தேசிய கேரம் போட்டியில் மதுரை மாணவிகள் தேர்வு

மதுரை,நவ.12–
தேசிய அளவிலான கேரம் போட்டியில் சி.இ.ஓ.ஏ பள்ளி மாணவிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்திய பள்ளிகள் விளையாட்டு குழுமம் சார்பாக தமிழக அணிக்காக கேரம் விளையாட்டு வீராங்கனைகளை தேர்வு செய்யும் போட்டி முதலில் மண்டல அளவில் நடைபெற்றது.
பின்னர் மாநில அளவிலான தேர்வு போட்டி கடந்த 6,7–ந் தேதிகளில் வாடிப்பட்டி தாய் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
தமிழகத்தில் இருந்து மண்டல அளவில் தேர்வு பெற்ற மாணவிகள் பங்கேற்றனர். 17 வயதிற்குட்பட்ட மாணவியர் பிரிவில் சி.இ.ஓ.ஏ பள்ளி மாணவி ஏ.ரித்திகா முதலிடம் பெற்று தமிழக அணிக்கு தேசிய அளவிலான போட்டிகளில் பங்கு பெற தகுதி பெற்றார்.
மேலும் இம்மாணவி சென்றாண்டு இப்போட்டியில் பங்கு பெற்று தேசிய சாம்பியன் பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. பத்தொன்பது வயதிற்குட்பட்ட மாணவியர் பிரிவில் கே.சுருதி என்கிற மாணவி தமிழக அணிக்காக தேசிய அளவிலான போட்டிகளில் விளையாட தகுதி பெற்றார்.
மாணவிகளை பள்ளித்தலைவர் எம் ராசா கிளைமாக்சு, இணைத்தலைவர் இ.சாமி, துணைத்தலைவர் ஆ. பாக்கியநாதன், இயக்குநர்கள் எம்.விக்டர்தன்ராஜ், சௌந்திரபாண்டி, அசோகராஜ் மற்றும் பள்ளி முதல்வர்கள் ஹேமா ஆட்ரே, நசீம் பானு ஆகியோர் வாழ்த்தி பாராட்டினர்.