தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய இந்தியக் கடலோரக் காவல் படை

ராமேஸ்வரம்,நவ.14–
ராமேஸ்வரம் மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய இந்திய கடலோர காவல் படையினர் மீனவர்களை இந்தியில் பேச சொல்லி தாக்குதல் நடத்தியிருப்பது மீனவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று காலை ராமேஸ்வரத்திலிருந்து ஜெபமாலைபிச்சை என்பவருக்கு சொந்தமான படகில் அந்தோணிபிச்சை, சூசையா, நிஷாந்த், சாண்ட்ரோ, தேவராஜன், ஜான்சன் ஆகிய 6 மீனவர்கள் மீன்பிடிக்க சென்றுள்ளனர். இவர்கள் பாரம்பரியமாக மீன் பிடிக்கும் பகுதியில் மீன்பிடிக்க வலைகளை பாய்ச்சிருந்த போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் கடலில் பாய்ச்சியிருந்த வலைகளை அறுத்து சேதப்படுத்தியதுடன் மீனவர்களின் படகுகளையும் விரட்டியடித்தனர்.
நேற்று பகல் 3 மணி அளவில் இந்திய கடல் பகுதியில் சென்னையில் இருந்து வந்த கடலோர காவல் படைக்கு சொந்தமான ராணி அபாக்கா என்ற கப்பலில் இருந்த வீரர்கள் ஜெபமாலைபிச்சையின் படகினை நிறுத்துமாறு கூறியுள்ளனர். மீனவர்கள் கடலில் பாய்ச்சியிருந்த வலைகளை எடுப்பதற்காக படகை நிறுத்தாமல் சென்றதால் ஆத்திரம் அடைந்த கடலோர காவல் படையினர் மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.
இதில் மீனவர் அந்தோணிபிச்சையின் இடது முழங்கையில் குண்டு பாய்ந்து வெளியேறி சென்றது. மற்றொரு மீனவரான ஜான்சனின் கைகளிலும் குண்டு காயம் ஏற்பட்டது.
இந்நிலையில் கப்பலில் இருந்து சிறிய படகில் வந்த கடலோர காவல் படை வீரர்கள் மீனவர்களின் படகில் ஏறி அதிலிருந்த மீனவர்களை தலை கீழாக நிற்க வைத்து துணிகள் சுற்றிய இரும்பு கம்பிகளை கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர்.
மேலும் அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு மீனவர்கள் தமிழில் பதில் கூறியுள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் இந்தியில் பேச சொல்லியும், தாக்குதல் பற்றி செய்தியாளர்களிடம் ஏன் சொன்னீர்கள்? என கேட்டும் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக விசாரணை என்ற பெயரில் சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.
இதன் பின் விடுவிக்கப்பட்ட மீனவர்கள் இருட்டி விட்டதால் மீண்டும் பிரச்சினை ஏதும் வரக் கூடும் என கருதி கடலிலேயே இரவு முழுவதும் இருந்து விட்டு இன்று காலை கரைக்கு திரும்பினர். இதையடுத்து காயம் அடைந்த மீனவர்கள் இருவரும் ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக பிச்சை மற்றும்  ஜான்சன் ஆகியோர் அளித்த புகாரின் பேரில் இந்திய  கடலோர காவல்படையினர் மீது இந்திய தண்டனை சட்டத்தின் 279, 307 மற்றும்  கொடூர ஆயுதத்தால் சுடுதல் போன்ற பிரிவுகளின் கீழ் தமிழக கடலோர போலீசார்  வழக்கு பதிவு செய்தனர்.