு டிக்கெட்ட .வாங்குங்க
டிக்கெட் டிக்கெட் யாராவது  டிக்கெட் வாங்க வேண்டியிருந்தா வாங்கிருங்க. அப்பெறம் செக்கர் வந்திட்டாங்கன்னு கூவக்கூடாது என்று கொக்கரித்தார் முருகேசன்.
டிக்கெட் யாராவது டிக்கெட் எடுக்க வேண்டியிருக்கா .எடுக்கலன்னா கேட்டு வாங்கிக்கங்க. டிக்கெட்…. டிக்கெட்…. மீண்டும் அதையே சொல்லிக் கொண்டிருந்தார்.
தாம்பரத்திலிருந்து உருண்டு வந்த அந்தப் பேருந்து பில்லர் சாலையில் இளைப்பாறி நின்றது.
‘‘பில்லர் எறங்குங்க. சீக்கிரமா எறங்குங்க..’’
ஏய் யாருய்யா.  படியில நின்னுட்டு இருந்தா எப்படி? ஆளுக எறங்குவாங்க. ஒன்னு மேல ஏறு :இல்ல கீழ எறங்கி வழிய விடு; அத விட்டுட்டுபடியிலயே ஆணியடிச்ச மாதிரி நின்னுட்டு இருக்க
“ம் எடுக்க முடியல …. புடுங்கிவிட வாரீயா?
ஏய் திமிருதான …. சொன்னா
கேளுய்யா. யாரோட நல்லதுக்கு சொல்றாங்க ….. பட்டாதான்யா ஒங்களுக்கெல்லாம் தெரியும் உறுமினார் ஒருவர்.
கூட்டத்தை முண்டியடித்துக் கொண்டு நாலைந்தது பேர் போகணும்?
கோடம் பாக்கம் போகணும்
என்னது கோடம் பாக்கமா?
ஆமாங்க.
ஏய்யா பஸ்ல ஏறும் போதே எங்க போகுதுன்னு கேட்டுட்டு ஏறமாட்டீங்களா?
வண்டி மூவ் ஆனப்பறம் ஏப்பா கழுத்தறுக்கறீங்க. வர்ற ஸ்டாப்புல எறங்கிக்கங்க.
ஸாரிங்க
என்ன ஸாரி. இனிமே பஸ்ல ஏறும் போது முன்னாடியே இது எங்க போகுதுன்னு கேட்டு ஏறுங்க .வண்டி மூவ் ஆனப்பறம் கழுத்தறுக்காதீங்க திட்டினார் முருகேசன்.
ஏங்க விடுங்க .அவங்க தான் தெரியாம ஏறிட்டாங்க . அவங்கள போயி இப்படி திட்டிட்டு இருக்கிங்க. விடுங்க ஊருக்கு புதுசா இருப்பாங்க போல. அதான் தெரியாம ஏறிட்டாங்க .அதுக்கு போயி இப்படி திட்டிட்டு இருக்கீங்க. பயணிகள் அவர்களுக்கு சாதனமாகவே பேசினார்கள்.  போங்க இதென்னமோ பெரிய குத்தம் மாதிரி பேசிட்டு இருக்காங்க என்று ஆளுக்கு ஒன்றாய் பேசிக் கொண்டிருந்தார்கள்.
அதற்குள் பில்லரிலிருந்து வண்டி வடபழனி கோயிலில் வந்து நின்றது.
நான்கு பேர்களுக்கும் தடபுடலாக இறங்கினார்கள்.
பாத்து பஸ்ல ஏறுங்க சரி என்றது நான்கு பேரின் கூட்டம்.
டர்டர் என்ற உறுமல் சத்தத்தோடு வந்தது ஒருபேருந்து . மீண்டும் அந்தப் பேருந்தில் ஏறியது நான்கு பேர் கொண்ட கூட்டம்.
டிக்கெட் …. டிக்கெட்…. டிக்கெட்… எடுங்க
சார் கோடம்பாக்கம் போகணும் என மீண்டும் அதையே சொன்னார்கள் .அந்த நான்கு பேர்களும்
என்னது கோடம்பாக்கமா?
இது கோயம்பேடு போற வண்டி
ஐயய்யோ கோயம்பேடு வண்டியா?
