“முள்ளில் முளைத்த வானவில்”

அணைப்பட்டி – வைகைக்கரையோர அழகிய கிராமம்.
கரையோரமிருந்த மரங்களின் வேர்கள், நீரைத் தேடி வெகுதூரம் சென்றிருந்தன. வேருக்கு எட்டிய தூரம் வரை எந்த நீரும் அகப்படாததால் தன் தாகவேகத்தை பூமியில் வெடிப்புகளாய் வெளிப்படுத்தி, தன் கிளை தழைகளை ஆட்டி ஆட்டி தன் இலை மொழிகளில் என்னென்னமோ சொல்லிக் கொண்டிருந்தன.
வந்தமரும் பறவைகளும் அதற்கு மறுமொழி சொல்லி சமாதானப்படுத்திக் கொண்டிருந்தன.
வைகை மணல், தண்ணீர்த் தரையெங்கும் விரிந்திருந்தது. தண்ணீருடன் பேசிய கூழாங்கற்கள் வெயிலில் விறைத்துப் போய்க் கிடந்தன. அனுமார் கோயில் துளசியும் கன்னிமார்கோயில் மஞ்சளும் அந்தப் பகுதியையே நிறைத்துக் கொண்டிருந்தது.
அண்ணாத்துரை வெற்றுவானத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான். நிலையில்லாத மேகங்கள், ஓரிடத்தில் நிற்காமல் அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்தன. நிலைகுத்தி நின்றன அவனின் கண்கள், இமைகள் மட்டும் அனிச்சையாகவே அசைந்து கொண்டிருந்தன.
“என்ன காதுல விழுதா? இங்க ஒருத்தி கத்திட்டு இருக்கேன். வானத்தில அப்பிடியென்ன தெரியுது. அங்கனயே குறுகுறுன்னு பாத்திட்டு இருக்க. சாணிக் கூடையிலிருந்து தண்ணீர் சலசலவென வழிய வழிய நின்று பேசினாள்.
அண்ணாத்துரை, அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்ததை விட்டு விட்டு அமுதவள்ளியைப் பார்த்தான். அவள் பார்வையில் எளக்காரம் எக்கசக்கமாய்த் தெரிந்தது.
ஒன்னைய என்னிக்கு கட்டிட்டு வந்தேனோ? அன்னைக்கே என்னோட சொதந்திரம் போச்சு. கண்ணியில சிக்குன எலிகெனக்கா மாட்டிட்டு முழிக்கிறேன். தல நாள்ல எங்க வீட்டுல கால்மிதிச்ச எல்லாம் போச்சு. பெத்த தாய் தகப்பன கஞ்சி ஊத்தி காப்பாத்துவன்னு நெனச்சு தான் சொந்தத்தில கல்யாணம் பண்ணிட்டு வந்தோம். ஆனா நீ என்னடான்னா வந்த மூணா நாள் எல்லாத்தையும் அத்துவிட்டுட்டு கூடப் பெறந்த அண்ணன் தம்பிகளுக்குள்ள சண்ட சத்தத்த மூட்டிவிட்டு எல்லாத்தையும் பிரிச்சு விட்டுட்ட, பாதகத்தி மகளே, இப்ப எங்க அப்பன் சாகப் பொழைக்க கெடக்கான். அவரப் போயி பாக்க வேணாம்னு சொல்ற. ஒன்னோட சொந்த பந்தம்னா மட்டும் வரிஞ்சுகட்டிட்டு ஓடுற. என்னோட தாய் புள்ளைகளப் பாத்தா ஒனக்கு நஞ்சு மாதிரி தெரியுதா? என கொஞ்சம் தைரியமாகப் பேசினான், அண்ணாத்துரை
யார்யா பிரிச்சு விட்டா? விட்டா எதுவேணும்னாலும் பேசுவ போல. நானா ஒங்குடும்பத்த பிரிச்சு விட்டேன். ஒன்னோட குடும்பமென்ன, நல்ல குடும்பமா என்ன? கோலு மூட்டிக் குடும்பம். ஆளு இருக்கும் போது ஒரு பேச்சு, ஆளில்லாத போது ஒரு பேச்சு. வந்த பொம்பளைங்களும் எவளும் வகையில்லாதவளுக. நீ, நானு, நம்ம குடும்பம், நம்ம புள்ளைக இது போதும். இல்ல அத்துவிட்டுட்டு போய்ட்டே இரு’’ என சாணியை இடுப்பில் வைத்துக் கொண்டே பேசினாள் அமுதவள்ளி.
