தலை சீவி விடுங்க ….

சங்கீதா சுற்றும் முற்றும் பார்த்தபடியே இருந்தாள். தலை முடியை அள்ளி முடிந்திருந்தாள். கையில் சீப்பு இருந்தது.
“ச்சே … அம்மாவ இன்னும் காணாமே . அவள் உதடுகள் அனிச்சையாகவே பேசிக் கொண்டன
என்ன சங்கீதா ஸ்கூலுக்கு போகலியா?
போகனும் மாமா
அப்புறம் ஏன் இன்னும் நின்னுட்டு இருக்க
“ம் … தல சீவலயில்ல . அம்மா வரணும் அதுக்குதான்
” ஆமா”
“அம்மா எப்ப வரும் ?
” எப்பவும் காலையில வந்து எனக்கு தலசீவி விட்டுட்டு தான் கடைக்குபோகும். இன்னைக்கு ஆளக் காணாம்”
“மழ பேயுதுல்ல. அதுனால கூட இருக்கலாம்ல
“ஆமா …. ரோட்டுல காய்கறி வித்திட்டு இருக்க. இதுல எங்க ஏவாரம்ருக்கு. மழைக்கு ஒதுங்கி நின்னுருக்கும். இல்ல ஏவாரம் அதிகமாயிருச்சா?
தெரியலையே
நீயா சீவமுடியாதா சங்கீதா
ம்ஹுகும் முடி ரொம்ப நீளமா இருக்குல்ல. என்னால சிக்கெடுத்து சீவ முடியாது மாமா
பெறகு எப்படி டைம் ஆகிக்கிட்டே இருக்கே .தூறல் வேற போடுது
எனக்கும் தல சீவத் தெரியாதே
ஆமா மாமா இப்ப என்ன பண்றதுன்னு தெரியலையே
வேற யார்டயாவது சொல்லி தலசீவச் சொல்லு சங்கீதா
சரி மாமா
சங்கர் சொல்லி விட்டுச் சென்றான்.
கையில் சீப்புடன் அம்மா வரும் வழியைப் பார்த்தபடியே நின்றிருந்தாள் சங்கீதா. அவள் வருவதாகத் தெரியவில்லை.
மழைக்கு குடைபிடித்துப் போன ஒரு பெண்ணைக் கூப்பிட்டாள்.
அக்கா
என்னம்மா
தலை சீவி விடுக்கா? கெஞ்சும் தொனியில் கேட்டாள்.
ஸாரிப்பா … எனக்கு வேலையிருக்குன்னு சொல்லிவிட்டு அந்தப் பெண் நகர்ந்தாள்.
சொட் சொட்… சொட்டென் சொட்டிக் கொண்டிருந்தது தூறல்.
ஐயய்யோ …. டைம் ஆயிருச்சே . ஸ்கூலுக்கு லேட்டா போனா திட்டுவாங்களே
சங்கீதா உள்ளுக்குள் பொருமியெபடியே நின்றிருந்தாள்.
ச்சே ஏன்தான் இவ்வளவு முடிய வளத்தமோ பேசாம கிராப்பு வெட்டியிருக்கலாம்.  இந்த ஆம்பளப்பயன பாடு தான் சூப்பர்.  தல சீவ வேண்டியதில்ல ;பூ வைக்க வேண்டியதில்ல ;படுத்து எந்திரிச்சு பல்லு வௌக்காம ஓடிப் போயிரலாம். பொம்பளைங்கபாடு தான் பெரும்பாடா இருக்கு
கையில் சீப்பை வைத்துக்கொண்டு பெரிய மனிதர் போல புலம்பியபடியே வீதி பார்த்தாள்.
அம்மா வருவதாகத் தெரியவில்லை
இந்த அம்மாவுக்கு என்னாச்சு?
தெனம் வந்து தல சீவிவிட்டுட்டுத்தான் போகும் . இன்னைக்கு என்னவாம்?
சீப்பைத் தலையில சொருக்கியபடியே அவளாய்ப் பேசினாள்.
