சென்னையில் பரவலாக மழை நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

சென்னை,நவ.14–
காற்றழுத்த தாழ்வு பகுதி தென்மேற்கு திசையில் இருந்து வடக்கு நோக்கி நகர்ந்து செல்கிறது. இதன் காரணமாக சென்னையில் அடுத்த 24 மணிநேரத்துக்கு பரவலாக மழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கடந்தவாரம் தென் மேற்கு வங்க கடலில் நிலை கொண்ட காற்றழுத்த தாழ்வு பகுதி மறைந்து புதிதாக தென்கிழக்கு வங்க கடலில் இலங்கை அருகே காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இதன் காரணமாக சென்னை மற்றும் வட கடலோர மாவட்டங்களில் மழை பெய்தது.
இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுபெற்று தென் மேற்கு திசையில் நகர்ந்ததால் கடந்த 2 நாட்களாக சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இடைவிடாமல் பரவலாக மழை பெய்தது. இதற்கிடையே காற்றழுத்த தாழ்வு பகுதியான தென்மேற்கு திசையில் இருந்து வடக்கு நோக்கி மேலும் நகர்ந்து செல்கிறது. இதன் காரணமாக வட கடலோர தமிழ்நாடு, கடலோர ஆந்திரா, ஒடிசா மாநிலங்களில் அடுத்த 24 மணிநேரத்துக்கு பலத்த மழை பெய்யும் என்று இந்திய வானிலைமையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் அடுத்த 24 மணிநேரத்துக்கு பரவலாக மழை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் நேற்று பகலில் காற்றுடன் பெய்யத் தொடங்கிய மழை இடை இடையே பலமாக கொட்டியது. விடியவிடிய இடைவிடாமல் மழை நீடித்தது. காலையிலும் மழை தொடர்ந்து பெய்தது.
நேற்று பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்ட நிலையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படவில்லை. இதனால் காலையில் பள்ளிகள் அமைந்துள்ள பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மழை லேசாக தூரிக் கொண்டே இருந்ததால் பள்ளி, அலுவலகங்களுக்கு செல்வோர் அவதிப்பட்டனர். இந்தநிலையில் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களில்  மிதமான மழை பெய்யும். காற்றழுத்த தாழ்வுப்பழுதியின் நகர்வைப் பொறுத்து  சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு  வாய்ப்புள்ளது. காற்றழுத்த தாழ்வுப்பகுதி மத்திய வங்கக்கடல் பகுதிக்கு  நகர்ந்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தற்போது வரை 11% குறைவாக  பெய்துள்ளது. நாளை முதல் படிப்படியாக மழை குறையத் தொடங்கும். கடந்த 24 மணி  நேரத்தில் அதிகளவாக பொன்னேரிய்ல 7 செ.மீட்டர் மழை பெய்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.