ஆசியான் மாநாட்டில் உலக தலைவர்களை சந்தித்து மோடி பேச்சு

மணிலா,நவ.14–
பிலிப்பைன்ஸ் நாட்டில் நடைபெற்று வரும் ஆசியான் மாநாட்டில் பங்கேற்றுள்ள பிரதமர் மோடி பல்வேறு நாட்டுத் தலைவர்களை  இன்று சந்தித்து பேசினார்.
பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகர் மணிலாவில் ஆசியான் கூட்டமைப்பு நாடுகளின்  31-வது உச்சிமாநாடு நேற்று தொடங்கியது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து  கொண்டார். மாநாட்டில் பங்கேற்க 10-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த  தலைவர்கள் பிலிப்பைன்ஸ் வந்துள்ளனர். நேற்று பிரதமர் மோடி அமெரிக்கா அதிபர் டிரம்பை சந்தித்து பேசினார்.
மாநாட்டு  இடைவேளையின் போது, இருவரும் சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்து  பேச்சுவார்த்தை நடத்தினர். இந்நிலையில், மாநாட்டிற்கிடையே மோடி இன்று பல்வேறு நாட்டுத் தலைவர்களை  சந்தித்து பேசினார். ஆஸ்திரேலியா பிரதமரான மால்கோம் டர்ன்புலை சந்தித்தார்  மோடி. அப்போது இரு நாட்டுத்தலைவர்களும் தங்கள் கருத்துகளை  பரிமாறிக்கொண்டனர்.
பின்னர் பிரதமர் மோடி வியட்நாம் பிரதமர் நிகுயென் சூவான் புக்கை சந்தித்து  இந்தியா–-வியட்நாம் உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பின்  ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபேயை சந்தித்து பேசினார். அந்த சந்திப்பு மிகவும்  சிறப்பாக அமைந்ததாக மோடி தெரிவித்தார். இரு நாடுகளுக்கிடையேயான நட்புறவை  வளர்ப்பது குறித்து பேசியதாகவும் அவர் கூறினார்.
இதையடுத்து, மோடி மிக முக்கிய நண்பரான புரூனே சுல்தான் ஹசனல் போல்கியாவை  சந்தித்து பேசினார். பின் நியூசிலாந்து நாட்டு பிரதமர் ஜெசிந்தா  ஆண்டர்னையும் சந்தித்து பேசினார் நரேந்திர மோடி.  அனைவரும் மாநாட்டில்  பங்கேற்றனர்.