ஓல்டு இஸ் கோல்டு

மறுநாள் ஞாயிற்றுகிழமை அலுவலகத்திற்கு விடுமுறை என்பதால் சனிக்கிழமை இரவு வீட்டு வேலையை முடித்துவிட்டு தன் செல்போனில் உள்ள வாட்ஸ் அப், பேஸ் புக்கில் வந்த தகவல்களை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்தார் கோமதி.
அவரது கணவர் ராஜேந்திரன் டி.வி.யில் நியூஸ் பார்த்துக் கொண்டிருந்தார்.
செல்போனை பார்த்துக் கொண்டிருந்த கோமதி திடீரென சிரிக்கத் தொடங்கினார்.
ராஜேந்திரனுக்கு ஒண்ணும் புரியவில்லை… கோமதியை பார்த்தார்….
என்னங்க வாட்ஸ் அப், பேஸ் புக் எல்லாத்துலயும் வர தகவலை பார்த்தா அதிர்ச்சியா இருக்கு… இல்லான்னா ஆச்சரியமா இருக்கு பார்தேங்களா…
இங்க பாருங்க… இந்த காலத்து பசங்க சும்மா… கலக்கு கலக்குன்னு கலக்கிக்கிட்டு இருங்காங்க.
அரசியல்வாதிகளை வச்சு காமடி பன்னியிருக்காங்களே அதை நினைச்சா சிரிப்பு தாங்க வருது…
கொஞ்சம் இதை பாருங்களேன்னு தனது செல்போனை ராஜேந்திரனிடம் நீட்டினார் கோமதி.
வேணாம்… வேணாம்… உன் செல்போனை நீயே வச்சுக்கோ.
காலையிலிருந்து ஒரே விஷயம் தான் மாறி மாறி வருது…
ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு குரூப்பை தொடங்கி தகவலை சும்மா மாறி மாறி அனுப்பிக்கிட்டே இருக்காங்க.
அட செல்போனை எடுத்து நெட்டை ஆன் செய்தாலே போதும், டொய்ங், டொய்ங்குன்னு சவுண்ட் வந்துக்கிட்டே இருக்கு… காலையில் எழுந்து அலுவலகத்துக்கு போயிட்டு திரும்ப வீட்க்கு வந்து படுத்து தூங்கிற வரைக்கு ஒருத்தரு மாத்தி ஒருத்தரு வாட்ஸ் அப்பிலும் பேஸ் புக்கிலும் தகவலை அனுப்பிக்கிட்டே தான் இருக்காங்கா. இதுக்கு எல்லாம் அவங்களுக்கு எங்க தான் நேரம் இருக்கும்ன்னு எனக்கு தெரியலை.
அதை எடுத்து பார்க்கிறதும் அதை மற்றொரு குரூப்க்கு அனுப்புற வேலையையும் பாதி பேரு செய்துக்கிட்டு இருக்காங்க.
அதை பார்த்துக்கிட்டு இருந்தா நம்ம வேலையே ஓடாது. சீக்கிரம் செல்போனை வைச்சிட்டு வந்து படுத்து தூங்கு என்றார் ராஜேந்திரன்.
என்னங்க எவ்வளவு மேட்டர் வந்தா என்ன… நமக்கு எது தேவையோ அதை மட்டும் பார்த்துட்டு, மற்றதை விட்டுவிட வேண்டியதுதானே என்றார் கோமதி.
அம்மா தாயே கொஞ்சம் செல்போனை கீழே வச்சுட்டு படுத்து தூங்கிறேயே… நாளைக்கு ஒரு நாள் தான் லீவு கொஞ்சம் நல்லா தூங்கலாம்னு நினைக்கிறேன் நீ என்னடானா… நொய் நொய்ன்னு இருக்க.
ஏங்க… நாளைக்கு தான் லீவு தானே… இன்னைக்கு ஒரு நாள் தான் கொஞ்சம் லேட்டா படுத்து தூங்கினா என்ன…
இதை பாருங்க எவ்வளவு நல்ல விஷயம் வருது தெரியுமா…
உடல் ஆரோக்கியம் சம்பந்தமான நிறைய தகவல் தான் வந்துக்கிட்டு இருக்கு. உங்க வாட்ஸ் அப்பில் பார்க்கிறீங்களா என்றார் கோமதி.
அட உன் பையன் உனக்கு ஆன்ட்ராய்ட் போன் வாங்கிக் கொடுத்தாலும் கொடுத்தான், அதில் வாட்ஸ் அப், பேஸ் புக்குன்னு நவீன தொழில் நுட்பத்தை உன் கையில் வைத்துக்கிட்டு 50 வயசுலேயும் நீ யூத் மாதிரி பேசிக்கிட்டு இருக்க.
சரி நான் சொல்றத கேளு… உன் வாட்ஸ் அப்பில் வரும் தகவலில் உடல் ஆரோக்கியத்துக்கு வர தகவலை எல்லாம் பார்க்கிறேயே… அது எல்லாம் என்ன சொல்லுது…
நம்முடைய முன்னோர்கள் கடைபிடித்து வந்த பழக்க வழக்கத்தையும் அவர்களுடைய உணவு வகைகளையும் தான் புதுசு புதுசா சொல்லுது என்றார் ராஜேந்திரன்
ஆமாங்க நீங்க சொல்றது சரிதான். எல்லாம் பழைய விஷயம் தான் என்றார் கோமதி
ஒவ்வொரு நோய்க்கும் உள்ள மூலிகை செடிகளும் மருத்துவ குணம் உள்ள காய்கறிகள், பழங்கள் எல்லாத்தையும் பட்டியல் போட்டு தகவல் வருது. இது எல்லாம் நம்முடைய முன்னோர்கள் கடைபிடித்து வந்தவை.