டைம் ஆகிட்டே இருக்கே
மழையில் இறங்கி ஓடிப்போய் எதிர் விட்டின் கதவு தட்டினாள்.
அக்கா அக்கா எனக்கு தல வாரிவிடுக்கா அக்கா …. அக்கா… எதிர்த்த வீட்டுப் பெண் சடாரென கதவு திறந்தாள்.
என்ன சங்கீதா
அந்தக் கடையில இருந்துஅம்மா வரல .ஸ்கூலுக்கு டைம் ஆயிருச்சு.  தல சீவி விடுக்கா. கெஞ்சினாள்.
ஐயய்யோ சங்கீதா ஸாரிப்பா
மாமா ஆபிஸ் கௌம்பிட்டு இருக்காங்க. டிபன் பண்ணிட்டு இருக்கேன். பக்கத்து வீட்டு ஆன்டிட்ட கேக்குறியா?
சரிக்கா பக்கத்து வீட்டுக்கு ஓடினாள்.
‘‘ஆண்டி …. ஆண்டி… எனக்கு தல சீவி விடுங்க ஆண்டி’’ கதவுதட்டிக் கொண்டே பேசினாள்.
யாரு சங்கீதாவா?
என்ன சங்கீதா
ஆண்டி எனக்கு தலசீவி விடுங்க ஆண்டி. ஸ்கூலுக்கு போகணும் ;அம்மா வரல ;ஸ்கூலுக்கு லேட்டா போகக்கூடாது ஆண்டி
ஐயய்யோ ஸாரி சங்கீதா
ஆண்டியோட கையப்பாரு
என அவள் கையைத் தூக்கிக் காட்டினாள் . அந்தப் பெண் கைகளில் மருதாணி வைத்திருந்தாள்.
ஓ.கே ஆண்டி
சங்கீதா பக்கத்து வீட்டுல கேளு
சரிங்க ஆண்டி கையில் சீப்பைப் பிடித்துக் கொண்டு பக்கத்து வீட்டுக் கதவைத் தட்டினாள்.
அக்கா ….அக்கா … தல சீவி விடுக்கா. ஸ்கூலுக்கு டைம் ஆச்சுக்கா .தல சீவி விடுக்கா
யாரு சங்கீதாவா?
ஆமாக்க கடையில இருந்து அம்மா வரல . தல சீவ முடியல. சீவி விடுங்கக்கா .ஸ்கூலுக்கு டைம் ஆயிருச்சு
சங்கீதா ஸாரிடி எங்கையில நேத்து வெட்டுப்பட்டுருச்சு . என்னால முடிய பிடிச்சு சீவ முடியாது .வேற யார்டயாவது கேளும்மா
சரிக்கா மீண்டும் சீப்பைப் பிடித்துக் கொண்டு ஓடினாள்.
அம்மா வந்துச்சுன்னா நம்மயார்டயும் இப்படி செஞ்சனும்னு அவசியமில்ல .அம்மா எங்க போனே. சீப்பைப்பிடித்துக் கொண்டு வீட்டிற்கே திரும்பி வந்தாள்.
ம்ம்ம்….. அவள் தன்னிச்சையாகவே அழ ஆரம்பித்தாள்.
“ஏன் அழுகுறா?
“ஸ்கூலுக்கு போகலையா? கேட்டாள் ஒரு பிச்சைக்காரி
“தல சீவல அம்மா வரல”
“ம்ம்ம்…. தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தாள். இதுக்கு போயா அழுகுறது. வா இப்படி கொண்டா சீப்ப.  சீப்பை வாங்கிய பிச்சைக்காரி சங்கீதாவின் தலையைச் சீவ ஆரம்பித்தாள். மழை சொட்… சொட் சொட்டெனபொழிய ஆரம்பித்தது
அவளுக்கு தலை சீவ முடியாது என்று சொன்ன பெண்கள் எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்
பிச்சைக்காரி சங்கீதாவிற்கு நேர்வகிடு எடுத்து அழகாக தலை சீவிவிட்டுக் கொண்டிருந்தாள்……

ராஜா செல்லமுத்து