உலக நீரிழிவு நோய் விழிப்புணர்வு பேரணி:

சென்னை, நவ. 14–
சென்னை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உலக நீரிழிவுநோய் தினத்தை முன்னிட்டு இன்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் மரக்கன்றுகளை நட்டு உலக நீரிழிவு நோய் விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
சென்னை மாநகரில் உள்ள மருத்துவமனைகளில் 25 ஆண்டுகளுக்கு மேலாக முதலாம் வகை சர்க்கரை நோய் (Type 1 Diabetes) இருந்தும் சரியான தொடர் சிகிச்சை மூலம் நலமுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் 15 நபர்களுக்கு குளுக்கோமீட்டர் அடங்கிய பரிசுப் பெட்டகத்தை அமைச்சர் விஜயபாஸ்கர் வழங்கி பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:–
உலக நீரிழிவு நோய் தினம் வருடம்தோறும் நவம்பர் 14ம் தேதி கொண்டாடப்படுகிறது. உலகளவில் பெருகி வரும் நீரிழிவு நோயின் தாக்கத்தை மனதில் கொண்டு உலக சுகாதார அமைப்பு மற்றும் சர்வதேச சர்க்கரை நோய் அமைப்பினால் நீரிழிவு நோய் தினம் 1991ம் ஆண்டு உருவாக்கப்பட்டு ஐக்கிய நாடுகள் சபையினால் 2007ம் ஆண்டு முதல் உலக நீரிழிவு நோய் தினம் அங்கீகரிக்கப்பட்டது.
உலக நீரிழிவு நோய் தினம் 2017க்கான கருப்பொருள் மகளிரும் நீரிழிவு நோயும் – ஆரோக்கியமான வருங்காலத்திற்கான நமது உரிமை”. ‘‘நீல நிற வட்டம்” என்பது நீரிழிவுநோயின் சின்னமாக இருக்கிறது. நீல நிறம் வானத்தின் நிறம் மற்றும் ஐக்கிய நாடுகள் அமைப்பின் கொடியின் நிறமாகவும் இருக்கிறது. வட்டம் வாழ்க்கை மற்றும் ஆரோக்கியத்தைக் குறிக்கிறது. நீல நிற வெளிச்சம் பலமிகுந்த ஊடகமான கண்கள் மூலம் நீரிழிவுநோய் விழிப்புணர்வை நோக்கி மக்களை ஈர்க்கிறது.
இந்தியாவில் 7 கோடி
சர்க்கரை நோயாளிகள்
உலகளவில் 41.5 கோடி நபர்கள் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது 2040ம் ஆண்டு 64.2 கோடியாக உயர்வதற்கான வாய்ப்பு உள்ளது. இந்தியாவில் சுமார் 6.9 கோடி சர்க்கரை நோயாளிகள் உள்ளனர். இது 2040ம் ஆண்டு 10.9 கோடியாக உயர்வதற்கான வாய்ப்பு உள்ளது. மேலும் IGT (Impaired Glucose Tolerance) என்றழைக்கப்படும் சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலையில் 7.5 கோடி மக்கள் உள்ளனர். இதில் 10.4% (அதாவது 70 லட்சம்)நோயாளிகள் நம் தமிழகத்தில் உள்ளனர்.
சென்னை மருத்துவ கல்லூரியில் பேராசிரியர் சாம்.ஜி.பி.மோசஸ் 1976ம் ஆண்டு சர்க்கரை நோய்க்கான தனி சிகிச்சைப்பிரிவு துவங்கப்பட்டது. அதன் முதல் துறைத்தலைவராக பேராசிரியர் வி. சேஷைய்யா பொறுப்பேற்றார். பின்னர் அது 2010ம் ஆண்டில் பேராசிரியர் என்.ராஜேந்திரனால் சர்க்கரை நோய் உயர்நிலை துறையாக (Institute of Diabetology) தரம் உயர்த்தப்பட்டது.
1 மாதத்திற்கு
இலவச மாத்திரைகள்
இந்தியாவிலேயே முதன்முறையாக நீரிழிவு நோய்த்துறையானது 1979ம் ஆண்டு 30 படுக்கை வசதிகளுடன் சென்னை அரசு பொது மருத்துவமனையில் தொடங்கப்பட்டது. இத்துறையில் நாள் ஒன்றுக்கு 800 வெளிநோயாளிகளும் 20 ஆண்கள் மற்றும் 10 பெண்கள் படுக்கைகள் உட்பட 30 படுக்கை வசதிகளில் உள்நோயாளிகளும் இத்துறையில் சிறப்பு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இத்துறையில் உணவிற்கு முன்னும் மற்றும் பின்னும் ரத்தத்தில் சர்க்கரையில் அளவு பரிசோதிக்கப்படுகிறது. மேலும் நீர் பரிசோதனை, இருதய மின் அலை வரைபடம் (ECG) சிறுநீரகப் பரிசோதனை, கால் நரம்பு மற்றும் ரத்த ஓட்ட பாதிப்புகளை கண்டறியும் Biothesiometer மற்றும் Doppler கருவி பரிசோதனை ஆகியவை செய்யப்படுகிறது. இந்நோயின் தீவிரம் மற்றும் பின்விளைவுகளை முன்னதாகவே கண்டறிந்து தகுந்த சிகிச்சை செய்யப்படுவதுடன் நோயாளிகளுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான விலை உயர்ந்த மாத்திரைகள் கட்டணமில்லாமல் வழங்கப்டுகிறது.