ஏய், போடி, சாணித் தண்ணியெல்லாம் வீடு நெறயுது. வியக்யானம் பேசிட்டு இருக்கா. என்னோட விதி ஒன்னையெல்லாம் கட்டிட்டு மாரடிக்கணும்னு புள்ளைக ஆகிப் போச்சுன்னு பல்லக் கடிச்சிட்டு இருக்கேன். இல்ல என்னைக்கோ நீ ஒங்க அப்பன் வீட்டுக்குப் போயிருப்ப. அண்ணாத்துரை தைரியம் கலந்து பேசினான்.
இனிமே எதுவும் பேசுன. அவ்வளவு தான் மானங்கெட்டு மகிழி பூத்துப் போகும் ; பேசாதய்யா என்று சாணியைக் கொட்டிக் கொண்டே பேசினாள் அமுதவள்ளி.
அணைப்பட்டி கிராமம், அன்று கொஞ்சம் அமைதி இழந்திருந்தது. வெயில் நேர வெக்கை கொஞ்சம் விலகி மசங்கத் தயாரானது வானம்.
ஏம்மா, புள்ளைக ஏதும் வந்துச்சா, உதட்டில் எச்சில் உலர்ந்த பேச்சில் கேட்டார் சின்னையா, அண்ணாத்துரையின் அப்பா.
“இல்ல,” உதடு ஒட்டாமல் பதில் சொன்னாள் பெருமாயி. சின்னையாவின் மனைவி.
‘ம்’, கடைசி காலத்தில கூட பெத்தவங்கள வந்து பாக்கணும்னு எவனுக்கும் அக்கற இல்லையே உசுரோட இருக்கும் போது பாக்காதவனுக செத்தபெறகு என்ன செஞ்சு என்ன பிரயோசனம். பெத்தது பெத்த பூராம் கடுவனுகளா பெத்து வச்சிருக்கிற, மருந்துக்கு கூட ஒரு பொட்டயப் பெறலயே பெருமாயி. செத்தா ஒப்பாரி வைக்க கூட ஆளில்லையே, படுக்கையிலிருந்தபடியே புலம்பி அழுதார் சின்னையா.
அடுப்படியில் புகைந்து கொண்டிருந்த விறகை உள்ளே தள்ளிவிட்டு
ப்பூ…. ப்பூ… வென ஊதினாள் பெருமாயி.
“பெருமாயி”
கரகரத்த குரலில் கூப்பிட்டார் சின்னையா.
“ம்” அழுத்தமாகக் கேட்டாள் பெருமாயி.
“கொஞ்சம் தண்ணி”
“இந்தா” ஓடிப்போய் தண்ணீர்கொண்டு வந்தாள்.
தண்ணீர் தாகத்தை விட சின்னையாவுக்கு அன்பின் தாகம் அதிகமாயிருந்தது. அது தொண்டைக்குழிக்குள் கதக்கதக் என அடித்தது. கைகளில் தண்ணீரை வாங்கியதும் சின்னையாவின் கண்களில் கண்ணீர் பொங்கியது.
“ ஏன் சின்னப்புள்ள கணக்கா அழுகுறீங்க?
இல்லையே நான் எங்க அழுதேன். கண்ல பொக பட்டுருச்சு அதான்” என தழுதழுத்தார் சின்னையா.