கீழயே கேட்டோம். இது கோடம்பாக்கம் போகுமுன்னு சொன்னாங்களே. கோயம்பேடு தான் எங்களுக்கு கோடம்பாக்கம்னு கேட்டுருக்கு போல
சரி சரி வர்ற ஸ்டாப்புல எறங்கி போங்க இனிமேல எங்க போகனும்னு கேட்டுட்டு ஏறங்க …. திட்டினார் நடத்துனர்.
எம் எம் டிஏ காலனியில் நின்றது. பேருந்து நான்கு பேர்களும் அவசரம் அவசரமாக இறங்கினார்கள்.
இறங்கிய நால்வரும் ஒரே திசையில் நடந்தார்கள்.
என்ன பாலு வீட்டுக்கு போறியா? இல்ல சரக்கடிக்க வாரீயா?
‘‘சரக்குபோட்டுட்டு வீட்டுக்கு போவமே ’’முன்மொழிந்தார் பாலு,
ராமா நீ என்ன சொல்ற? குமார் சொன்னது மாதிரி சரக்கு போட்டுட்டே போவோம் என்றபடியே நான்கு பேர்களும் சாலை வழியே நடந்து கொண்டிருந்தார்கள். ரெண்டாவது பஸ்காரன் பரவாயில்ல மொழி பஸ்காரன் தான் ரொம்ப பேசிட்டான்.
இங்கனக்குள்ள போறதுக்கு ஆளுக்கு இருபது ரூவான்னா நாலுபேருக்கு நாலு ரெண்டு எட்டு எம்பது ரூவா ஒரு குவார்டர் காச கேக்குரானுகளே
இவனுகளுக்கு தான் ஏமாத்தத் தெரியுமா? நாமெல்லாம் எவ்வளவு பெரிய யோசனக் காரனுக . கோடம்பாக்கமும் கோயம்பேடு நமக்கு தெரியாதா என்ன?
நம்ம கிட்டயே ரூட்டு சொல்றானுக ….. மெட்ராஸவே கரச்சு குடிச்சிட்டு வந்திருக்கோம். ஒருத்தன் ஊருக்கு புதுசுன்னு சொல்றான் ; பாவம் தெரியாம பஸ்ல ஏறிட்டாங்க விட்டுருகன்னு ஒருத்தன் சொல்றான் பாவம் இவனுக்களுக்கு தெரியுமா?
நாம டிக்கெட் எடுக்காம இவணுகள ஏமாத்தி வந்த விசயம். இவனுகளையெல்லாம் இப்படித்தான் ஏமாத்தனும் என்று பாலு சொல்லச் சொல்ல நான்கு பேர்களும் கெக்கலி கொட்டிச் சிரித்தார்கள்.
சிறிது நேரத்தில் டாஸ்மாக் போய் தண்ணீர் அடித்துவிட்டு பஸ்ஸடாப் வந்தார்கள்.
என்ன குமார் நீ எங்க போகணும்
அண்ணா நகர், நானும் அண்ணா நகர் தான் போகனும் .
சரி பாப்பம்டா என்று நண்பர்களிடம் விடை பெற்றார்கள்.
அண்ணாநகர் போகும் வழித்தடப் பேருந்தில் ஏறினார்கள்.
எங்க போகனும்?
வடபழனி போகனும்
என்னது வடபழனியா?
ஆமாங்க..
யோவ்.. இது அண்ணா நகர் போற வண்டிங்க . வண்டியில ஏறும் போது கேட்டுட்டு ஏறமாட்டீங்களா?
அடுத்த ஸ்டாப்புல எறங்கிக்கர்றோம். என்றார்கள்.
கண்டக்டர் ஓங்கி விசில் அடித்தார்.
அண்ணாநகர் போலீஸ் நிலையம் எதிரே பஸ் நின்றது.
கண்டக்டர் சத்தமாக குரல் கொடுத்தார் – ‘‘ இன்ஸ்பெக்டர்  சார்…குடிச்சிட்டு பஸ்ஸில ஏறி கலாட்டா பண்றாங்க…. ’’ என்றார்.
பதறிப்போன பாலுவும் குமாரும் இறங்கி ஓடிக் கொண்டிருந்தார்கள்.
பாய்ந்து வந்தனர் போலீசார்
பணமே இல்லாமல் பஸ் பயணம் செய்து திருப்திப்பட்டுக் கொண்டிருந்த அவர்களை மடக்கிப்பிடித்து  போலீசார் கைது செய்து கொண்டு போய் முட்டிக்கு முட்டி தட்டி சிறையில் அடைத்தனர்.

ராஜா செல்லமுத்து