64–வது கூட்டுறவு வார விழா:

சென்னை, நவ.14–
முதலமைச்சரின் ஆணைக்கிணங்க, தமிழகம் முழுவதும் 64–வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா   இன்று (14–ந் தேதி) தொடங்கி 20–ந் தேதி வரை நடைபெறுகிறது. இவ்விழாக்களில் நலத்திட்ட உதவிகள், பல்வேறு போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்குதல், சிறந்த கூட்டுறவுச் சங்கங்களுக்கு பாராட்டுக் கேடயங்கள் வழங்குதல், கலை நிகழ்ச்சிகள் நடத்துதல் என பல்வேறு நிகழ்ச்சிகளுடன் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது.
முதல் நாள் நிகழ்ச்சியாக இன்று (14–ந் தேதி) சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள தமிழ்நாடு கூட்டுறவு மாநில வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி வளாகத்தில் கூட்டுறவு கொடியினை கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ ஏற்றி வைத்தார். பின்னர் அமைச்சர் தலைமையில் கூட்டுறவுத்துறை உயர் அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் கூட்டுறவாளர்கள் ஆகியோர் கூட்டுறவு வார விழா உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டனர்.
பின்னர் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்ததாவது:–
இன்று முதல் கொண்டாடப்படும் 64–வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா கீழ்க்கண்டவாறு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தலைப்புகளில் கொண்டாடப்படவுள்ளது.
இன்று (14–ந் தேதி) கூட்டுறவுகள் மூலம் நல்லாளுகையும் தொழில் முறையாக்கமும்
15–ந் தேதி உற்பத்தியாளர் முதல் நுகர்வோர் வரை கூட்டுறவுகள்
16–ந் தேதி கூட்டுறவு மேம்பாட்டிற்கு வழிகோலும் சட்டமியற்றல்
17–ந் தேதி பொதுத் துறையிலும் தனியார் துறையிலும் கூட்டுறவின் கூட்டாண்மை
18–ந் தேதி தொழில்நுட்ப விழிப்புணர்வு மற்றும் ரொக்கமில்லா பரிவர்த்தனை மூலம் நிதியுள்ளடக்கலில் கூட்டுறவுகளின் பங்கு
19–ந் தேதி நலிவடைந்தோர் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்குமான கூட்டுறவுகள்
20–ந் தேதி திறன் மேம்பாட்டில் முதன்மை பங்காளராகக் கூட்டுறவு   என்ற தலைப்புகளில் நடைபெறுகிறது.
மாவட்ட அளவில் அந்தந்த நாட்களுக்கு ஏற்ற தலைப்புகளில் ஒவ்வொரு நாளும் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. நிறைவு நாள் நிகழ்ச்சி மாநில அளவில் கோயம்புத்தூரில் 20–ந் தேதி அன்று காளப்பட்டி ரோட்டில் உள்ள சுகுணா கலையரங்கத்தில் நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள், சட்டமன்ற பேரவை துணைத்தலைவர், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கூட்டுறவு நிறுவனங்களின் தலைவர்கள், அரசு உயர் அலுவலர்கள், கூட்டுறவாளர்கள் ஆகியோர் கலந்துக்கொண்டு சிறப்பிக்க உள்ளனர் என்றார்.
இந்நிகழ்ச்சியில் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் அ.ஞானசேகரன், கூடுதல் பதிவாளர் (நுகர்வோர் பணிகள்) ஜி.கே.அருண்சுந்தர் தயாளன், மைலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் கே.நடராஜன், சேலம் ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினர் சின்னத்தம்பி, தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் பா.வளர்மதி, தமிழ்நாடு மாநிலத் தலைமைக் கூட்டுறவு வங்கியின் தலைவர் ஆர்.இளங்கோவன், தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றிய தலைவர் அ.அமுதா அருணாச்சலம்,
தமிழ்நாடு மாநில கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியின் தலைவர் பி.சாகுல் அமீது, சென்னை மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கிரிநாத், போக்குவரத்து பணியாளர்கள் கூட்டுறவுச் சங்க தலைவர் அஸ்லாம், கூடுதல் பதிவாளர்கள் க.ராஜேந்திரன், இரா.கார்த்திகேயன், ஆர்.பிருந்தா, டாக்டர் நா.வில்வசேகரன், பா.பாலமுருகன், ஆ.ராமலிங்கம், ம.அந்தோணிசாமி ஜான்பீட்டர், வீ.தேவகி, கே.ஜி.மாதவன், எஸ்.செந்தமிழ் செல்வி, டாக்டர் அ.த.பாஸ்கரன், துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.