என்னோட ஆம்பளயப்பத்தி எனக்குத் தெரியாதா? விடுய்யா வாழ்ந்தோம்; பெத்தோம்; பெருசாகுற வரைக்கும் நம்ம றெக்கைக்குள்ள இருந்த பயக கல்யாணம் காச்சி முடிக்கவும் பெத்தவங்கள வயித்தில எத்திவிட்டு போய்ட்டாங்க. நாம கெட்டுப்போனாலும் நாம பெத்த உசுருக நல்லா இருக்கட்டுமே’ அரையும் குறையுமான அழுகைப் பேச்சில் புலம்பினாள் பெருமாயி.
இரண்டு வயதான வாழைகளும் அழுது புலம்பின. அவர்களுக்கு ஆறுதல் சொல்லவோ? ஆற்றுப்படுத்தவோ? நாதியில்லாமல் துடித்தன.
‘பெருமாயி’
‘ம்’
‘நம்ம புள்ளைக, கல்யாணம் பண்ற வரைக்கும் நல்லாத்தான இருந்தானுக. பொண்டாட்டிக வரவும் பூராப் பயலுகளும் நம்மள அத்துவிட்டுப் போயிட்டானுகளே’
‘வந்த மருமக்கமாருக அப்பிடி ஒருத்தருக்கு ஒருத்தர் ஏடாசு ( போட்டி – பொறாமை) போட்டுட்டு நம்ம பொழப்புல கை வச்சிட்டாங்களே’
‘மத்தவங்க கூட பரவாயில்ல பெருமாயி, ஒன்னோட அண்ணன் மகள்னு தான் அமுதவள்ளிய கட்டிட்டு வந்தோம். அந்தப் பொண்ணும் இப்பிடி பண்ணுதே’
‘அவளும் பொம்பள தான, அப்பிடித்தான் இருப்பாங்க. அவங்களும் புள்ளைகள பெத்து வச்சிருக்காங்கள்ல. அவங்களுக்கும் வயசாகுமில்ல’ அப்பப் பாப்போம்.
இவங்களோட பவுசி என்னன்னு பெருமாயி சொல்லச் சொல்ல அழுக்குப் படுக்கையில் கிடந்த சின்னையா கொஞ்சம் புரண்டு படுத்தார்.
கிழவனுக்கு ஆதரவாய் தலைமாட்டில் உட்கார்ந்தாள் பெருமாயி.
‘அன்று அமாவாசை. வானம் முழுவதும் இருட்டைப் போர்த்தியிருந்தது. விண்மீன்கள் கூட நிலாவுக்கு ஆதரவாய் தன் வெளிச்ச விளம்பரத்தை சுருக்கிக் கொண்டு எங்கோ போய் ஒளிந்து கொண்டன.
‘கண்மணி… கண்மணி’ கணவன் அன்பு கூப்பிடவும்
‘என்னா …. ஒங்க அப்பன போயி பாக்கணுமா? ஏதாவது ஒண்ணு கெடக்க ஒண்ணு ஆகிப்போனா, இந்த வெட்டையில யாரு செலவழிக்கிறது. நீயெல்லாம் அங்க போக வேணாம். மூத்த மகனும் மூத்த மருமகளும் இருக்காங்கள்ல. அவங்க போயி பாக்கட்டும். சம்பாரிச்சதெல்லாம் நமக்கா குடுத்தாங்க. அவங்க பேரன் புள்ளைக போய் பாக்கட்டுமே. நமக்கென்ன வேர்த்தா வடியுது. ஒங்க அப்பன பாக்கத் தான் போவேன்னா,, அப்பிடியே போயிரு இங்கன. தல வச்சு படுத்திராத’ அன்புவைக் கடுமையாகச் சாடினாள் அன்புவின் மனைவி கண்மணி.
‘ஏய்…. பாவம்த்தா, கடைசி காலம் பெத்த பாவம் சும்மா விடாது’
‘அவங்க மேல பாவம் பாத்தா ஆறு மாசத்து பாவம் நமக்குத்தேன் புடிக்கும். பேசமா போயிரு’ திட்டிவிட்டு வெளியே சென்றாள் கண்மணி.
