மேனேஜர்

பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது அந்த பிரதான ஓட்டல்.
‘ஏம்மா அவருக்கு சாம்பார் வேணுமாம் குடு’
‘சரிங்க சார்’
‘நடக்காத …. ஓடு …. விரட்டினார் மேனேஜர் முருகேசன்.
ஜோதி சாம்பார் வாளியைத் தூக்கிக்கொண்டு வேக வேகமாய் ஓடினாள்.
‘சார் சாம்பார்’
‘ம்’
ஜோதி சாம்பாரை ஊற்றினாள்.
‘யம்மா’ இங்க சட்னி
‘இங்க சாம்பார்’ வாடிக்கையாளர்கள் கூப்பிடக் கூப்பிட லட்சுமியும் சேர்ந்து ஓடினாள்.
மேனேஜர் முருகேசன் மட்டும் நின்ற இடத்தில் நின்று கொண்டே வேலை வாங்கிக் கொண்டிருந்தான்.
‘ஹலோ’
கொஞ்சம் தண்ணி
‘ஏம்மா லட்சுமி’ அங்க தண்ணி கேக்குறாங்க குடு.
‘இந்தா சார்’ ஓடினாள் லட்சுமி.
ஜோதியும் சேர்ந்து பறந்தாள். அவளோடு சேர்ந்த அத்தனை சிப்பந்திகளும் துரிதமாக வேலை செய்து கொண்டிருந்தார்கள்.
சாப்பிட்டு முடிக்கவும் அத்தனை பேரின் கைகளிலும் பில்லைக் கொடுத்தனர் சிப்பந்திகள்.
பில்லை வாங்கியவர்கள் பில்லுக்கான பணத்தைக் கொடுத்துவிட்டு கூடவே டிப்ஸ்ம் கொடுத்தார்கள்.
லட்சுமியும் ஜோதியும் வாங்கினார்கள். இதைக் கவனித்த முருகேசன் பொறாமை கொண்டான்.
ஏய் ஜோதி அங்க என்ன?
சாப்பிடுறவங்களுக்கு பில் குடுக்கத் தெரியாதா? நீ தான் வாங்கிக் குடுக்கணுமா? போ… அந்தப் பக்கம் விரட்டினான்.
‘ஏய்… லட்சுமி நீ ஏன் இங்கன நின்னுட்டு இருக்கிற? அங்க போயி சாம்பார ஊத்து … அதான் சம்பளம் வாங்குறீங்கள்ல. அதுக்கு மேல என்னாவம் திட்டினார் முருகேசன்.
‘யம்மா இங்க வாம்மா’ என்று சாப்பிட்ட ஒருவர் லட்சுமியின் கையில் இருபது ரூபாயைத் திணித்தார்.
இதைப் பார்த்த முருகேசனுக்கு இன்னும் என்னவோ போலானது.
லட்சுமியை நிற்க விடாமல் துரத்தினார்.
வேலைக்கு வந்தீங்களா… டிப்ஸ் வாங்க வந்தீங்களா? போங்க ஒழுங்க வேலய செய்யுங்க மிண்டும் மீண்டும் விரட்டினார்.
‘பாவம்ங்க … அவங்கள ஏன் திட்டுறீங்க…’ வரிந்து கட்டிக்கொண்டு ஒருவர் சண்டைக்கு வந்தார்.
அது இல்ல சார் இவங்களுக்கு சம்பளம் குடுக்கிறோம். அத விட்டுட்டு என இழுத்தார்.
‘டிப்ஸ்ங்கிறது சாப்பிடுறவங்க சும்மா குடுக்கிறது. அதப் போயி பெருசு படுத்தலாமா? விட்டுருங்க பாவம்’ என்றார் ஒருவர்.
‘இல்லங்க… இவங்க எல்லாரும் டிப்ஸ் வாங்குறதிலயே குறியா இருக்காங்க. யாரையும் சரியாக கவனிக்கிறதில்ல. புகார் மேல் புகார் சொல்லிக் கொண்டே இருந்தார் முருகேசன்.
விடுங்க பாவம் இந்த காச வாங்கிட்டு போயி கோட்டையா கட்டப் போறாங்க. விடுங்க.
ஒருவர் சமாதானம் சொன்னார். அதையும் முருகேசன் ஏற்கவில்லை.
‘ஏய் லட்சுமி இங்க சாம்பார் ஊத்து.
ஏய் ஜோதி இங்க சட்னி குடு’ விரட்டினார்.
இந்தா போறேன் சார் ஓடினார்கள்.
‘இந்த மேனேஜருக்கு டிப்ஸ் வாங்குறது பொறாமைங்க. அது தான் திட்டிட்டே இருக்காரு.
அடப்பாவமே இந்த காச வாங்குறதுக்கா திட்டுறாரு.
‘ஆமா’
‘‘அவர வந்து இங்க வேல செய்யச் சொல்லுங்க… அப்பத்தான் அதோட வலி தெரியும். நின்ன எடத்திலயே நின்னுட்டு வேல வாங்குற ஆளுக்கு என்னங்க தெரியும் எங்களோட வலி ’’பொருமினாள் லட்சுமி.
லட்சுமி அங்க என் னபேச்சு … நிக்காத ஓடு.
‘ஏய் ஜோதி அங்க என்ன பார்வ … இங்க கஸ்டமருக்கு என்னன்னு கேளு’
‘இந்தா வாரேன்’
‘‘இந்த மேனேசருக்கு ரொம்ப பொறாம புடிச்ச ஆளுங்க’
இந்த சில்லற காச வாங்குறதுக்கு இவ்வளவு பொறாமைப் படுறாரு. திட்டிக் கொண்டே போயினர் லட்சுமியும் ஜோதியும்.
மறுநாள் ஓட்டலுக்கு வந்த லட்சுமிக்கும் ஜோதிக்கும் தூக்கி வாரிப்போட்டது.
என்ன சார் இது?
‘என்னமோ தெரியலம்மா. அவரா இந்த வேலய கேட்டு வாங்கிட்டாரு.
அப்பிடியா?
‘ஆமாம்மா’’ என்று ஓட்டலில் வேலை செய்யும் இன்னொருவர் சொன்னபோது அதிர்ச்சிக்கு ஆளாயினர் லட்சுமியும் ஜோதியும்.
இங்க சாம்பார் குடுங்க என்று ஒருவர் கேட்டதும் முருகேசன் சாம்பார் வாளியோடு ஓடினார்.
‘சார் நீங்க போயி’
‘ஏம்மா… மேனேசர் வேல பாக்குறதில வார சம்பளம் கட்டுபடியாகல அதான்’ என்ற போது  முருகேசனின் கையில் ஒரு வாடிக்கையாளர் பத்து ரூபாயைத் திணித்தார்.
லட்சுமியும்  ஜோதியும் இதை பரிதாபமாகப் பார்த்தனர்.
‘இது மேனேசருக்கு வந்த பொறாமைடி … எவ்வளவு  நாளைக்குன்னு பாப்பமே’ என்றபோது முருகேசன் சட்னி வாளியோடு ஓடினார்.