மதுரை தமுக்கம் மைதானத்தில் பிரம்மா குமாரிகளின் ஆன்மீக திருவிழா :

மதுரை,நவ.14–
மதுரை தமுக்கம் மைதானத்தில் பிரம்மா குமாரிகளின் ஆன்மீக இயக்கத்தின் 80 ஆண்டு விழாவையொட்டி ஆன்மீக திருவிழா 16–ந் தேதி முதல் 19–ந் தேதி வரை  4 நாட்கள் நடக்கிறது.
இதுகுறித்து பிரம்மா குமாரிகளின் ஆன்மீக இயக்கத்தின் இயக்குனர் டாக்டர் பி.கே.பாண்டியமணி, மதுரை பிரம்மா குமாரிகள் ஆன்மீக நிர்வாகிகள் பி.கே. ஆசா, செந்தாமரை ஆகியோர் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-–
பிரஜா பிதா பிரம்மா குமாரிகள் ஆன்மீக இயக்கம் 1937–ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. அதன் 80–ம் ஆண்டு விழாவை ஆன்மீக திருவிழாவாக நாளை (15–ந் தேதி) முதல் 5 நாட்கள் நடத்த இருக்கிறோம். நாளை காலை மராத்தான் அமைதி ஓட்டப் பந்தயம் நடக்கிறது. நாளை மறுநாள் தமுக்கம் மைதானத்தில் அரங்குகளின் திறப்பு விழா நடக்கிறது. திருவிழாவில் நாட்டின் பிரசித்திபெற்ற 12 ஜோதிர்லிங்க தரிசனம் அமைக்கப்படுகிறது. தேவிகளின் தத்ரூப தரிசன அரங்கும் அமைக்கப்படுகிறது. நாளைய பாரதம் எப்படி இருக்கும் என்பதை விளக்கிய அரங்கமும் இடம் பெறுகிறது. பிரமிட் வடிவிலான தியான அறை, பண்பாடு சார்ந்த அறிவியல் மற்றும் ஆன்மிக அரங்கங்களும் அமைக்கப்படுகின்றன.
தினந்தோறும் மாலையில் கலை நிகழ்ச்சிகளும், பொம்மலாட்டமும், குழந்தைகளை மகிழ்விக்கும் புதிர் விளையாட்டுகளும் நிகழ்த்தப்படவுள்ளன. பிரபல ஆன்மீக உரையாளர்கள் பங்கேற்கும் தொடர் சொற்பொழிவுகள் நடைபெறவுள்ளன. மேலும் 16, 17, 18 ஆகிய 3 நாட்கள் மருத்துவ முகாமும் நடக்கிறது. விழாவின் நிறைவு நாளான ஞாயிற்றுக்கிழமை (நவ.19) மாலை 5 மணிக்கு 50 ஆண்டு தவவாழ்க்கையில் உள்ள பிரம்மாகுமாரி சந்தோஷ்தீதிஜி தெய்வீக தரிசன மற்றும் ஆசியுரை வழங்குகிறார். இந்நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.