‘மியாவ்…. மியாவ்… என பாவமாய்க் கத்திக்கொண்டே அன்புவைப் பார்த்துக் கொண்டிருந்தது பூனை.
மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் திணறிக் கொண்டிருந்தான் அன்பு.
‘ம்… எல்லாப் பொம்பளையும் ஒரே மாதிரி தான் இருக்காங்க. அண்ணனும் வந்து பாக்கல, அண்ணியும் வரல… தம்பிக ஏதும் வந்து பாப்பானுகளா? தனக்குள் பேசிக் கொண்டே உட்கார்ந்திருந்தான் அன்பு.
‘பெருமாயி… பெருமாயி’
‘ம்’
‘இங்க வா’ சின்னையா பயந்த குரலில் கூப்பிட்டார்.
‘இந்த மனுசனுக்கு சாவு பயம் வந்திருச்சு போல, கையப் புடிச்சிட்டே இருக்க சொல்லுது’ போல .. ‘என்ன? ஈரம் கலந்த குரலில் கேட்டாள் பெருமாயி.
புள்ளைக எவனாவது வந்தானுகளா?
‘இல்ல’
‘ச்சே’ உச்சுக் கொட்டினாள் பெருமாயி.
‘மாசம் ஒருத்தன் தான பாக்கணும்னு பஞ்சாயத்தில பேச்சு… இந்த மாசம் கடைசிப் பையன் நல்லதம்பி மொற, அவன் வந்தா தான் உண்டு. இல்ல எவனும் இங்க வந்து எட்டி பாக்கமாட்டானுக’ சொன்னாள் பெருமாயி.
கிர் கிர் கிர் என்ற இருட்டுப் பூச்சிகளின் சத்தம் அந்த ஏரியாவை பயமுறுத்திக் கொண்டிருந்தது.
‘என்ன தேன்மொலி எங்க அப்பன், ஆத்தாளுக்கு சோறு கொண்டு போகலியா?’
‘போகணும்’
‘போடி… எங்க அப்பன் வேற சாகப் பொழைக்க கெடக்காமே’
‘ஆமா… இந்தா பாருங்க… நாள பின்ன ஏதாவது நல்லது கெட்டது ஆகிப் போச்சுன்னா நம்மால எல்லாம் அவ்வளவு செலவழிக்க முடியாது. ஏதோ ஊரப் போல நாலு பேரும் ஆளுக்கு ரெண்டு செலவழிச்சு விடுங்க. எளைய மகன் மொறையில தான் கெழவன் செத்துப் போனாருன்னு யாராவது சொன்னா கிழிச்சு கேப்பைய நட்டுப்புடுவேன் நட்டு’ என மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கப் பேசினாள் தேன்மொழி.
அதுவரையில் பெருமாயி, பெருமாயி என பினாத்திக் கொண்டிருந்த சின்னையா குரல் சற்றே தணிந்திருந்தது.
வெளியில் போய் வீடு திரும்பிய பெருமாயிக்கு அது பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்தியது. சின்னையாவின் அருகே சென்றாள்.
‘ஏங்க… ஏங்க…. ஏங்க… ஏய்… கழுத ஒவ்வொரு தடவை கூப்பிடும் போதும் பெருமாயின் குரலில் பதற்றம் பற்றிக் கொண்டிருந்தது.
‘என்னங்க… ’ பெருமாயின் பெருங்குரல் அணைப்பட்டி கிராமத்தையையே உடைத்துத் தள்ளியது.
சின்னையா இறந்த செய்தி, அணைப்பட்டி கிராமம் முழுவதும் பற்றிக் கொண்டது.
‘ஏய் – அண்ணாத்துரை ஒங்க அப்பன் செத்துப் போனாராமே’
‘அண்ணாத்துரை, அதற்கு பதில் சொல்லாமலே இருந்தான்.
‘ஏப்பா ஒன்னையத்தான் கேக்குறேன்’
‘ஒங்க அப்பன் செத்து போனாராமே’ அண்ணாத்துரை ஆமா என்பது போல் தலையாட்டினான்.
