பிறந்த நாள் விடுமுறை

“சார் இன்னைக்கு எனக்கு பிறந்த நாள் லீவு வேணும்,
என்னது பெறந்த நாள் லீவு வேணுமா?
ஆமா சார் வருசத்தில ஒரு நாள் தான பெறந்த, அதுக்கு லீவு வேணாமா? கொஞ்சம் முறைப்பாகவே கேட்டாள், அனிதா நிறுவன ஊழியர்.
வருசத்தில் ஒரு நாள் தான் பெறந்த நாள் வரும் அதுக்கெல்லாம் லீவு வேணுமா என்ன?
என்ன சார் இப்படி சொல்றீங்க?
நாங்கென்ன பெரிய ஓட்டல் பங்ஷனா பண்ணப்போறோம் ஏதோ ரெண்டு மூனு பிரண்டுகள கூட்டி வந்து நல்லா சாப்பிடுவோம்,பெறகு என்ன பண்ணப்போறோம், ஒரு நாள் லீவு வேணும் சார்.
முடியாது, ஒவ்வொரு ஆளும் ஒவ்வொரு நாள் பெறந்திருப்பீங்க அப்ப வருசத்தில எல்லா மாசமும் ஒங்களுக்கு பெறந்த நாள் லீவு குடுக்கணும் , அதுனால என்ன லீவுன்னாலும் கேளுங்க, பெறந்த நாள் லீவுன்னு மட்டும் என்கிட்ட கேக்காதீங்க, என்று கொஞ்சம் கடுமையாகவே பேசினார் சேதுராமன், நிர்வாக மேலாளர்.
என்ன சார் நாங்க பொய் சொல்லிட்ட போயிருக்க மாட்டோம், பிறந்த நாள் லீவு வேணும்னத தப்பா சார், என்னங்க பிறந்த நாளு ஏதோ மனுசன் பெறந்தான், வளர்ந்தான் வாழ்ந்திட்டு போய்ச் சேர வேண்டியது தான அதவிட்டுட்டு பெறந்த நாளு அது இதுன்னுட்டு எனக்கு பெறந்த நாள் கொண்டாட்டம்னு இப்படி யெல்லாம் வேஸ்ட் பண்றதெல்லாம் எனக்கு பிடிக்காது எனக்கெல்லாம் பிறந்தநாளுங்கிறது வெறும் சர்டிபிகேட்ல இருக்கிற அடையாளம் தான் மத்தபடி ஏதுமில்ல. நாம எப்பப் பெறந்தோம்னு நம்ம அப்பா அம்மா எழுதி வச்சிருக்காங்க அது நமக்குத் தெரியுது எப்பப் பெறந்தோம்னு தெரியாத எத்தனையோ அனாதைப்பிள்ளைகளுக்கு நீங்க என்ன ஆறுதல் சொல்லுவீங்க பிறப்பு ஒரு மாயை இறப்பு ஒர் உண்மை, என்ன சார் எல்லாரம் பிறப்பு தான் உண்மை இறப்பு மாயைன்னு சொல்வாங்க நீங்க அத அப்படியே மாத்திச் சொல்றீங்களே, ஊழியர் சிவா கேட்டார்.
அப்படிக்கேளுங்க பிறப்புங்கிறது நாம யாருக்கும் தெரியாது, அது ஒரு மாயை தான் இந்த தாய் தகப்பன் வயித்தில இன்ன சாதியில இப்படி வீட்டு நாம பெறப்போம்னு நெனச்சுப் பாத்தீங்களா? ஆனா நாம ஒவ்வொருத்தரும் ஒரு சாதியில பெறந்திருக்கோம், வளந்திருக்கோம் யாருக்காவது தெரியுமா? இது தான் பிறப்புங்கிறது ஆனா நம்மோட இறப்பு நம்ம கையில தான் இருக்கு அத எப்படி வரைக்கப்போறம்ங்கிற வாழ்க்கையும் நம்ம கையல தான் இருக்கு அதுனால தான் நான் எப்பவும் பிறந்த நாள் கொண்டாடுறதில்ல இந்த பூமிக்கு நாம வந்தது. எப்படின்னு தெரியாதோ அப்படிப் பட்டது தான் இந்த பிறந்த நாள் இதுவ எனக்கு உடன்பாடில்ல என்றார் சேதுராமன்
சார் ஒங்களுக்கு உடன் பாடில்ல அப்படிங்கிறதுக்காக எங்களோட சந்தோசத்த மாத்த முடியுமா?
