குருவிகள்

கீச்…. கீச் செனக் கூண்டிலிருந்து கத்திக் கொண்டிருந்தன கலர்கலரான குருவிகள்.
கவிதா, கவிதா உரக்கக் கூப்பிட்டான் ராம்.
” சொல்லுங்க”
“இந்த குருவிகளயெல்லாம் ஏன் இப்படி அடச்சு வச்சுருக்கீங்க?
“ம் ஓடிப்போயிரும்ல. அதுக்கு தான்”
“காமெடியா?
“அப்புறம் என்ன ராம். இப்படியொரு கேள்வி கேக்குறீங்க?
“இல்லங்க பறவைகளுக்கு கடவுள் றெக்கைய படச்சதே அது நாலா புறமும் பறந்து விளையாட ஓடத்தான். அதுலயும் அது தன்னோட சொந்த உழைப்பில சாப்பிடணும்னு தான் கடவுள் அதுகளுக்கு றெக்கைகள படச்சிருக்கான். நீ என்னடான்னா அத சுதந்திரமா பறக்க விடாம கூண்டு போட்டு அடச்சு வச்சுருக்க . தெறந்துவிடு றெக்கை விரிச்சு பறந்து போகட்டும்”
ஐயே … நீ என்ன இப்படி இருக்க?
இதென்ன சும்மா கெடக்கிற குருவின்னு நெனைச்சியா. எல்லாம் பணம் குடுத்து வாங்கிட்டு வந்தது ;அதுலயும் இத மெய்ன்டெய்ன் பண்ண தெனமும் எறநூறு முன்னூறு ரூவா செலவாகுது . இதப்போயி சாதாரணமா தொறந்து விடச்சொல்ற கவிதா கொஞ்சம் கடுமையான குரலில் பேசினாள். ஒன்னைய இப்படி ஒரு ரூம்ல அடச்சு வச்சு சோறு போட்டா நீ வீட்டுக்குள்ளயே கெடப்பயா?
ம் என்ன கிண்டலா?
பெறகு எப்படி நீ இவ்வளவு குருவிகளையும் அடச்சு வைக்கலாம்.
ஐயய்யோ ஒனக்கு என்ன வேணும்?
எனக்கு ஒண்ணும் வேணாம். வீட்டுக்கு பக்கத்தில் இருக்கிறதுனால குருவியெல்லாம் சும்மா கொய்யி முய்யின்னு கத்தி குடியக் கெடுக்குது . நிம்மதியா படிக்க முடியல . எழுத முடியல. அத விட ஒரு முக்கியமான விசயம் இப்பிடி வாயில்லா சீவன அடச்சு வச்சுருக்கிறது பெரிய பாவம் .மொதல்ல அத தொறந்து விடு
ம்ஹுகும் முடியவே முடியாது.
நீ சொன்னா கேக்க மாட்டயில
“ஆமா”
“கவிதா…”
“சொல்லுங்க”
இப்ப எங்கயாவது சிட்டுக் குருவி இருக்கிறத பாத்திருக்கிறயா?
“ம்ஹுகும்”
அதுக்கு என்ன காரணம்னு தெரியுமா?
தெரியலையே “
” நல்லா வியாக்கியாணம் பேசு
விஞ்ஞானத்த பத்தி தெரிஞ்சுக்கிறாத. ஏப்பா ராமு, குருவிய பத்தி பேசும் போது என்னைய ஏன் இப்படி கொற சொல்லற?
குருவிகள நீ தான செற பிடிச்சு வச்சுருக்க?
ஓ.கே?
சினிமா படத்தில குருவி நாய், பூனைன்னு எதக் காட்டுனாலும் ஒடனே புளு கிராஸ்ல சர்டிபிகேட் வாங்க
சொல்றாங்க.ஒங்கள மாதிரி ஆளுங்க நெறயப் பேரு பூனை, நாய், குருவின்னு வீட்டுல வச்சு வளர்ப்பு பிராணிங்கிற பேர்ல டார்ச்சர் பண்றீங்க’’
ராமு என்ன விட்டா பேசிட்டே இருப்பீங்க போல ,
உண்மைய சொன்னேங்க,
எதுங்க உண்மை. எவ்வளவு காசு செலவு பண்ணி இந்த குருவிகள நான் வளக்குறேன்னு தெரியுமா?