‘ஒன் தம்பி … அன்பு வாரானா?
‘தெரியல’ என்பது போல் அதற்கும் தலையை மட்டுமே ஆட்டினான்.
‘ஒன் கடைசி தம்பி, நல்லதம்பிக்கு தெரியுமா?’
‘ஆமா’ என்பது போல் அதற்கும் தலையை மட்டுமே ஆட்டினான் அண்ணாத்துரை’.
‘என்னப்பா, எல்லாத்துக்கும் தலைய மட்டுமே ஆட்டிட்டு இருக்க? கோபமாயக் கேட்டார் ஊர்ப் பெரியவர்.
எனக்கு என்னங்க தெரியும். இந்த சீமச் சிறுக்கிகள கல்யாணம் பண்ற வரைக்கும் ஒண்ணா, மண்ணா கெடந்த அண்ணன் தம்பிக கல்யாணம் பண்ணவும் தொப்புள் கொடி ஒறவ துண்டிச்சு விட்டாளுக. வந்த இவளுக்கு தெரியுமா? ஒரே தாய் மார்ல நாங்க பால் குடிச்சு வளந்த பாசம்’ அவ அவ வந்ததும் சட்டியும் பொட்டியும் கட்டிட்டு தனிக்குடித்தனம் கௌம்பிட்டாளுக. எப்பிடி அண்ணன், தம்பிக ஒத்துமையா வாழ்ந்த குடும்பன்னு தெரியுமா? தொண்டைக்குள்ள போறதக் கூட துப்பிக் குடுத்து வாழ்ந்திருக்கோம்.
அப்பிடியாப்பட்ட பயலுகள, முந்தான மந்திரம் போட்டு பிரிச்சு விட்டாளுகளே’ கொஞ்சம் போதையில் புலம்பினான் அண்ணாத்துரை.
‘இப்ப என்ன தான் முடிவு?’
‘எழவு வீட்டுக்கே போகக் கூடாதுன்னு சொல்றா எம் பொண்டாட்டி…’
நல்ல கதைய்யா, பெத்த தகப்பன் செத்துக் கெடக்கான், பொண்டாட்டி சொன்னாளாம். பெரிய பொண்டாட்டி பெரியவர் எச்சில உமிழ்ந்தபடியே சென்றார்.
‘கண்மணி… எங்க அப்பன் செத்துட்டாராம்.’
‘அதுக்கென்ன இப்போ. ஒலகத்தில நடக்காததா? நல்லா தான் வாழ்ந்தாரு நல்லா அனுபவிச்சாரு; செத்துட்டாரு . கடைசி காலத்தில எல்லாருக்கும் இதே நெலம தான’ போய்ச் சேரட்டும். எந்தச் சலனமும் இல்லாமல் பதில் சொன்னாள் கண்மணி.
அவளின் வார்த்தைகளில் அன்பு உடைந்தே போனான்.
‘இப்ப நாம போறமா இல்லையா? பொணத்த தூக்குற வரைக்கும் அங்க போயி நிக்க வேணாம். செலவெல்லாம் நம்ம தலையில வந்து விழுந்திரும். இந்த மாச மொற நல்லதம்பியோடது தான. அவரு பாத்துக்கிருவாரு கடுமையாகப் பேசிவிட்டுச் சென்றாள் கண்மணி.
சின்னையா இறந்து போய் சில மணி நேரங்கள் முடிந்தும் அவரின் பிள்ளைகள் யாரும் வரவில்லை.
‘என்ன ஒலகம்யா இது. சாகுற வரைக்கும் நல்லா புடுங்கித் தின்னுபுட்டு பெத்த தகப்பன இப்ப அம்போன்னு போட்டுட்டு போயிட்டானுக. ஒத்தப் பயலுகள காணாமே’ வருத்தப்பட்டார் இழவு வீட்டிற்கு வந்த ஒருவர்.
