நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட கலெக்டர்களுக்கு எடப்பாடி உத்தரவு

சென்னை, நவ. 14–
நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுங்கள் என்று திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
பருவமழை துவங்குதற்கு முன் பருவமழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பது மற்றும் மழைப் பொழிவிற்கு பின் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்கள் துயர் துடைக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து பணியாற்றுவதற்காக, திருவாரூர் மாவட்டத்திற்கு உணவுத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ், மூத்த இந்திய ஆட்சிப் பணி (ஐஏஎஸ்) அதிகாரி டாக்டர் க. மணிவாசன், நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு கைத்தறித் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன், மூத்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரி டி.எஸ்.ஜவஹர் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
முதலமைச்சரின் உத்தரவின்படி அமைச்சர்களும், இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகளும், இரவு பகல் பாராமல் நிவாரணப் பணிகளில் தங்களை முழுமையாக ஈடுபடுத்தி வருகின்றனர்.
11.11.2017 அன்று சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட நிவாரணப் பணிகள் மற்றும் எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அமைச்சர்கள் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகளுடன் விரிவான ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமைச் செயலகத்தில் நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட நிவாரணப் பணிகள் மற்றும் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து காணொலிக் காட்சி மூலம் மாவட்ட ஆட்சியர்களிடம் கலந்துரையாடினார்.
முதல்வர் உத்தரவு
இரு மாவட்டங்களிலும் மாவட்ட நிர்வாகத்தால் பருவமழை துவங்குவதற்கு முன்பு எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் பருவமழை பொழிவிற்கு பின்பு மக்கள் துயர் துடைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை பற்றி விரிவாக கேட்டறிந்தார். பின்னர் முதலமைச்சர், மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு கீழ்க்கண்டவாறு அறிவுரை வழங்கினார்.
2015ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தின் போது அம்மா மழைநீரால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு பகுதிக்கும் கண்காணிப்பு அதிகாரிகளை நியமித்தும் ஒருங்கிணைப்பாளர்களாக அமைச்சர்களை நியமித்தும் இரவு பகல் பாராது பணியாற்றியதன் விளைவாக வெள்ளத்தின் பாதிப்பு வெகுவாகக் குறைக்கப்பட்டது.
அம்மா வழியில் செயல்படும் இந்த அரசும், இயல்புக்கு அதிகமாக பெய்தமழையின் காரணமாக நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்ய அமைச்சர்கள் தலைமையில் கண்காணிப்பு அதிகாரிகளை நியமித்தது. அவர்கள் இரவு பகல் பாராது பணியாற்றி, தேங்கிய மழைநீரினை மிக விரைவாக வெளியேற்ற நடவடிக்கை எடுத்துள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்கள், அதிகாரிகள் ஆற்றிய பணிகளை வெகுவாகப் பாராட்டியுள்ளனர். தமிழ்நாடு அரசு செய்யும் பணிகளை மக்களிடம் கொண்டு செல்வதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படவேண்டும்.
பாதுகாக்கப்பட்ட குடிநீர்
வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையின்படி வரும் வாரங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால், அதனை எதிர் கொள்ள அனைத்து முன்னேற்பாடுகளையும் துரிதமாக செயல்படுத்திட அனைத்து துறை அதிகாரிகளும் தயார் நிலையில் இருக்க வேண்டும். குறிப்பாக மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீரை சீரான முறையில் விநியோகம் செய்ய வேண்டும்.
தற்போது பெய்து வரும் வடகிழக்குப் பருவ மழையினால், கடலோர மாவட்டங்களில், தாழ்வான பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் மழை நீர் தேங்கியுள்ளது. வேளாண்மைத் துறை மூலம், விவசாய நிலங்களில் போதிய வடிகால் வசதி ஏற்படுத்தி நீரினை வெளியேற்ற உரிய நடவடிக்கை எடுக்கவும், நீர் வெளியேறிய பின் உரமிடுதல் மற்றும் பயிர்ப் பாதுகாப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் வேண்டும்.