ப்ளீஸ் சார் லீவு வேணும் அனிதா அதிலிருந்து விலகுவதாகத் தெரியவில்லை.
அனிதா
எஸ் சார்
எனக்கு எப்ப பெறந்த நாளுன்னு தெரியுமா?
தெரியும் சார்,
எப்படி?
சார் ரிஜிஸ்டர்ல பாத்தேன் சார்
ம் நான் என்னைக்காவது எந்த வருசமாவது லீவ் போட்டுருக்கேனா?
இல்ல சார் நீங்க பெறந்த நாள் கூட ஆபீஸ்க்கு தான் வருவீங்க
இல்லையே நானும் பெறந்த நாள் கொண்டாடுவேன் என்று சேதுராமன் சொன்னபோத எல்லோரும் ஆச்சர்யத்தில் உறைந்தார்கள். என்ன சார்புதுசா சொல்றீங்க? நீங்க பிறந்த நாள் கொண்டாடுவீங்கள?
ஆமா
எங்களால நம்பவே முடியல சார் நீங்க பெறக்கும் போது பூமிக்கு எப்படி புதுசா வந்தீங்களோ அப்படி ஒரு புது உசுர பூமிக்கு கொண்டு வரணும்னு நினைங்ப என்ன சார் புதுசா சொல்றீங்க?
ஆமா அனிதா என்னோட ஒவ்வொரு பிறந்த நாள் அப்பவும்நான் ஒவ்வொரு மரக்கன்னுகள நடுவேன் அப்படி நான் நட்டுவச்சதால இன்னைக்கு இன்னைக்கு 67 மரக்கன்றுகள இந்த பூமியில இருக்கு ஏன் சிலது பெரிய பெரிய மரங்களா ஆகியிருக்கும்.
இந்த அறுபத்து ஏழு வருச வாழ்க்கையில அறுபத்து ஏழு மரங்கள நட்டுருக்கேன் இப்படி ஒவ்வொரு மனுசனோட பெறந்த நாள் அன்னைக்கு ஒரு மரக்கன்று நட்டு வையுங்க இந்த ஒலகமே பசுமையா இருக்கும் அத விட்டுட்டு பீர்குடிக்கிறோம் பிராந்தி குடிக்கிறோம் பார்டி வைக்கிறறோம்னு காசப் போட்டு கரியாக்கிட்டு பிறந்த நாள் கொண்டாடுறோம்னு சொல்றீங்க இதுல எனக்கு உடன்பாடில்ல அதுனால தான் நான் பிறந்தநாள் கொண்டடுறதில்ல அப்படியாராவது பிறந்த நாள் கொணடாட லீவுன்னு கேட்டாங்கன்னா எனக்கு கடுமையா கோபம் வரும் என்றார் சேதுராமன்
சார் எனக்கு லீவு வேணும் அப்படியே எங்க பிரண்ட்களுக்கும்.
ஏம்மா என்ன சொல்லியும் கேக்க மாட்டீங்களா?
இவ்வளவு சொல்றேன் மறுபடியும் இதையே கேட்டுட்டு இருக்கீங்க சார் லீவு வேணும்னு தான் கேட்டேன் பார்ட்டி வைக்க இல்ல சார் மரக்கன்று நட என அனிதா சொன்ன போது சேதுராமனுக்குள் சினேகம் ஊறியது.
சரி போய்ட்டு சீக்கிரமா வாங்க
சார் நீங்க இல்லாமலா முதன் முதல எங்களோட அறிவுக் கண்ண தெறந்து வையுங்க என்று குமரன் கேட்ட போது சேதுராமன் மறுக்காமல் முன்மொழிந்தார்.
சார் இனி எங்களோட ஒவ்வொரு பிறந்த நாளைக்கும் ஒரு மரக்கன்று நடப்போறோம் என உறுதி எடுத்தனர் ஊழியர்கள். அவர்களின் பிறந்த நாாள் விடுமுறை அனுமதிக்கப்பட்டது.

ராஜா செல்லமுத்து