அது சரிங்க நீங்க சொல்றத நான் மறுக்கல . ஆனா குருவி வந்து ஒங்க கிட்ட கேட்டுச்சா என்னைய இப்படி கூண்டுக்குள்ள வச்சு வளங்கன்னு. நீங்களா அத செறயில புடுச்சு அடச்சு வச்சுட்டு நெறயாப் பேசுறீங்க?
என்ன ராமு மெரட்டுறியா?
” இல்லையே”
“கவிதா…”
“சொல்லுங்க”
“குருவிக…..” என இழுத்தான்,
“ஹலோ ராம்,
“ம்”
“இது வெறும் குருவிகள்னு நெனைக்காதீங்க
அப்புறம்…
இதெல்லாம் என்னோட பிரண்ட்ஸ்
” வாட்”
எஸ் ராமு
என்னோட லவ் பெயிலியர் பீலிங். சந்தோசம், தூக்கம், சிரிப்பு எல்லாத்தையும் இந்த குருவிக் கிட்ட தான்
பேசுறேன் ;பகுந்துக்கிறேன் ;இதுகள கூண்டுல இருக்கிற குருவிகளா நெனைக்காத என்னோட நெஞ்சுக் கூட்டுக்குள்ள இருக்கிற உணர்வுகளோட உருவம்னு நெனைச்சுக்க. வேலைக்கு போய்ட்டு வீடு திரும்புனா எனக்கு என்னமோ மாதிரி இருக்கும் . மனசு கெடந்து அடிச்சிக்கிரும். பழைய ஞாபகம் என்னை புடுங்கித் திண்ணும் கீச் கீச் கீச்சின்னு ஏதோ புரியாத மொழியில பேசுற இந்த குருவிகள பாக்கும் போதும் அதுக கூட பேசும் போதும் என்னோட மனப் பாரமெல்லாம் அப்படியே எறங்கிரும் தெரியுமா? அதுக்குத்தான் இந்த குருவிகள நான் வளர்க்குறேன்.
மத்தபடி எனக்கும் மனசிருக்கு. வாயில்லா இந்த ஜீவனுகள இப்பிடி கூண்டுல போட்டு வளக்கணும்னு அவசியமே இல்ல. ராம் நம்ம கூட பேசுற மனுசன்க தான் நம்மள பேசிப் பேசியே கவுத்திட்டு போயிருறானுங்க . ஆனா இந்த ஜீவன்க நம்மள ஏதும் செய்றதில்ல . ஏமாத்துறதில்ல மனுசனுகள நம்புறதவிட இந்த குருவிக நமக்கு எவ்வளவோ நல்லது பண்ணுது ராமு.
என கண்களில் கண்ணீர் வழியச் சொன்னாள் கவிதா.
ஐயய்யோ இந்த கூண்டுக் குருவிக்களுக்குள்ள இவ்வளவு பெரிய தத்துவம் இருக்கா?
ஆமா ராமு எதையும் எட்டி நின்னு பாத்திட்டு இது எதுக்குன்னு நெனைக்காத கேள்விகள கேக்காத அவங்கவங்களுக்குத்தான் அதோட அரும தெரியும் சரியா? என கவிதா சொன்ன போது ராமுவின் முகம் மலர்ச்சியில் திளைத்தது.
என்ன ராமு என்னைய திட்டுவீங்கன்னு பாத்தா இவ்வளவு சந்தோசமா இருக்கீங்க.
பெறகு நீங்க தான் என்னோட அறிவுக் கண்ண தெறந்து விட்டீங்களே.
எப்பிடி? ஆச்சர்யம் அடைந்தாள் கவிதா.
மறுநாள் காலையில் ராமுவின் வீட்டிலும் கூண்டுக் குருவிகள் கத்திக் கொண்டிருந்தன.
என்ன ராமு என்னைய திட்டிட்டு இப்ப நீங்களே குருவிய கூண்டுல அடச்சு வச்சுருக்கீங்களே.
ஒங்களுக்கு மட்டும் தான் காதல் தோல்வி இருக்கா? எனக்கும் இருக்குங்க என்றபோது இரண்டு வீட்டிலும் இருந்து குருவிகள் கீச் கீச் கீச் எனப் பேசிக் கொண்டன .
கவிதாவும் ராமுவும் மவுனமானார்கள்.
அது வெறும் மவுனமல்ல . அவர்கள் ஒருவர் மீது ஒருவர் கொண்ட காதலை வெளிப்படுத்திய மவுனம்….

ராஜா செல்லமுத்து