இதை தான் சின்ன வயதில் நாம நம்ம வீட்டில் சாதாரணமா சாப்பிட்டு வந்தோம்.
கால மாற்றம் ஏற்பட… ஏற்பட நவீன மயம் என்று சொல்லிக்கொண்டு புதுபுது உணவு வகைகளையும் சாப்பிட ஆரம்பிச்சு பழமையான உணவு முறைகளை ஒதுக்கி வைக்க ஆரம்பிச்சோம்.
அதன் விளைவு என்ன ஆச்சு… புது புது வியாதிகள் வர ஆரம்பிடுச்சு… அதுக்கு புது புது மருத்துவமுறைகள் வந்து மக்களுடைய ஆயுட்காலம் குறைந்துகிட்டே வருது.
இப்ப நவீன மயத்திலிருந்து மீண்டும் பழைய முறைக்கே மக்கள் வரத் தொடங்கிட்டாங்க.
அதனால் தான் பேஸ் புக், வாட்ஸ் அப்பில் எல்லாம் இயற்கை மருத்துவத்தை பற்றி நிறைய தகவல்கள் வர ஆரம்பிக்குது.
நம்முடைய பழைய உணவு வகைகளுகம் பழக்க வழக்களும் என்றுமே சிறந்தது தான். அது தான் ஓல்டு இஸ் கோல்டுன்னு சொல்லுவாங்க தெரியுமா என்றார் ராஜேந்திரன்.
ஆமாங்க நீங்க சொல்றது நூத்துக்கு நூறு உண்மை தான்.
டிபார்ட்மெண்டல் ஷோரூமில் விதவிதமான உணவுவகைகளை வாங்கி சாப்பிட்ட மக்கள் இப்ப எங்க பார்த்தாலும் ஆர்கானிக் காய்கறிக்கு மாறிக்கிட்டே வருகிறார்கள்.
மக்களுடைய தேவையை புரிந்துகொண்டு இப்ப எங்க பார்த்தாலும் ஆர்க்கானிக் உணவு கடைகளும் புதுசு புதுசா வந்துக்கிட்டு இருக்கு.
அதைவிட லேட்டஸ்டா இப்பா எங்க பார்த்தாலும் மரச்செக்கு எண்ணை கடை திறக்கிறாங்க பாத்தியா? கோமதி.
ஆமாங்க நானும் உங்ககிட்ட கேட்கணும்னு நினைச்சேன்.
வாட்ஸ் அப்பிலும் தகவல் வந்துக்கிட்டே இருக்கு. மரச்செக்கு கடலை எண்ணை, நல்ல எண்ணை உடலுக்கு மிகவும் நல்லதுன்னு சொல்றாங்க அதுவும் நம்ம பழைய உணவு வகை தானே என்றார் கோமதி.
உடனே ராஜேந்திரன்…
கோமதி நம்ம சின்ன வயதில் நம்ம வீட்டில் சமையலுக்கு கடலை எண்ணையும் நல்ல எண்ணையும் தான் பயன்படுத்தி வந்தாங்க.
அப்புறம் பாமாயில், சூரியகாந்தி எண்ணை, ஆலிவ் ஆயில்ன்னு விதவிதமான எண்ணைகள் வரத் தொடங்கியதும் மக்கள் நம்முடைய பாரம்பரிய எண்ணைகளை வாங்குவதை நிறுத்திட்டு புதுசுக்கு மாறிட்டாங்க.
இப்ப என்னாச்சு…. இருதய நோய்க்கு முக்கிய காரணமே நாம பயன்படுத்தும் எண்ணை தானாம்,
கடலை எண்ணையும் நல்ல எண்ணையும் தேங்காய் எண்ணையும் தான் உடலுக்கு நல்லதுன்னு சொல்றாங்க
அது தான் மீண்டும் பழைய நிலைக்கே மாற தொடங்கிட்டாங்க.
அதனால் தான் நம்முடைய பழைய முறையான நாட்டுக் செக்கு கடலை எண்ணையும் நல்ல எண்ணையையும் மக்கள் பயன்படுத்த தொடங்கிட்டாங்க.
அதற்கு ஏற்ப இப்ப எல்லலா இடத்திலேயும் நாட்டு செக்கு எண்ணை கடை திறக்க ஆரம்பிச்சுட்டாங்க.
இப்பவாவது புரிஞ்சுக்கோ ‘‘ஓல்டு இஸ் கோல்டு’’ தான்.
சரி சரி பேசிக்கிட்டே என் தூக்கத்தையும் கெடுத்துட்ட… போய் தூங்கு என்றார் ராஜேந்திரன்.
இல்லங்க நான் என்ன சொல்ல வறேன்னா…. நாமும்…
புரியுது… புரியது… நாமும் மரச்செக்கு எண்ணை வாங்கலாம்னு தானே சொல்ல வறே….
ஆமங்க…. அதை தான் சொல்ல வந்தேன்….
சரி இப்பவே போய் மரச்செக்கு எண்ணை வாங்கிட்டு வறேன் என்று கூறிய ராஜேந்திரன் படுக்கையில் துள்ளிக் குதித்து எழுந்து கடைக்குச் சென்றார்.

துரை.சக்திவேல்