கம்பு, வரகு, தினை, சோளம், கோதுமையை மூலப் பொருளாக்கி ‘அணில்’ சேமியா:

திண்டுக்கல், நவ.11–
ரசாயனக் கலவைப் பொருள்கள் கலந்திருக்கும் பாஸ்ட்புட் உணவில் மயங்கும் சிறுவர், சிறுமிகள் – பெரியவர்ளைக் கவர்வதற்காகவே கம்பு, வரகு, தினை, சோளம், கோதுமை மூலப்பொருளாக்கி அணில் சேமியாவை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் கமலஹாசன்.
இந்த அணில் உணவு வகைகளின் விளம்பர தூதுவராக நடிகர் விஜய்சேபதி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் அணில் சேமியா படத்தில் நடித்ததன் மூலம் வந்த பணத்தில் ஒரு பகுதியை அதாவது ரூ.50 லட்சத்தை அரியலூர் மாவட்ட சிறுவர் – சிறுமிகள் கல்வி வளர்ச்சிக்காக வழங்குவதாக அறிவித்துள்ளார்.
திண்டுக்கல்லில் உள்ள அணில் நிறுவனம், சேமியா தயாரிப்பில் முன்னணியில் உள்ளது. இதுவரை டாப் அணில் மார்க்கெட்டிங் நிறுவனம் என்ற பெயரில் செயல்பட்டு வந்த இந்த நிறுவனம், தற்போது புதுப்பொலிவுடன், புதுச்சுவையுடன், பாரம்பரியம் மாறாமல், ‘அணில் ஃபுட்ஸ்’ என்று கம்பு, வரகு, தினை, சோளம் போன்ற சேமியாவை குழந்தைகளை கவரும் சுவையில் அறிமுகம் செய்துள்ளது என்று இதன் நிர்வாக இயக்குநர் கமலஹாசன் தெரிவித்தார்.
திண்டுக்கல்லில் நடைபெற்ற விழாவில், அணில் நிறுவனத்தின் புதிய சிறுதானிய சேமியா வகைகளை நடிகர், விஜய்சேதுபதி அறிமுகம் செய்துவைத்தார்.
உடல் நலம் பாதிக்காது
கம்பு, வரகு, தினை, சோளம், கோதுமை ஆகிய சிறுதானியங்களை மூலப்பொருளாகக் கொண்டு இந்தச் சேமியா வகைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொன்றும் புதுச்சுவையுடன், தயாரிக்கப்பட்டுள்ளது. தரம், ஆரோக்கியம், சுவை ஆகியவற்றை மையமாக வைத்து மக்கள் நலனுக்காக இந்தச் சிறுதானிய சேமியாக்களை அணில் நிறுவனம் வெளியிட்டுள்ளது
”துரித உணவுகள் பிரபலம் அடைந்துள்ளதால், அதில் உள்ள ஈர்க்கும் வேதியியல் சுவைக்கு மயங்கும் குழந்தைகள், பெரியவர்கள் என அனைவருக்கும் உடல் நலம் பாதிக்கப்படுகிறது. இதனால், மக்களின் நலனுக்காக, குழந்தைகளுக்கும் பிடிக்கும் சுவையில், ஆரோக்கியமான முறையில், தரமான, உணவுகளைத் தயாரிக்க வேண்டும் என்று திட்டமிட்டு இந்தப் புதிய சிறுதானிய சேமியா வகைகளை அறிமுகப்படுத்தியிருக்கிறோம்” என கமலஹாசன் தெரிவித்தார்.
நிறுவனத்தின் செயல் இயக்குனரான சுகுமாரன் ‘’எளிதாகச் சமைக்கக்கூடிய வகையிலும், அதேசமயம் காலை உணவு ஆரோக்கியம் நிறைந்ததாக இருக்கவேண்டும் என்றும் இந்தச்சேமியா வகைகளைத் தயாரித்துள்ளோம். இதில் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் எந்த வேதிக்கலப்பும் இல்லாத தரமான சேமியாவாகத் தயாரிக்கப்பட்டுள்ளது. இதை உண்போரின் உடல் நலமும் ஆரோக்கியமாகும்” எனஅறிவித்தார்.
சிறுவர்கள் கல்விக்கு
ரூ.50 லட்சம் நிதி உதவி
அணில் உணவு வகைகளின் விளம்பரத்தூதுவராக நடிகர், விஜய்சேதுபதி ஓப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். புதிய ரகங்களை அறிமுகப்படுத்திய பின்னர் விஜய்சேதுபதி பேசியதாவது:–
அணில் உணவு வகைகளின் விளம்பரத்தில் நடித்துள்ளேன். இந்த விளம்பரப்படத்தில் நடித்ததற்காக எனக்கு கிடைத்துள்ள தொகையில், ஒரு பகுதியை கல்வி உதவித் தொகையாக வழங்க முடிவு செய்துள்ளேன்.
கல்வியில் பின் தங்கிய மாவட்டமாக அரியலூர் இருக்கிறது. இந்த மாவட்டத்தில் மொத்த முள்ள 774 அங்கன்வாடிகளுக்கு தலா 5000 ரூபாய் வீதம் முப்பத்து எட்டு லட்சத்து எழுபது ஆயிரம் (38,70,000) ரூபாயும், தமிழ் நாட்டில் உள்ள 10 அரசு பார்வையற்றோர் பள்ளிகளுக்கு தலா -ஐம்பதாயிரம் வீதம் ஐந்து லட்சம் (5,00,000) ரூபாயும், மேலும் 11 அரசு – செவித்திறன் குறைந்தோர் பள்ளிகளுக்கு தலா ரூபாய் ஐம்பதாயிரம் வீதம் 5 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயும் மொத்தம் 49 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் தமிழக அரசிடம் வழங்க முடிவு செய்துள்ளேன்.
கல்வியில் பின் தங்கிய மாவட்டமான அரியலூரில் இருந்து அதிக மதிப்பெண் எடுத்து டாக்டராக ஆசைப்பட்டு, அது முடியாமல் உயிர் நீத்த அனிதாவின் நினைவாக இந்தத் தொகையை வழங்குகிறேன்’.
இவ்வாறு அவர் பேசினார்.
அணில் சிறு தானிய சேமியாவை இதன் விளம்பர தூதர் நடிகர் விஜய்சேதுபதி அறிமுகம் செய்தார். நிர்வாக இயக்குநர் கமலஹாசன், செயல் இயக்குநர் சுகுமாறன், டைரக்டர் ரவிச்சந்திரன் ஆகியோர்  உடன் உள்ளனர்.