கட்டணமின்றி
இன்சூலின் ஊசி
இந்தியாவிலேயே தமிழக அரசு மட்டும்தான் முதலாம் வகை சர்க்கரை நோயாளிகளுக்கு அவர்கள் நலன் கருதி வீட்டிலேயே இன்சுலின் ஊசி போட்டுக் கொள்ள வசதியாக முழு இன்சுலின் பாட்டில்கள் கட்டணமில்லாமல் வழங்குகின்றது. இதன் மூலம் மாதம்தோறும் 1400 நபர்கள் பயன்பெற்று வருகின்றனர். நோயாளிகளுக்கு அடிப்படை ரத்தப் பரிசோதனைகள் மற்றும் சர்க்கரை நோய் பாதிப்புகளைக் கண்டறியும் உயர்பரிசோதனை முறைகளும் செய்யப்படுகின்றன.
தொடர் ரத்த சர்க்கரை அளவை கண்டறியும் AGP – CGMS (Ambulatory Glucose Profile – Continuous Glucose Monitoring) கருவி நோயாளிகளுக்கு பொருத்தப்படுகின்றது. சர்க்கரை நோயாளிகளுக்கான பிரத்யேக அனுபவமிக்க உணவு ஆலோசகர் மற்றும் யோகா பயிற்றுநர் இந்த துறையில் உள்ளனர். தேசிய அளவில், இந்திய மருத்துவ கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒரே முதுநிலை பட்டய மேற்படிப்பு நம் சென்னை மருத்துவ கல்லூரியில் தான் பயிற்றுவிக்கப்படுகிறது.
இந்த இரண்டாண்டு கால முழுநேர Diploma In Diabetology பட்டமேற்படிப்பில் வருடத்திற்கு 3 மாணவர்கள் என்ற கணக்கில் இதுவரை 75க்கும் மேற்பட்ட நீரிழிவு நோய் வல்லுநர்கள் பட்டம் பெற்று தமிழகம் முழுவதும் சிறப்பான சேவை செய்து வருகின்றனர்.
அரசு ஸ்டான்லி மருத்துவமனை, அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவமனை, கோவை, மதுரை, சேலம் மற்றும் தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளிலும் சர்க்கரை நோய்க்கான உயர்நிலைத் துறை (Institute of Diabetology) அமைக்கப்பட்டு நோயாளிகளுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்படுகின்றது.
ஸ்டான்லி மருத்துவமனையில்
3 மாடியில் தனித்துறை
சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் 7 கோடி ரூபாய் மதிப்பில் 3 மாடிகள் கொண்ட சர்க்கரை நோய்க்கான தனி துறை அமைக்கப்பட்டு விரைவில் திறக்கப்படவுள்ளது.
தமிழக அரசின் தொற்றா நோய்கள் கண்டறியும் திட்டத்தில் ஜூலை 2012 முதல் செப்டம்பர் 2017 வரையிலான காலத்தில் 3 கோடியே 83 லட்சத்து 96 ஆயிரத்து 95 நபர்களுக்கு நீரிழிவுநோய் பரிசோதனை செய்யப்பட்டதில், 16 லட்சத்து 44 ஆயிரத்து 577 நபர்களுக்கு நீரிழிவு நோய் கண்டறியப்பட்டு அவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த வருடம் உலக நீரிழிவுநோய் தினத்தை முன்னிட்டு சென்னை பெருமாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் உள்ள அனைத்து பணியாளர்களுக்கும் சர்க்கரை நோய் மற்றும் ரத்த அழுத்த நோய் கண்டறியும் முகாம் நவம்பர் 9ம் தேதியன்று நடத்தப்பட்டது. நவம்பர் 14ம் தேதியான இன்று மரம் நடும் விழாவும் நீரிழிவுநோய் விழிப்புணர்வு பேரணியும் நடத்தப்பட்டுள்ளது என்றார்.
இந்நிகழ்ச்சியில் மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் எட்வின் ஜோ, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். பல்கலைக் கழக முன்னாள் துணை வேந்தர் டாக்டர் சாந்தாராம், சென்னை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர் நாராயணபாபு, மருத்துவக் கண்காணிப்பாளர் டாக்டர் நாராயணசாமி, நீரிழிவுநோய் உயர்நிலைத் துறை இயக்குநர் டாக்டர் தர்மராஜன் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.