அமெரிக்காவில் படிக்கும் இந்திய மாணவர்களால் ரூ.43 ஆயிரம் கோடி வருவாய்

வாஷிங்டன்,நவ.14–
இந்திய மாணவர்கள் மூலம் அமெரிக்காவுக்கு கடந்தாண்டில் 43 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.
அமெரிக்காவின் சர்வதேச கல்வி மையம் 2016–-17 கல்வியாண்டுக்கான அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:–
அமெரிக்காவில் உள்ள கல்வி நிறுவனங்களில் 10.8 லட்சம் வெளிநாட்டு மாணவர்கள் படிக்கின்றனர். தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டியுள்ளது. இதில் 3.50 லட்சம் பேருடன் சீனா முதலிடத்தில் உள்ளது. கடந்த ஆண்டைவிட இந்தாண்டில் சீன மாணவர்களின் எண்ணிக்கை 6.8 சதவீதம் உயர்ந்துள்ளது.
இந்தியா 2வது இடம்
அதிக மாணவர்கள் பட்டியலில் 1.86 லட்சம் பேருடன் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. முந்தைய ஆண்டை விட 12.3 சதவீதம் கூடுதல் மாணவர்கள் வந்துள்ளனர். மொத்த வெளிநாட்டு மாணவர்களில் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 17.3 சதவீதமாகும். கடந்த நிதியாண்டில் இந்திய மாணவர்கள் மூலம் 43 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது.
இந்திய மாணவர்களில் 56.3 சதவீதம் பேர் பட்டப் படிப்பை படிப்பதற்காகவே அமெரிக்கா வருகின்றனர். வெளிநாடுகளுக்கு சென்று படிக்கும் அமெரிக்க மாணவர்கள் பிரிட்டன், இத்தாலி, ஸ்பெயின் நாடுகளை அதிகம் விரும்புகின்றனர். இந்தப் பட்டியலில், இந்தியா 15வது இடத்தில் உள்ளது. கடந்த கல்வியாண்டில் இந்தியாவில் படிக்கும் அமெரிக்க மாணவர்களின் எண்ணிக்கை 4,438ல் இருந்து, 4,181ஆகக் குறைந்தது.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.