‘யம்மா… பெருமாயி அம்மா… எழவுச் செலவுக்கு ஏதாவது வச்சிருக்கியா? இல்ல காசு வேணுமா?
‘இருக்குப்பா…. கால் ரூவா, அர ரூவான்னு கொஞ்சம் சேத்து வச்சிருக்கேன். அழுது கொண்டே பதில் சொன்னாள்.
ஒம்மகனுக பொண்டாட்டி சொல்றத கேட்டுட்டு எவனும் வர மாட்டானுக போல’என்றார் வேறொருவர்.
‘இழவு வீட்டிற்கு ஊர் உறவுகள் வருவதும் போவதுமாய் இருந்தார்கள்.
‘இங்க பாரு… நம்ம மொற சாப்பாடு குடுக்கிறது தான். அதவிட்டுட்டு சாவுச் செலவு முழுசும் செய்யணும்னு நெனச்ச அம்புட்டுத்தான். ஒன்னோட அண்ணன் தம்பிக வரட்டும் செய்யட்டும்.
எழவு வீட்டுக்கு அவங்க வந்திட்டாங்களான்னு பாத்திட்டு போகலாம். முந்திரிக்கொட்ட மாதிரி முந்திக்கிட்டு போயி முன்னால நிக்காத’ நல்லதம்பியை எச்சரித்தாள் தேன்மொழி. மூன்று மகன்களும் மனைவிகள் கிழித்த கோட்டைத் தாண்டவே இல்லை. கட்டுப்பாட்டு கட்டளைக்குள் கட்டுண்டு கிடந்தனர். ஊரே சின்னையாவின் மரணத்தில் கூடி நின்றது.
நீங்கெல்லாம் மனுசங்க தானடா பெத்த தகப்பன் செத்துப் போயி கெடக்கான். இப்ப போயி சாவு கணக்கு பாத்திட்டு இருக்கீங்க. இன்னொரு தடவ அவரு ஒங்களுக்கு அப்பனாகப் போறதுமில்ல. நீங்களும் புள்ளையா பொறக்கப் போறதுமில்ல. போங்கடா போயி என்ன ஏதுன்னு பாருங்க. இல்ல பெத்த பாவம் ஒங்கள சும்மா விடாது என ஊரில் உள்ள ஒருவர் எச்சரித்தார்.
அதுவரையில் பொண்டாட்டிகள் கிழித்த கோட்டை லட்சுமணக் கோடாய் லட்சியம் செய்து கட்டளைக்கு காத்த அண்ணன் தம்பிகள் அதை உடைத்தெறிந்துவிட்டு அப்பாவைப் பார்க்க ஓடி வந்தார்கள்.
‘அப்பா… அப்பா எங்கள விட்டுட்டு போயிட்டயேப்பா’’ மூவரின் அழுகைக் குரலிலும் ஒரே ஈரமிருந்தது.
‘எங்கள மன்னிச்சிருங்கப்பா. பொம்பளைங்க பேச்சக் கேட்டு இப்பிடியாகிட்டோம் என சின்னையாவின் கால்மாட்டில் விழுந்தனர். தன் உயிரைக் கொடுத்து உயிரை உருவாக்கிய அப்பனின் காலடியில் வாழைக் கன்றுகளாய் விழுந்து கிடந்தனர் மூவரும்.
பெருமாயி இப்போது தன் புருசன் செத்ததை நினைத்து அழுததைவிட மூன்று மகன்களும் ஒன்றாய்க் கிடந்து அழுததை நினைத்து ஆனந்தக் கண்ணீர் விட்டாள்.
உயிரோடு இருக்கும்போது இணையாத உறவுகள், தன் தகப்பனின் மரணத்தில் இணைந்தனர்.
அப்போது சுவரில் சாத்தி வைக்கப்பட்டிருந்த சின்னையாவின் முகம் மூன்று மகன்களையும் பார்த்து சிரிப்பது போலவே இருந்தது.

ராஜா செல்லமுத்துவின்
900 வது சிறுகதை