திருவள்ளூரில் ஏரிகள், நீர்வரத்து கால்வாய்களில் கலெக்டர் சுந்தரவல்லி ஆய்வு

திருவள்ளூர், நவ.14–
திருவள்ளூர் மாவட்டம், பாடியநல்லூர், பாலவாயல், கும்மனூர் மற்றும் கதிர்வேடு பகுதிகளில் ஏரிகள் மற்றும் நீர்வழி பாதைகளை மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டத்தில் 60 குழுக்கள் அமைத்து ஏரிகள் மற்றும் குளங்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
திருவள்ளூர் மாவட்டத்தில் இதுவரை 1,264 பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை ஏரிகளில் 369 ஏரிகள் முழு கொள்ளவு எட்டியுள்ளது. காவல்துறை, பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை மூலம் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. கரையின் மதகுகள் மற்றும் கரைகள் யாரேனும் சேதப்படுத்தினால் அவர்கள் மீது கடுமையான குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்.
பாலவாயல் பகுதியில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் குழு அமைத்து நீர் வரத்து பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி 2.5 கி.மீ. துரத்திற்கு கால்வாய் அமைக்கப்பட்டு பாலவாயல் பகுதியில் உள்ள குமரன் நகர் மற்றும் சன்சிட்டி பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீர் வடிகால்வாய்களில் செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், மாவட்டத்தில் பல பகுதிகளில் நீர் நிலை ஆக்கிரமிப்புகள் ஏதேனும் இருப்பின் அவற்றினை கண்டறியப்பட்டு அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சோழவரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பாடியநல்லூர் மற்றும் கும்மனூர் ஏரிகளுக்கு நேரில் சென்று ஏரியின் கரைகள் மற்றும் மதகு பகுதிகளை ஆய்வு மேற்கொண்டார். பின்னர், புழல் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கதிர்வேடு பகுதியில் பொதுப்பணித்துறையினரால் சீரமைக்கப்பட்ட நீர்வரத்து கால்வாயில் தண்ணீர் செல்வதை மாவட்ட கலெக்டர் பார்வையிட்டார்.
இவ்வாய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் கே.முத்து, திட்ட இயக்குனர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை ச.சா.குமார், அம்பத்தூர் வருவாய் கோட்டாட்சியர் அரவிந்தன், மாதவரம் வட்டாட்சியர் ரமேஷ், பொன்னேரி வட்டாட்சியர் சுமதி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.