சம்பா நெல் பயிருக்கு பயிர் காப்பீடு செய்ய மாவட்ட ஆட்சியர்கள் உரிய நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும்.
தடுப்பூசி
கால்நடைகளுக்கு தொற்றுநோய்கள் ஏற்படாத வண்ணம் தடுப்பூசிகள் போட வேண்டும். மேலும், போதுமான மருந்துகள் இருப்பில் வைத்துக் கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்ட பகுதிகளில் போதுமான கால்நடை மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
நிவாரண முகாம்களில் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவு, மருத்துவம் உள்பட அனைத்து வசதிகளும் ஏற்படுத்தி தர வேண்டும்.
மருத்துவ முகாம்கள்
சுகாதாரத் துறை, நடமாடும் மருத்துவ முகாம்கள் மற்றும் நிரந்தர முகாம்களை அமைத்து, அந்தந்த பகுதிகளுக்கு நேரடியாகச் சென்று உரிய மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட வேண்டும்.
பொதுப்பணித் துறை அலுவலர்கள் ஆசிய வளர்ச்சி வங்கி நிதி உதவியுடன் செயல்படுத்தப்பட்டு வருகின்ற திட்டத்தின் கீழ் ஆறு மற்றும் ஏரிகளின் கரைகளை மேம்படுத்தும் பணிகளை துரிதப்படுத்துவதுடன் தற்போது பெய்துள்ள மழையினால் பலவீனமான கரைகளைக் கண்டறிந்து சேதம் ஏற்படா வண்ணம் இருக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குழாய் வடிவிலான அனைத்து சிறு பாலங்களும், சதுர அல்லது செவ்வக வடிவிலான பாலங்களாக மாற்ற உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் தற்காலிக ஏற்பாடாக தேவைக்கு ஏற்ப கூடுதலாக கற்காரைக் குழாய்கள் ஏற்பாடு செய்து நீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பழைய கட்டிடங்களில்
எச்சரிக்கை பலகை
பழுதடைந்த மற்றும் பயன்பாடற்ற அனைத்து அரசு மற்றும் பொது கட்டிடங்களை ஆய்வு செய்து, அக்கட்டிடங்களில் பொதுமக்கள் செல்லாவண்ணம் எச்சரிக்கை பலகைகள் வைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து நீர் நிலைகளில் இருக்கின்ற ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.
இந்த ஆய்வின் போது, அமைச்சர்கள் ஆர்.காமராஜ், ஓ.எஸ்.மணியன் மற்றும் கண்காணிப்பு அதிகாரிகள் நிரந்தரத் தீர்விற்கான பல்வேறு கருத்துக்களைத் தெரிவித்தனர். அந்தக் கருத்துக்களின் மீது விரைவாக நடவடிக்கை எடுத்து, வருங்காலத்தில் மழை நீர் தேங்குவது முற்றிலுமாகத் தடுக்கப்பட வேண்டும்.
மேலும், மழை நீர் அகற்றும் பணிகளில் இரவு பகல்பாராது பணியாற்றி, சிறப்பாகச் செயலாற்றிக் கொண்டிருக்கும் அனைத்து அமைச்சர்கள், கண்காணிப்பு அதிகாரிகள், அரசு அலுவலர்கள், காவல்துறை அலுவலர்கள் மற்றும் மாநகராட்சி கடைநிலை ஊழியர்கள் ஆகியோரின் தன்னலமற்ற பணியை பாராட்டினார்.
இந்த காணொலிகாட்சி கலந்துரையாடலில் அமைச்சர்கள் ஆர்.காமராஜ், ஓ.எஸ்.மணியன், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், நாகப்பட்டினம் மாவட்டக் கண்காணிப்பு அலுவலர் டி.எஸ். ஜவஹர், திருவாரூர் மாவட்டக் கண்காணிப்பு அலுவலர் டாக்டர் க.மணிவாசன், நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அரசு உயர் அலுவலர்கள் பங்கேற்றனர்.